Home இலங்கை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஆலயத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆலய திருவிழாவை நடத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை  ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் ஆரம்பமான இந்த கூட்டத்தில் முப்படை தளபதிகள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் புலனாய்வுப் பிரிவினர் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளை தொடர்ந்து மக்கள் ஒன்று கூடுவதற்கு அச்சமடைந்த சூழ்நிலையில் சுமார் 8 லட்சம் பேர் வரையில் வருகை தருகின்ற இந்த ஆலயத்தில் உற்சவ நிகழ்வுகள் மிகப் பாதுகாப்பாக நடத்த வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருக்கின்றது

எனவே இந்த ஆலய உற்சவத்தினை  எவ்வாறு நிகழ்த்துவது எவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது மக்களுடைய பாதுகாப்புகள்  உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும்  ஆலயத்திற்கு கடைகள் போடுகின்றவர்கள் அவர்களுடைய பாதுகாப்புகள் உள்ளிடட  பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும்  கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்பட்டது

கூட்டத்தின் இறுதியில் இந்த கலந்துரையாடல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்

வழமை போன்று எங்களுடைய இந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதில் இருக்கின்ற பாதுகாப்பு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த இடத்திலேயே சில விடயங்களை நாங்கள் மட்டுப் படுத்துவதற்காக எண்ணி இருக்கின்றோம் அந்த வகையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்ற அனைவருடைய ஒத்திசைவோடு வழமையாக நடைபெறுகின்ற வியாபார நடவடிக்கைகளை ஆலய வளாகத்துக்குள் மட்டு படுத்துவதற்காக தீர்மானித்திருக்கின்றோம் அந்த வகையில் ஆலய வளாகத்திற்குள் உணவு மற்றும் குடி பானங்களுக்கான  வியாபார நிலையங்களுக்கு மாத்திரம் அனுமதிகளை வழங்க தீர்மானித்திருக்கின்றோம்

அந்த அனுமதிகளை வழங்குவதற்கு கூட ஒரு குழு நியமிக்கப்பட்டு இருக்கின்றது அந்த குழுவினுடைய அங்கீகாரத்தின்  அடிப்படையிலேதான் இந்த கடை வழங்கப்பட இருக்கிறது எனவே அந்த செயற்பாட்டிற்கு அவர்கள் விண்ணப்பங்களை எதிர்வரும் 6 ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை பெற்றுக்கொண்டு 15ஆம் திகதி அளவில் அவர்கள் கடைகளை போட ஏற்ற  நடவடிக்கைகள் இடம்பெறும்

குறிப்பாக ஆலயத்துக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்தக் கூடிய வகையிலே தங்களுடைய ஆள் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டியது அவசியம் வழமைபோன்று போக்குவரத்து வசதிகளும் ஓரளவுக்கு மட்டுப்படுத்தி இருக்கின்றோம் இந்த வளாகத்திற்குள் போக்குவரத்து செய்வது மட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதனையும் குறிப்பிட்டு கொள்ள விரும்புகிறேன்

குறிப்பாக விசேட அனுமதிகள் மூலம் வருகின்ற வாகனங்கள் கடந்த வருடம் போன்று இம்முறை வழங்கப்படமாட்டாது என்பதையும் குறிப்பாக இங்கு வருகின்ற வயோதிபர்கள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கான விசேட போக்குவரத்துக்கள் இங்கு இருக்கின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய செயல்படுத்த இருக்கிறோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

குறிப்பாக இந்த பொங்கல் விழாவானது நடைபெறுவதற்கு வேண்டிய சமய அனுஷ்டானங்களை நடத்துவதற்கு ஏற்ற வகையில் ஒழுங்குகள் இந்த இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றது எனவே அதற்கு அமைய பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இங்கே இருக்கின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதன் ஊடாக இந்த சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

எனவே நாட்டில் இருக்கின்ற தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தங்களுடைய பாதுகாப்பையும் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டு இருக்கின்ற உத்தியோகத்தர்கள் அவர்களது கடமைகளை செய்வதற்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் ஊடாக இந்த பொங்கல் விழாவை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இந்த வேளையில் கேட்டுக் கொள்கின்றேன்

அதுமட்டுமல்லாது இன்றைய தினம் இந்த இடத்திலேயே எடுக்கப்பட்ட தீர்மானங்களை மேல் மட்டங்களுக்கு எடுத்துச் சென்று அவர்களால் எங்களுக்கு கூறப்படுகின்ற மேலதிக அறிவித்தல்கள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவே இந்த நிகழ்வுகள் தொடர்பாக 6 ம் திகதி பாக்குத்தெண்டல்  13 ஆம் திகதி தீர்த்தமெடுக்கும் நிகழ்வு இறுதியாக பொங்கல் நிகழ்வு 20 ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது எனவே இவற்றிக்கான பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் இங்கே இருக்கின்ற முப்படைகளாலும்  பொலிஸாராலும்   மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு அனைவரும் இவற்றிற்கான ஒத்துழைப்பை வழங்குவதன் ஊடாக இந்த நிகழ்வில் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோன் என்றார்

#vatrapalaiamman #pongal #security #meeting

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More