Home இலங்கை தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை, அரசாகவும் அரசியலாகவும் கொண்டதன் விளைவா?

தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை, அரசாகவும் அரசியலாகவும் கொண்டதன் விளைவா?

by admin

 தீபச்செல்வன்..

ஏப்ரல் 21 இலங்கையின் வரலாற்றில் ஓர் கறுப்பு நாள். யேசு பிரான் உயிர்த்ழுந்த நாளில் பிரார்த்தனைகளுடன் இருந்த மக்கள், ஆயிரமாயிரம் கனவுகளுடன் பாடல்களைப் பாடிய குழந்தைகள் என 360பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். யேசுவின் முகத்தின்மீது, மாதா சொருபம்மீது குருதி தெறிந்திருந்த அந்தக் காட்சியே பெரும் மனிதப் பலியின் கொடூரத்தால் இருதயத்தை வலிக்கச் செய்கிறது. எவரும் கற்பனை செய்திராத இக் கொடுஞ் செயல் நமக்கு பல விடயங்களை உணர்த்துகிறது.

இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும், இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரையிலும் ஈழத் தமிழ் மக்கள்தான் எதிரிகள் என்று நினைத்த வண்ணமுள்ளனர். வடக்கு கிழக்கில் பெருமளவான இராணுவத்தை குவித்து, தமிழர் நிலத்தை சூறையாடுவதிலும், புத்தர் சிலைகளை எழுப்பி தமிழ் நிலப் பண்பாட்டை அழிப்பதிலும்தான் அக்கறையும் தீவிர செயல் தன்மையும் கொண்டிருந்தனர். அதன் மூலம் தம்மை பலப்படுத்தி விடலாம், தமிழர்களை தோற்கடிக்கலாம் என எண்ணினர்.

தெற்கினுடைய முழுக் கவனமும் வடக்கு கிழக்கின்மீதுதான் இருந்தது. வடக்கில் பலவந்தமாக புத்தர் சிலைகளை கொண்டு வந்து வைப்பதும், பின்னர் அதனை நீதிமன்றத்தின் ஊடாக, வர்த்தமானியின் ஊடாக சட்டத்தை ஆக்கிரமிப்புக்குப் பயன்படுத்தி தமிழர் நிலத்தின் நிம்மதியை பறிக்கும் செயல்கள்தான் நடைபெற்று வந்தன. முல்லைத்தீவு செம்மலையில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்தர் விகாரை வைப்பதும், வவுனியா எல்லைகளில் காணிகளை பிடித்து குடியேறுவதும்தான் நிகழ்ந்தது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர்ந்தாலும் புலனாய்வு இராணுவம் வருகின்றது. மாவீரர் துயிலும் இல்லத்தில் போராளிகளுக்கு விளக்கேற்றினாலும் புலனாய்வு இராணுவம் வருகின்றது. தமது பிள்ளைகளின் கல்லறைகள் அழிக்கப்பட்ட இடத்தில் வீழந்து அழுந்து புரளும் தாய்மார்களை இலங்கை இராணுவம் படமெடுத்துக் கொண்டிருந்தபோது, தற்கொலை அங்கிககள் தயாரிக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக வீதியில் கிடந்து புரண்டழும் தாய்மாரை படமெடுத்த காலத்தில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில், லைக் செய்தார் என்பதற்காக கைது செய்யப்பட்ட சிறுவன்கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல் கைதிகளால் நாட்டுக்கு ஆபத்து என்று கூறி, அரசும் அரச எதிர்தரப்பு சக்திகளின் அரசியல் போட்டியினால் அவர்கள் விடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் பற்றிய நினைவுகளை அழிப்பதில், தமிழ் மக்களின் மனங்களை கொந்தளிப்பில் வைத்திருப்பதில் அக்கறை செலுத்திய அரசும் அதன் படைகளும் மாபெரும் இக் குண்டு தாக்குதல் பயங்கரவாதம் பற்றி ஏன் அறியாதிருந்தனர்? அவர்களின் முழு கவனமும் தமிழ் மக்களை ஒடுக்குவதில்தான் இருந்ததா?

வவுணதீவில் இலங்கை காவல்துறையினர் கொல்லப்பட்டதும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டார்கள். எடுத்ததிற்கு எல்லாம் முன்னாள் போராளிகளை கைது செய்வதும் எச்சரிப்பதும் எடுக்கப்படும் நடவடிக்கை. அவர்களை உளவியல் ரீதியாக தொடர்ந்து வாதைகளுக்கு உள்ளாக்கி அவர்களை அழிப்பதுதான் இலக்கா? வவுணதீவு சம்பவம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் என்று இப்போது தெரிய வந்துள்ளது. பச்சைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனி ஆளாக தெருவில் நின்று போராடிய குறித்த முன்னாள் போராளிகளின் மனையின் கண்ணீருக்கு என்ன பதில்?

தமிழ் மக்கள் அழுவதை தடுப்பதிலும், அதனை பயங்கரவாதமாக சித்திரிப்பதிலும், வடக்கு கிழக்கில் நடக்கும் சின்ன விடயங்களையும் புலிகளுடனும் தலைவர் பிரபாகரனுடனும் நினைவுபடுத்தியும் தொடர்புபடுத்தியும் பேசியே அரசியல் செய்து வந்த தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளுக்கும் இதற்கு முதன்மை காரணம். தாம் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற வேண்டுமனால், ஈழத் தமிழ் மக்களை இவ்வாறு வார்த்தைகளால் ஒடுக்கியே அரசியல் செய்ய வேண்டும் என்பதே தென்னிலங்கையின் அரசியல் வழித் தேர்வாக உள்ளது.

இதனுடைய விளைவாகத்தான் இலங்கையில் மிகப் பெரும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கனவே இடம்பெற்ற தாக்குதலில் பெரும்பாலும் தமிழ் மக்களும் வெளிநாட்டுப் பிரஜைகளும் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் தற்போது, அங்காங்கே மீட்கப்படும் வெடி குண்டுகளும் வாள்கள் முதலிய ஆயுதங்களும் சிங்கள மக்களும் பெரும்பான்மையாக இலக்கு வைக்கப்பட்டுள்ளமையும் உணர்த்துகின்றது. பயங்கரவாதம் என ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியே அழித்த அரசாங்கம், உண்மையில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை இப்போதுான் எதிர்கொண்டுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தின் உருக்குலைந்த கூரையினை பார்க்கும் எவருக்கும் யாழ் நவாலி தேவாலயம் நினைவுக்கு வந்தே தீரும். மருத்துவமனைகள்மீதும், கோவில்கள், தேவாலயங்கள்மீதும், பள்ளிக்கூடங்கள் மீதும் குண்டுகளை வீசி மக்களை அழித்த பயங்கரவாத செயலை செய்தது இலங்கை அரசுதான். தமிழர் மண்ணில் எத்தனை நிகழ்வுகள்? நாகர் கோவில் பள்ளி, நந்தாவில் அம்மன் கோயில், கிளிநொச்சி வைத்தியசாலை முதலிய இலங்கை அரசாங்கம் குண்டு வீசி தாக்கி அழித்தவைகளின் பட்டியலினல் சில பெயர்கள்தான்.

போரின் கொடுமயை அனுபவித்த ஈழ மக்கள் ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடந்த கொடுஞ்செயல்கள் கண்டு பெரும் அதிர்ச்சி கொண்டனர். கலங்கி உருகினர். ஈழத்தில் நடந்ததுபோன்ற அழிவுகள் உலகில் இனி எங்குமே நடந்துவிடக்கூடாது என்பதற்காவே ஈழத் தமிழ் மக்கள் நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர். கண்ணீரும், குருதியும், மனிதப் பேரிழப்பும் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். இன்று மாத்திரமல்ல, இன்னும் நெடுங்காலம் இன அழிப்பு போரின் பின்விளைவு வாதைகளை நாம் சுமக்க நேரிட்டுள்ளது.

முப்பதாண்டுகாலமாக ஈழ மக்கள் அனுபவித்து வரும் ஒடுக்குமுறைப் பார்வைகளை இனி முஸ்லீம் மக்களும் அனுபவிக்கப் போகிறார்கள் என்பது மற்றொரு துயர். ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவு சர்வதேச பயங்கரதவாதக் குழுவுடன் தொடர்பினை விரிவுபடுத்தி மேற்கொண்ட இந்த பயங்கரதவாத செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் மீதும் பழி தீர்ப்பதும் அவர்களை சந்தேக கண்கொண்டு பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி முதல் அரசியல் தலைவர்கள் பலரும் இதனை வலியுறுத்தினாலும், நடைமுறையில் இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதுதான் சிக்கல்.

ஈழத் தமிழ் மக்களை பாதுகாக்கவும் மீட்கவுமே போர் செய்வதாகத்தான் இலங்கை அரச தலைவர்கள் கூறினார்கள். எமை அழித்த போரை எமை பாதுகாக்கும் மனிதாபிமானப் போர் என்று அழைக்கப்பட்ட நாடு இது. எப்படி இருப்பினும், தமிழ் பேசும் சமூகமாக முஸ்லீம் மக்களுடன் ஒன்றுபட்டிருப்பது மிகவும் முக்கியமானது. கடந்த கால முரண்பாடுகளைகளைந்து புதிய வழியில் பயணிக்க வேண்டியதும்தான் இங்கே அவசியமானது. இலங்கையில் இன ரீதியான, அரசியல் ரீதியான பிளவுகள் காணப்படுவதனாலேயே சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கையை தாக்க இலக்கு வைத்துள்ளனர் என்று இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கைத் தீவை பலமாக வைத்திருக்க விரும்பியிருந்தால், இலங்கை அரசு தமிழர்கள் கோரிய வடக்கு கிழக்கு இணைந்த தேசத்தில் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியை வழங்கியிருக்கலாம். பலமான இரு தேசங்கள், பலமான ஒரு தீவாக ஈழத் தீவை மாற்றியிருக்கும்.

இதனால்தான் “எங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டு தமிழீழம் உருவாக்கப்படுமானால் தங்கள் தேசப்பற்றும், அரசியல் சாணக்கியமும் எங்கள் ஆற்றலுடன் ஒன்றுக்கொன்று துணையாக இளைய இலங்கையில் சிநேகபூர்வமான இரு வல்லரசுகள் தோன்றிவிடும்” என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இவ்வாறு கூறியிருந்தார். ஈழத் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமல் இத் தீவின் பலத்தை ஒருபோதும் நிலைநிறுத்த முடியாது.

ஈழத் தமிழ் மக்கள் சிங்கள மக்களதோ, இலங்கை அரசினதோ எதிரிகள் இல்லை. இலங்கை அரசுதான் இத் தீவின் பூர்வீகக் குடிமக்களாகிய தமிழர்களை போர் நடவடிக்கையின் மூலமாக எதிரிகளாக்கியது. ஈழத் தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக தமது நிலத்தை ஆண்டு வந்த உரிமையையும், அவர்களின் பூர்வீக நிலத்தையும் தமது பண்பாடு தேசியத்தையுமே அவாவி வருகிறார்கள். அதற்கு தீர்வாக இத் தீவில் சிறுபான்மை இனமாக்கப்பட்ட தமிழர்களை அழித்தழித்து செல்லும் போக்குகளும் இத்தகையை பயங்கரங்களுக்கு வழிகோலின.

இலங்கையில் நடந்த போரில் ஒன்றரை இலட்சம் மக்கள் அழிக்கப்பட்ட நிலையில், போர் முடிந்து பத்தாண்டுகள் நினைவுறும் தருணத்தில், இடம்பெற்ற இந்த நிகழ்வு, இத் தீவில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டியதையும் உறுதியான அரசியல் நிலவரத்தை ஏற்படுத்துவதையும்தான் வலியுறுத்துகின்றது. இனியேனும் இலங்கை அரசு தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து, அவர்களை அழிப்பதை விடுத்,து – நிறுத்தி அவர்களுக்கான நீதியையும் ஆளும் உரிமையையும் வழங்கி, தமது எதிரிகள் யாரென்பதை இணங்காண வேண்டும். #srilanka #tamileelam #EasterSundayattack #VelupillaiPrabhakaran

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More