Home இலங்கை பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை…

பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை…

by admin

இலங்கையின்  முஸ்லிம் பேராசிரியர்கள் இணைந்து வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

கண்டி ஃபோறம் விடுத்துள்ளஅறிக்கை

கடந்த உயிர்த்தஞாயிறு தினத்தில்(21.04.2019) கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய நாட்டின்பலபகுதிகளில்கிறிஸ்த தேவாலயங்கள்மீது குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட, சுமார் 350 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று 500 பேரை மோசமான காயங்களுக்கு உட்படுத்திய, காட்டுமிராண்டித்தனமானபயங்கரவாதத் தாக்குதல்களை கண்டிஃபோறம் மிகவன்மையாகக்கண்டிக்கிறது.

இப்பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் துரதிஷ்டவசமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தீவிரவாத மதக்குழுவினர் என அடையாளம் காணப்பட்டதை அறிந்துநாம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இஸ்லாத்தில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்பதை நாம் வலியுறுத்திக் கூறவிரும்புகிறோம்.

இஸ்லாம் சாந்திக்கும் சமாதானத்துக்குமான ஒருமார்க்கமாகும். யாரேனும் ஒருவர் ஒருமனிதரைக் கொன்றால் அது முழு மனிதர்களையும் கொன்றதற்குச் சமமானது என்றும், யாரேனும் ஒருவர் ஒரு மனித உயிரைக் காப்பாற்றினால் அது முழு மனிதர்களையும் காப்பாற்றியதற்குச் சமமானது என்றும் குர்ஆன் அழுத்தமாகக்கூறுகின்றது(5:32). இதுதான்இஸ்லாம்.

பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனித சமுதாயத்தில் இடமும்இல்லை. இந்தக் காட்டு மிராண்டித்தனமான பயங்கரவாதக் குழுவினர் இஸ்லாத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், தங்கள் கருத்தியலிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என்றும் நாம் வெளிப்படையாகக் கூறவிரும்புகிறோம். இன்று பத்திரிகைகளில் தெரிவிக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் என அழைக்கப்படும் ஒரு சர்வதேசப் பயங்கரவாதக் குழுவின் கையாட்களாகச் செயற்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகின்றது. இப் பயங்கரவாதக் குழு மேலைத்தேய ஏகாதிபத்தியவாதிகளால் மத்தியகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட அழிவுச் செயற்பாடுகளின் ஒரு உபவிளைவாகும். அவர்களுடைய கருத்தியலும் செயற்பாடுகளும் இஸ்லாத்துக்கு எதிரானவைகளேயாகும்.

இப்பயங்கரவாதப் பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களது இதயம் நிறைந்த இரங்கலையும் அநுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரை இருந்ததில்லை. இந்தநாட்டில் இதுகால வரை இவ்விரு சமூகங்களுக்கும் இடையே எந்தவித மோதல்களோமுரண்பாடுகளோஇருந்ததில்லை.இந்தநிலையில்தான் முஸ்லிம்களுடன் அடையாளப் படுத்தப்படுகின்ற ஒரு பயங்கரவாதக்குழு அவர்கள்மீது பைத்தியகாரத்தனமாக ஒருபேரழிவைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அத்தோடு முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒரு பேரழிவுச் சூழ்நிலைக்குள்ளும் தள்ளி விட்டிருக்கிறது.

இத்தாக்குதல்களினால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதோடு, அவர்கள் தங்கள் வாழ்வை மீளக் கட்டி எழுப்பு வதற்கும் தங்கள் மனவடுவை ஆற்றுவதற்கும் சாத்தியமான எல்லாவழிகளிலும் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தை நாம் வேண்டுகிறோம்.

குற்றவாளிகளுக்கும் அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் எதிராக அவசியமான உறுதியான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தையும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளையும் நாம் வேண்டிக்கொள்கிறோம். அதேவேளை, கடந்தகாலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடந்ததாகக் கூறப்படும், நிலைமையை இன்னும் மோசப்படுத்தக்கூடிய, ஆதாரமற்ற சந்தேகத்தின்பேரில் மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகளைத் தவிர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துமாறும் நாம் அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம்.

இந்த மண்ணிலிருந்து பயங்கரவாதத்தையும் இனமதவெறுப்பையும் இல்லாது ஒழிப்பதற்கும், பரஸ்பர புரிந்துணர்வையும், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கும், தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கும், இலங்கைக்கான பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சகலஅரசியல்கட்சிகளுக்கும், பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைமைப் பீடங்களுக்கும், சிவில் சமூக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் நாம்வேண்டுகோள்விடுக்கிறோம்.

கண்டி ஃபோறம் உறுப்பினர்கள்

பேராசிரியர் எம். ஏ. நுஃமான்,
பேராசிரியர் எம். ஏ. எம். சித்தீக்
பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ்,
பேராசிரியர் எம். ஐ .மவ்ஜூத்
கலாநிதி ஏ. எஸ். எம். நௌஃபல்,
கலாநிதிஏ.எல். எம். மஹறுஃப்
கலாநிதி எம். இசற். எம். நஃபீல் ,
எம். எம். நியாஸ்,
ஏ. ஜே. எம். முபாறக்
யு. எம். ஃபாசில்,
ஜே. எம். நிவாஸ்

(163, எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க மாவத்த, கண்டி)

25.04.2019

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More