வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம்,   25 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து, பின் இராணுவத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டு  இன்று வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மண்டபம் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்திருந்தமையினால் மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தது. இதனைக்கருத்தில் கொண்டு இராணுவத்தினர் 10 மில்லியன் ரூபா பெறுமதியில், கடந்த இரண்டு வருடங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். இந்த நிலையில்  வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம். கனீபாவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.

சமாதான சூழலை கருத்தில் கொண்டு,   கலாசார மண்டபத்தில் இருந்த இராணுவ முகாமை அகற்றி, 2017 ஆம் ஆண்டு  பிரதேச செயலாளர் கா. உதயராசாவிடம் இராணுவத்தினர்  கையளித்திருந்தனர்.

 

1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜா குகனேஸ்வரனின் பன்முகப்பட்டுத்தப்பட்ட நிதி மற்றும் அரசின் ஏனைய நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்ட குறித்த கலாசார மண்டபம் திறப்பு விழா காண இருந்த நிலையில் அரசியல் போட்டியினால் திறக்கப்படாது காணப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இராணுவத்தினர் அதனை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.