இலங்கை பிரதான செய்திகள்

உயிரிழந்ததாக கூறப்பட்டவர் உயிருடன் நீதிமன்றில் தோன்றினார்..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என காவல்துறையினர் நேற்றுமுன்தினம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த எதிரி நேற்று மன்றில் தோன்றியதால் குழப்பம்  ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதிவான் அந்தோனி பீற்றர் போல் ஆராய்ந்த போது,

வழக்கின் இரண்டாவது எதிரி உயிரிழந்தார் என்று அறிக்கை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக காவல்துறையினர் முதலாவது எதிரி இறந்துவிட்டார் என்று தவறான அறிக்கையை மன்றில் முன்வைத்துள்ளமை தெரியவந்ததுஎன்பதனை நீதிவான் கண்டறிந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது எதிரி வழக்குத் தவணைகளுக்கு மன்றுக்கு சமுகமளிக்காதததால் அவருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் முதலாவது எதிரி வழக்குத் தவணைகளுக்கு சமுகமளித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் அரியாலையில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்ய முற்பட்டனர் அதன்போது சிறப்பு அதிரடிப்படையினரைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரில் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கின் முதலாவது எதிரியும் ஒருவராவார். அதனால் அவர் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அதன்போது முதலாவது எதிரி இறந்துவிட்டார் என்றும் அவரது இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதாகவும் அறிக்கை சமர்ப்பித்த காவல்துறையினர் அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை நீக்கம் செய்யுமாறும் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

இந்த நிலையில் முதலாம் எதிரி தான் நேற்றுமுன்தினம் நடந்த வழக்கு விசாரணைக்கு வருகை தராததால் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரண்டைந்தார்.

இதன்போது நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்று காவல்துறையினா. அறிக்கை சமர்ப்பித்துள்ளார்களே? என்று சந்தேகநபரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

முதலாவது எதிரி இறக்கவில்லை. சிறப்பு அதிரடிப் படையினரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நீண்டநாள்களாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று சட்டத்தரணி மன்றுரைத்தார்.

எதிரி, வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது எதிரி நீங்கள்தானா, உங்கள் தேசிய அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று மன்று அறிவுறுத்தியது.

எதிரி தேசிய அடையாள அட்டையை சட்டத்தரணி ஊடாக மன்றில் சமர்ப்பித்தார். எனினும் அடையாள அட்டையில் படமோ அல்லது பெயர் விவரங்களோ தெளிவாக இல்லை. அதனால் இதனை வைத்து எவ்வாறு உங்களை உறுதி செய்கிறீர்கள் என்று எதிரியிடம் மன்று கேள்வி எழுப்பியது.

அத்துடன், எதிரி உயிருடன் மன்றில் முன்னிலையாகி உள்ள நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று காவல்துறையினா.; எவ்வாறு மன்றுக்கு அறிக்கையிட முடியும் என்று காவல்துறையினரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

எதிரி மன்றில் தோன்றியதாலும் நீதிவானின் கேள்வியாலும் காவல்துறையினருக்கு குழப்பம் ஏற்பட்டது.

எதிரியின் பெயர் மற்றும் விவரங்களுடன் நீதிவான் வழக்கு ஏட்டை பொறுமையாக ஆராய்தார். அதன்போது இரண்டாவது எதிரியே வழக்குத் தவணைகளுக்கு மன்றில் முன்னிலையாகவில்லை, அவருக்கே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தார்.

அதனை நீதிவான் காவல்துறையினருககுத் தெரியப்படுத்தினார். காவல்துறையினரும்தமது பதிவுப் புத்தகங்களை ஆராய்ந்த போது இரண்டாவது எதிரியே உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்.

இதனால் காவல்துறையினரைக் கண்டித்த மன்று முதலாவது எதிரியை எச்சரித்து பிடியாணை உத்தரவை மீளப்பெற்று விடுவித்ததுடன் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டது.

 

#jaffna #court #police  #ariyalai

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers