கோத்தாபய பயத்தை காட்டி, ஏனைய கட்சிகளை அடக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முயற்சித்து வருகின்றது. கோத்தாபய ராஜபக்ஸ அல்ல மஹிந்த ராஜபக்ஸவே மீண்டும் களமிறங்கினாலும் தமக்கு அச்சம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் கோத்தாபய ராஜபக்ஸவை அடையாளப்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் குறித்து வினவிய போது கருத்து வெளியிட்ட அவர், கடந்த ஆட்சியில் செய்த குற்றங்களில் வெகுவிரைவில் ராஜபக்ஸவினர் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை தள்ளிப்போட ஒரு சிலர் முயற்சிகளை எடுத்தாலும் கூட ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டுக்குள் இடம்பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல் இப்போது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸவின் பெயரை முன்வைத்து கோத்தா பயத்தை காட்டி ஏனைய கட்சிகளை அச்சுறுத்தலாம் என பொதுஜன முன்னணியினர் நினைத்துள்ளனர்.
அதனால் தான் அவர்கள் செல்லும் இடமெல்லாம் கோத்தாபய பெயரை கூறி வருகின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கோ முன்னணிக்கோ கோத்தா பயம் இல்லை. கோத்தாபய ராஜபக்ஸ அல்ல மஹிந்த ராஜபக்ஸவே மீண்டும் களமிறங்கினாலும் கூட அதைக்கண்டு தாம் அஞ்சப்போவதில்லை. தமது தலைவர்கள் தேர்தலுக்கு தயாராகியுள்ளனர். தாம் கூட்டணியாக தேர்தலை சந்திக்க தயாராகிய நிலையில் எந்த சவாலையும் சந்திக்க தயார். வெகு விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். செய்த குற்றங்களுக்காக ராஜபக்ஸ குடும்பத்தின் பலர் சிறைக்கு செல்ல நேரிடும். குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கம் இல்லை. எனினும் சட்ட தாமதங்கள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment