இலங்கை பிரதான செய்திகள்

நான்கு அடையாள அட்டையுடன் நடமாடியவர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.நகரில் நான்கு அடையாள அட்டையுடன் நடமாடியவர் உட்பட இருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நகரில் 4 அடையாள அட்டைகளுடன் நடமாடினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்படுத்தினர்.

அவர் சந்தேகத்துக்கு இடமாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு அண்மையாக 4 அடையாள அட்டைகளுடன் நடமாடினார் என்றும் விசாரணைகளில் மாறுபட்ட தகவல்களை வழங்கினார் என்றும் நீதிமன்றுக்குப் காவல்துறையினர் ; அறிவித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதேவேளை யாழ்ப்பாணம் நகரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை போன் கடை ஒன்றுக்குச் சென்ற அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர், அங்கு பணியாற்றுபவர்களுடன் முரண்பட்டுள்ளார்.

அதனால் போன் நிறுவனத்தால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள், சந்தேகநபரை அழைத்து விசாரணைக்குட்படுத்தியதுடன், யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபர் போன் கடைக்கு செல்ல முன்னர், யாழ்ப்பாணம் காவல்நிலைய சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று தேனீர் அருந்திவிட்டு வெளியேறியுள்ளார். அத்துடன், அநுராதபுரத்தில் வசிக்கும் தான் நயினாதீவு நாக விகாரைக்கு வழிபட வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக வேறு நீதிமன்றிலும் வழக்கு உள்ளதாக காவல்துறையினர் அறிந்தனர்.

குறித்த சந்தேக நபரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை வழங்க காவல்துறையினர் ஆட்சேபனை தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.