இலங்கை பிரதான செய்திகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அநீதி இழைத்தது மாஞ்சோலை வைத்தியசாலை?

 விரைந்து தீர்வு காணுமாறு பொது மக்கள் கோரிக்கை – மு தமிழ்ச்செல்வன்..

இறுதி யுத்தத்தின் மிகக் கொடூரமான பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்து முல்லைத்தீவு மக்களுக்கு அந்த மாவட்ட வைத்தியசாலை மிக மோசமான அநீதி இழைத்துள்ளது என மாவட்டச் சமூகம் கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் இடையே ஏற்பட்ட ஈகோ காரணமாக தங்களது கடமைகளின் போது இணைந்து பணியாற்ற தவறியமை, விட்டுக்கொடுப்பின்மை போன்ற காரணங்களால் மக்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு கிளிநொச்சி வவுனியா, யாழ்ப்பாணம் என அலைந்து திரிந்த அவலத்திற்கும் பரிதாபத்திற்கும் பொது மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கின்ற மக்களால் இறைவனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுகின்ற வைத்தியர்கள் இவ்வாறு நடந்துகொண்டமை பொது மக்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியிருந்தது.

ஏற்பட்ட பிரச்சினையை தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொண்டு பொது மக்களுக்கு சீரான சேவையினை வழங்கியிருக்கவேண்டும் ஆனால் வாரக் கணக்கில் தங்களுக்குள் மோதிக்கொண்டு அவற்றை மாவட்டம் மாகாணத்தில் தீர்வுக்காண முடியாது கொழும்பு வரை சென்றமையும் மாகணத்தின் நிர்வாக திறன் பற்றிய கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது

இது தொடர்பில் ஆராய்ந்த போது

நேற்றைய தினம் (17) முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு (மாஞ்சோலை மருத்துவமனை) செல்லும் நோயாளர்கள் கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு அனுப்பப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் வைத்தியர்கள் தங்களுக்குகிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்ககாக கொழுட்புக்கு சென்றுவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த சில மாதங்களாக முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் மத்தியில் நிலவிய உள்ளக முரண்பாடுகள் உரிய காலத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் தீர்த்து வைக்கப்படாத நிலையில், கடந்த மாதத்திலிருந்து குறித்த ஒரு சத்திர சிகிச்சை நிபுணர் மேற்கொள்ளும் சத்திரசிகிச்சைகளுக்கு மயக்க மருந்து வழங்க மாட்டோம் என வைத்தியர்கள் அடம்பிடிக்கும் நிலை தோன்றியுள்ளது.

இறுதியில் இந்த முரண்பாடுகள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் பரிமாறப்பட்டதை அடுத்தும், அரச வைத்தியர்கள் சங்கம் இவ்விடயத்தில் உடன் தீர்வுகாணுமாறு மத்திய சுகாதார அமைச்சினை வேண்டிக் கொண்டமையாலும் நேற்று புதன் கிழமை (17) மாஞ்சோலை வைத்தியர்களது முரண்பாடுகளைத் தீர்க்கும் கலந்துரையாடல் கொழும்பு சுகாதார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனாலும் என்ன தீர்வு என்பது இதுவரை தெரியவில்லை.

இக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்  வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோருடன் மாஞ்சோலை வைத்தியசாலை வைத்தியர்கள் அனைவரும் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் இதனாலேயே மாஞ்சோலை வைத்தியசாலை நேற்று பெரும்பாலான வேகைள் இடம்பெறாது இருந்ததாகவுலும் தெரியவருகிறது. இது தொடர்பிரல் வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டபோதும் அவர்கள் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவியபோது மேற்படி விபரங்களை உறுதிப்படுத்தியதுடன் ‘இது வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் இடையிலான முரண்பாடு என்பதால் இதனை மத்திய சுகாதார அமைச்சே தீர்த்து வைக்க வேண்டும். இந்த விடயத்தில் மாகாண சுகாதர திணைக்களத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை’ என்று உறுதிபடத் தெரிவித்தார்.

ஆனால் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை (மாஞ்சோலை மருத்துவமனை) முற்றிலும் வடக்கு மாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு வைத்தியசாலை. இவ் வைத்தியசாலையில் மருத்துவ ஆளணியினருக்கு இடையில் ஏற்படும் பிணக்குகள் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வல்லமையும் அதிகாரமும் மாகாண சுகாதாரக் கட்டமைப்புக்கு இல்லையா? எனறு மாகாணத்தின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் இளைப்பாறிய மூத்த மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வினவியபோது அவர்கள் அக்கருத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

‘ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தினையும் (Authority to take disciplinary action) தமக்குள்ள நிர்வாக அதிகாரத்தினையும் (Administrative authority) வேறு பிரித்து அறியாது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறான கருத்தினைக் கூறியிருக்கவேண்டும். வைத்தியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் சுகாதார அமைச்சினாலும் பொதுச் சேவைகள் ஆணைக் குழுவினாலும் மேற்கொள்ளப்படுவது உண்மையானதே. அதனை மாகாண மட்டத்தில் மேற்கொள்ள முடியாது. ஆனால் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ ஆளணியினருக்கு இடையில் ஏற்படும் பிணக்குகள் எல்லாவற்றிற்கும் ஒழுக்காற்று நடவடிக்கைள் அவசியமில்லை. பிணக்குகள் ஆரம்பிக்கும்போதே வைத்தியசாலை மட்டத்தில் அதனைத் தீர்த்து வைப்பதற்கு வைத்தியசாலைப் பணிப்பாளருக்கே அதிகாரம் இருக்கிறது. வைத்தியசாலைப் பணிப்பாளர் நிர்வாகக் கற்கை நெறிகளை நிறைவு செய்திருந்தால் பிணக்குகளை முகாமை செய்வது (Conflict management) எப்படி என்ற அறிவு அவருக்கு நிச்சயம் இருக்கும்’ என இளைப்பாறிய சுகாதார சேவை மூத்த அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்

அத்துடன் ‘எந்த ஒரு நிறுவனத்திலும் பணியாளர்கள் மற்றும் அலுவர்கள் மத்தியில் பிணக்குகள் தோன்றுவது சாதாரணமான விடயம். அதனை முன்னரே கண்டறிந்து தீர்த்து வைப்பது அந்த நிறுவனத்தின் மேலாளர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகளது நிர்வாகக் கடமைகளில் ஒன்றாகும். இதற்குச் சுகாதாரத்துறையும் விதிவிலக்கானது அல்ல.’ என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் ‘வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபணர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களிலேதான் நியமனம் பெற்றுப் பணிபுரிகிறார்கள். அவர்களது தனிநபர் கோவை அந்தந்த வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளிலேயே பேணப்படுகின்றன. இவர்களுக்கான வேதனம் மற்றும் படிகள் மாகாண சுகாதார திணைக்களத்தின் ஊடாகவே வழங்கப்படுகின்றன. இந்த வைத்தியர்களும் வைத்திய நிபுணர்களும் தமது தினவரவுப் பதிவேட்டினை தத்தமது நிறுவனத் தலைவர்கள்ஃபணிப்பாளர்களிடம் தான் சமர்ப்பிக்கிறார்களே தவிர சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிப்பதில்லை. இவர்களின் அனேகர் தமது முதலாவது நியமனத்திலே இங்கு வருகிறார்கள். அதாவது அவர்கள் அனேகர் தமது தகுதிகாண் காலப்பகுதியில் இருக்கிறார்கள். இவ்வாறு தகுதிகாண் காலப்பகுதியில் (Probation period)  உள்ள ஒரு அரச அலுவலர் அவர் எந்த நிலை உத்தியோகத்தராயினும் அதாவது வைத்திய அதிகாரி ஆயினும் சேவையில் உறுதிப்படுத்தப்படுவதற்கு அவர்களது நிறுவனத் தலைவர்கள் (Heads of Institutions) பரிந்துரைக்கவேண்டும். இக்காலப்பகுதியில் இவர்களது நடத்தைக் கோலங்கள் சேவை விதிமுறைகளுக்கு அமையக் காணப்படாவிடின் நிறுவனத் தலைவர் ‘இவர்கள் அரச சேவைக்கு ஏற்றவர்கள் இல்லை’ எனப் பரிந்துரைக்க முடியும் இவர்கள் அனைவரினதும் வருடாந்த வேதன உயர்விற்கான (Annual increment)  படிவங்கள் அவர்களது செயற்பாட்டு மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு (Performance appraisal)  பணிப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மாகாண சுகாதார அமைச்சினாலேயே அங்கீகரிக்கப்படுகிறது. இவ்வாறாக மாகாண சுகாதாரத் திணைக்கள நிர்வாகக் கட்டமைப்பானது வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான சகல பிடிமானங்களையும் (அதிகாரங்களையும்) தன்னகத்தே கொண்டிருக்கிறது.’ என விரிவாகக் குறிப்பிட்டனர்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு மாகாண மட்டத்தில் தீர்வுகள் எட்டப்பட்ட முன்னைய உதாரணங்கள் ஏதாவது உள்ளனவா? என அந்த முன்னாள் மாகாண சுகாதர சேவை உயரதிகாரிகளிடம் மேலும் கேட்டதற்கு, ‘கடந்த காலங்களில் வடமாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் தொடர்பான பல பிணக்குகளுக்குத் தீர்வுகள் வைத்தியசாலை மட்டங்களிலும் மாவட்ட மட்டங்களிலும் கூட எட்டப்பட்டுள்ளன. அதற்கும் மேலாக மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அல்லது ஆளுநர் தலையிட்டுத் தீர்வு வழங்கிய சந்தர்ப்பங்கள் சில வடமாகாணத்தில் நடைபெற்றிருக்கிறன. உதாரணமாக கடந்த காலத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களுக்கும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் முன்னாள் ஆளுனரால் தீர்த்து வைக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம்.’

‘மேலும் எமது அறிவுக்கு எட்டிய வரையில் வடமாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்ட வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய சுகாதார அமைச்சு தலையிட்டதோ அல்லது வைத்தியசாலையைச் செயலிழக்கச் செய்துவிட்டு வைத்தியர்கள் தீர்வு தேடிக் கொழும்புக்குச் சென்றதோ இதுவரை காலத்தில் நடந்தது இல்லை.’ என மிகவும் தெளிவாகக் கூறினார்கள். ஆக மொத்தத்தில் சுகாதாரத்துறை தொடர்பில் அனைத்து நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களையும் வடக்கு மாகாண நிர்வாகம் கொண்டிருப்பது தெளிவாகிறது.

அவ்வாறிருக்கையில், வைத்தியர்களுக்கிடையில் இயல்பாக எழக்கூடிய முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் அதிகாரமோ அல்லது வல்லமையோ தமக்கு இல்லை எனக் கைவிரிப்பதும் அதற்கு மத்திய சுகாதார அமைச்சிடம் தீர்வு தேடிச் சென்றிருப்பதும் கவலைக்குரியது.

இதனால் வைத்தியசாலை, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் தற்போது நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளது நிர்வாகத் திறமை மற்றும் தற்துணிபுடன் முடிவெடுக்கும் ஆற்றல் குறித்த பலமான சந்தேகங்களையே பொது மக்கள் மத்தியில் ஏற்பத்தியிருக்கிறது.

இனியாவது சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது அதிகார வல்லமைகளை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவேண்டும். இல்லையேல் போரின் உச்ச பாதிப்புக்களை சுமந்த முல்லைத்தீலு போன்ற மாவட்டங்களில் வாழக்கின்ற குறிப்பாக ஏழை மக்களுக்கு மாவட்டம் தொடக்கம் மாகாணம் வரையும் உள்ள அதிகாரிகள் செய்யும் மிகப்பெரும் ஆநிதியாகவே காபணப்படும்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap