இந்தியா இலக்கியம் கட்டுரைகள்

நவீனத்துவமும் அதன் எதிரிகளும் – மைக்கேல் மதுசூதன்.. தமிழாக்கம் – திருவேணிசங்கமம்…

பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியாவின் இந்து ‘சுயமும்’ மற்றமையின் அரசியலும் இணைந்த வடிவம் – மைக்கேல் மதுசூதன்.. தமிழாக்கம் – திருவேணிசங்கமம்…


19ம் நூற்றாண்டில் கவிஞராகவும் இலக்கிய வாதியாகவும் திகழ்ந்த மைக்கேல் மதுசூதன் தத்தர் சமூகத்தில் செயற்பட்ட பல்வேறு முரண்பாடுகளின் மொத்த வடிவமாக விளங்கினார். மாறிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தின் வெட்டுமுகமாக அவர் தொழிற்பட்டார். இறந்து கொண்டிருந்த காலனிய கலாசாரத்தையும் தங்கள் மீது சுமத்தப்பட்ட சுமைகளையும் 19ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த அரசியல் உணர்வு மிக்க வங்காளிகள் உணர்ந்திருந்தனர். அவர்கள், மதுசூதன் விரும்பியது போல், பகுத்தறிவு சார்ந்த வழியில் வங்காள மொழியையும் இலக்கியத்தையும் புனரமைத்து புத்துணர்வூட்ட அவாவி நின்றனர்.

சஜால் நாக்

பத்தொன்பதாம் நூற்றாண்டு கால நிலப்பிரபுத்துவ வகுப்பினர் பிரித்தானியரை ஆக்கிரமிப்பாளர்களாக கருதிய அதே வேளை காலனியத்தால் உருவாக்கப்பட்ட மேலோங்கிகள் பிரித்தானியர் ஆட்சியை நற்பேறெனக் கருதினர்.1 மொகலாயர் ஆட்சியின் அராஜகம், சட்ட ஒழுங்கின்மை போன்றவற்றால் துயருற்றிருந்த மக்களுக்கு அவ்வாட்சி ஓரு வரப்பிரசாதமாகத் தோன்றியது. காலனிய மேலோங்கிகள் அதை மேற்கு, கிழக்கு என்ற இரு நாகரிகங்களின் சந்திப்பாக கொண்டனர்.2 மேற்கு நவீனத்துவத்தின் மறுவடிவம்; அந்த நவீனத்துவ ஒளியைக் கொண்டு கிழக்கு மக்கள் மத்தியில் படிந்துள்ள இடைக்கால இருளை நீக்க முடியும் என்று நம்பினர். மேற்கு, கிழக்கு என்ற இரு நாகரிகங்களும் ஓன்றோடொன்று கலப்பதால் வித்தியாசமான கலாசாரம் விளைபொருளாகும் என்று அவர்கள் கருதினர். சமூகத்தில் பிரித்தானியர் ஆட்சி சாந்தியையும் சமாதானத்தையும் கொண்டு வரும் என்று அவர்கள் நினைத்தனர். அவர்கள் பிரித்தானியர்களை ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களை இந்தியாவிலும் ஏற்படுத்துமாறு வேண்டிக் கொண்டனர். பிரித்தானியர் உருவாக்கிய மத்தியதர வர்க்கத்தில் இணைந்து கொண்ட அவர்கள் பல்வேறு கருத்தியல்களின் சோதனை களமாக இந்தியாவை கண்டனர்.3 இந்த 19ம் நூற்றாண்டு ஆரம்ப கால அறிவுஜீவிகள் பாரம்பரிய அறிவாளிகளிடமிருந்து வேறுபட்டிருந்தனர்.4 இந்த புத்திஜீவிகளுக்கு இந்த மோதல் பழைமைக்கும் புதுமைக்கும், வைதிகத்துக்கும் நவீனத்துக்கும் இடையில் நடைபெறும் மோதலாகப்பட்டது. பழைய கருத்தியல்கள் அழிக்கப்பட வேண்டியன என்றும் அதனிடத்தில் புதிய கருத்தியல்கள் பதிலீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வாதித்தனர். இவ்வாறு விவாதித்த இந்திய புத்திஜீவிகள் ஐரோப்பியருக்கு எதிராக மாத்திரமல்லாது மாற்றத்தை விரும்பாத தமது சக இந்தியருக்கு எதிராகவும் போராடினர். இந்த பழைமைக்கும் புதுமைக்கும் இடையிலான பாரிய போராட்டத்தின் இயல்புகளையே வங்காள மறுமலர்ச்சி என்று அழைப்பர். இதில் சில நவீனத்துவவாதிகள் இந்திய பாரம்பரியத்துக்கும் ஐரோப்பிய நவீன அம்சங்களுக்கும் இடையே அமைதி கண்டு செல்ல வேண்டும் என்றனர். மற்றவர்கள் பழையதை முற்றாக நீக்கி அதனிடத்தில் புதியதை கொண்டுவர வேண்டும் என்றனர். இதை அவர்கள் ஓரு அரசியல் செயல்பாடாக கொண்டு செயல்பட்டனர்.

கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கிய மைக்கேல் மதுசூதன் 19ம் நூற்றாண்டு வங்காளத்தின் நவீனத்துவத்தை நாவாரக் கூவி அழைத்த வங்காள மறுமலர்ச்சியின் முக்கிய கருத்திலாளர்களில் ஓருவராவார். அவர் ஐரோப்பிய நவீனத்துவத்தின் அறிவார்ந்த ஆர்வலராகவும் அதன் ஓவ்வொரு அம்சத்தையும் சுருதி சுத்தமாக பின்பற்றுபவராகவும் இருந்தார். அவர் அதன் சிறந்த பண்புகளை இந்திய(வங்காள) இலக்கியத்துக்கு அறிமுகம் செய்ய விருப்பினார். இதனால் வங்காளி மொழிக்கும் இலக்கியத்துக்கும் உலகளாவிய மதிப்பும் மரியாதையும் கிட்டும் எனக் கருதினார்.5 அவரின் கால புத்திஜீவிகள் சமூக கலாசாரத் துறையில் செயல்பட அவர்; இலக்கியத்தை தேர்ந்தெடுத்தார். அவரின் இந்த பங்களிப்பு அவரை தென்னாசியாவின் முக்கிய தேசியங்களில் ஒன்றான வங்காள தேசியத்தை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவராக்கியது. அதனால்தான் பக்கீம் சந்திர சட்டர்ஜி அவர் இறந்த போது கூறிய இரங்கல் உரையில் வங்காள தேசியக் கொடியில் அவரின் பெயரை எழுதிப் பறக்க விடுங்கள் என்று கூறினார்.6சின்னாத் சாஸ்திரி மைக்கேல் மதுசூதனின் வருகை வங்காள வரலாற்றில் மங்களமான நிகழ்வு என்றார்.7அவர் வங்காள இலக்கியத்துக்கு மாத்திரம் அல்ல அகில இந்திய இலக்கியத்துக்கும் மகாத்தானவராக கருதப்படுகிறார.8இப்படிப்பட்ட மைக்கேல் மதுசூதன் வங்காளம் மகா இலக்கியம் படைக்க தோதில்லாத ஓரு மீனவ மொழி என்று எள்ளி நகையாடியது ஒரு முரண்நகையாக தோன்றுகிறது.

இக்கட்டுரை இந்த 19ம் நூற்றாண்டு கவிஞரின் நவீன செயற்பாடுகளை அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புலமை சாதனைகள் ஊடாக மதிப்பிட முனைகிறது. மதுசூதனின் செயற்பாடுகள் அரசியல் தொடர்பு கொண்டவை. வங்காள கவிதையில் அவர் அறிமுகம் செய்த தேசியவாதமற்ற தன்மையும் புதுமையாக்கமும் பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தின. அதனால் அவர் மற்றமைக்குள் தள்ளப்பட்டார். காலனிய சூழ்நிலையில் இந்து சுயத்துக்காகப் போராடிய சக்திகள் அவரை அந்நியப்படுத்தின. மதுசூதனும் அவரை ஓத்த சிந்தனையாளர்களும் இந்து சுய கட்டமைப்புக்கு எதிராக போராடினர். மாறிக்கொண்டிருந்த காலனிய இந்தியாவில் நடந்த இந்த மோதலின் விளைவை மைக்கேல் மதுசூதன் தத்தரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் தொடர்புபடுத்தி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கவிஞரும் அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களும்

மதுசூதன் தத்தர் கிழக்கு வங்காளத்தில் உள்ள ஜெய்சூர் மாவட்டத்தை சேர்ந்த சாகார்த்தாரி கிராமத்தில் மிகவும் செல்வ செழிப்புமிக்க குடும்பமொன்றில் 1824 ஜனவரி 25ந் திகதி பிறந்தார். அவர் பிறந்த சிறிது காலத்தில் அவருடைய தந்தையார் வசதி வாய்ப்புகளை நாடி கல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கிருந்த செல்வச் செழிப்புள்ள குடும்பங்களில் ஒன்றாக அவரது குடும்பமும் இருந்தது. மதுசூதன் அவர் குடும்பத்தில் எஞ்சிய ஒரேயொரு பிள்ளையாவார். ஹோமர், வேர்ஜில், ஹோராஸ், தாந்தே, பெற்றாச், டஸ்ஸோ என்பவர்களை மூலத்தில் வாசித்த ஓரு சில இந்தியர்களில் ஒருவரான மதுசூதன் வில்லியம் வேர்ட்ஸ்வெர்த், விக்டர் ஹூகோ, டென்னிசன் ஆகியவர்களின் விசிறியாகவும் இருந்தார். அவர் மேலும் மில்டன், பைரன் ஆகியவர்களின் கவிதையில் மனதைப் பறிகொடுத்திருந்தார். இந்து கல்லூரியில் படித்த பொழுது அங்கு ஆசிரியராக இருந்த டெரோசியோவின் பாதிப்புக்கு ஆளானார். இந்தப் பாதிப்பு அவரின் அபிமானத்துக்குரிய ஆசிரியரான டேவிட் ரிச்சர்ட்சன் என்பவராலும் மேலும் வளர்ந்தது. மதுசூதன் நீலக்கண் அழகிகளைப் பற்றியும் ‘மிலேச்ச’ நாட்டுக்கு சென்று ஆங்கிலக் கவியாகி வாழ்வது பற்றியும் கனவு கண்டு கொண்டு தனது இளமை நாட்களை கடத்தினார். ஆனால் நிலைமை அவர் கனவு கண்டதற்கு நேர்மாறாக மாறியது.

அவரை பெற்றோர்கள் இளவயதில் விவாக பந்தத்தில் இணைத்து விட விரும்பினர். அதிலிருந்து தப்புவதற்காக அவர் கிறித்தவ மதத்திற்கு மாறினார்(1843). இதனால் வைதீக இந்து பிரிவினரால் சமூகத்திலிருந்து ஓதுக்கப்பட்டு இந்துக் கல்லூரியில் படிப்பை தொடர முடியாத நிலைக்கு உள்ளானார். சமூக அபவாதத்திற்கு பயந்த அவரது பெற்றோர்களுக்கு தமது அருமைப் புதல்வனைக் கைவிடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அவர் பிஷப் கல்லூரிக்கு மாறி சிறிது காலம் படிப்பை தொடர்ந்தார். அதுவும் சரிவராமல் சென்னைக்கு சென்று அனாமதேயமாக வாழத் தொடங்கினார். அங்கே முக்கியமான இரு நிகழ்வுகள் அவர் வாழ்க்கையில் சம்பவித்தன. ஓன்று ரெபேக்கா என்னும் ஐரோப்பிய பெண்ணோடு அவர் காதல் வயப்பட்டது.(;1848 யூலையில் அவர்களின் திருமணம நடந்தேறியது) இரண்டாவது ஆங்கில மொழியில் அவர் எழுதத் தொடங்கியது.

சில வருடங்களுக்குப் பின் கல்கத்தாவுக்கு திரும்பி போக சந்தர்ப்பம் வாய்த்தது.(1856) இதனால் வங்காள மொழியில் எழுதத் தொடங்கினார். சமஸ்கிருத நாடகமொன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருமாறு அவரிடம் கேட்டனர். மதுசூதன் அதை நிறைவேற்றிக் கொடுத்தார். ஆயினும் ஒரு தரமற்ற நாடகத்துக்காக இவ்வளவு பணம் விணாக்கப்பட்டுள்ளதே என்று கவலைப்பட்டார்.9தன்னாலும் அதைவிட சிறந்த நாடகத்தை எழுத முடியும் என்று புதிய நாடகம் ஒன்றை எழுதி முடித்தார். இதற்கு முன்னரும் சென்னையில் இருந்த போது ஊயிவiஎந டுயனநைள: யுn ஐனெயைn வுயடந ஆங்கில நாடகத்தை எழுதி வெளியிட்டிருந்தார். இதற்கு பலவித எதிர்வினைகள் ஏற்பட்டன. இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ‘கடந்த கால நோக்கு’ என்னும் நாடகத்தையும் எழுதி வெளியிட்டார். இதுவும் சென்னையிலேயே வெளிவந்தது. அவரது இரண்டாவது வெளியீடும் சென்னையில் இருந்தே வெளிவந்தது. அதன் தலைப்பு ‘ரிஸ்ஸா: இந்தியாவின் பேரரசி’ என்பதாகும். இவற்றை விட யுரேசியன் என்னும் ஆங்கில சஞ்சிகை ஒன்றுக்கும் பதிப்பாசியராக இருந்துள்ளார். அதில் கவிதை சம்பந்தமான தனது கருத்துக்களை வெளியிட்டார். அவருக்கு ஆங்கிலத்தில் எழுத்துவதற்கு சிரமம் இருக்கவில்லை. வங்காளத்தில் எழுதுவது சிரமமாக தோன்றியது. அதில் படிப்போ பரிச்சியமோ அவருக்கு இல்லை. அவர் வங்காளத்தில் எழுத மாட்டார் என்று அவர் நண்பர்கள் திடமாக நம்பி;னர். அவர் வங்காள எழுத்தைப் பார்த்து பரிகாசம் வேறு பண்ணினர். ஆனால் மதுசூதன் இதனை சவாலாக எடுத்து மகாபாரத்திலிருந்து ஓரு கதையை தழுவி சேர்மிசா என்ற காவியத்தை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்(1856). சேர்மிசாவுக்கு பிறகு அதிகம் வங்காள மொழியில் எழுத வேண்டும் என்று நினைத்து செயல்படத் தொடங்கினார். ‘நான் எனது மொழியின் சுவையை இப்போதுதான் உணரத் தொடங்கியுள்ளேன். அதில் இன்னொரு நாடகத்தை எழுதத் தொடங்கியுள்ளேன்’ என்று கௌடாஸ் என்ற நண்பருக்கு எழுதினார்.10 இந்நாடகம் எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்னர் பத்மாவதி என்ற பெயரில் வேளிவந்தது(1860). இதன் பின்னர் இது ஒரு நாகரிகமா?(1860), பழைய பறவையில் புதிய சிறகுகள்(1860) என்னும் இரு அங்கத நாடகங்களை வெளியிட்டார். அவர் பரிசோதனை முயற்சியாக பத்மாவதியில் கையாண்ட வசன கவிதை திலோத்தமா சம்பாவு காவியத்தில் புதுப்பொலிவுடன் வெளிப்பட்டது. 1861ல் அவர் இந்து புராண பாத்திரங்களான இராதா, கிருஷ;ணா காதலை; வைத்து பஜ்ரங்கான என்ற காவியத்தை வங்காள குறுங்கவிதை வடிவத்தில படைத்து யாவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனை அடுத்து அவரின் மகுடப் படைப்பு எனக் கருதப்படும் மேக் நாத் வட் காவியத்தை 1860ல் வெளியிட்டார். இதே காலகட்டத்தில் இராசபுத்தான புராணத்தை மையமாக கொண்டு கிருஷ;ணகுமாரி என்னும் நாடகத்தை வெளியிட்டார்.(1861). இன்னொரு தலைசிறந்த படைப்பான வீரஞ்கான காவியத்தை 1862ல் வெளியிட்டார். 1862க்கு பின்னர் தலைசிறந்ததெனக் கருதப்படக் கூடிய படைப்பெதையும் அவர் வெளியிடவில்லை. வங்காளி இலக்கியத்துக்கு அவர் பெருந் தொகை சொனற் பாக்களை முதல் தடைவையாக அறிமுகம் செய்திருந்தார். அவை எல்லாம் சர்ட்டுர்டாஸ்பாடி கவிதா பள்ளி என்ற பெயரின் ஒரு கவிதை தொகுதியாக வெளிவந்தது. இதன் பின்னர் மதுசூதன் எழுதுவதை திடிரென நிறுத்தி சட்டம் படிக்க இங்கிலாந்து செல்லத் தயாரானார். அப்போது தன்னை ஓரு துரோகியாக கருத வேண்டாம் என்று தேசிய மாதாவிடம் வேண்டிக் கொண்டார். இவ்வாறு அவரின் குறுகிய கால வங்காளி இலக்கிய சேவை நிறைவடைந்தது.

சென்னையில் இருந்த போது ஹென்றியட்டா என்ற ஆங்கில மாதுவுடன் அவர் கொண்ட திருமணத்துக்கு புறம்பான உறவு அவரின் குடும்ப வாழ்வில் விரிசலை கொண்டு வந்தது. அவர் கல்கத்தாவுக்கு சென்ற போது அவருடன் கூடச் சென்று வாழ ஹென்றியட்டாவும் தீர்மானித்தார.; அவரும் ஹென்றியட்டாவும் சம்பிரதாயமாக திருமணம் செய்யவில்லையாயினும் மனமொத்த தம்பதியாக வாழ்ந்தனர். அவரின் முடிவில்லாத வறுமையோடு இணைந்த ஊதாரித்தனமான வாழ்வு அவரதும் அவரின் குடும்பத்தவர்களினதும் வாழ்நாட்களை குறிக்கியது(1873) அவர் ஒரு போதும் சென்னைக்கு வந்து தனது முதல் மனைவி பிள்ளைகளை பார்க்கவில்லை.

தேசியவாதம் அற்ற அரசியல்

19ம் நூற்றாண்டின் வங்காள மறுமலர்ச்சி மூன்று முக்கிய போக்குகளைக் கொண்டிருந்தது. அவை 1) ராம் மோகன் பாரம்பரியம் (சீர்திருத்த வாதம்)2) இந்துக் கல்லூரிப் பாரம்பரியம்(பகுத்தறிவு வாதம்) 3) ராமகிருஷ;ண பாரம்பரியம் (மறுமலர்ச்சி வாதம்).12இந்த மூன்று போக்குகளின் பொது அம்சம் இந்திய சமூகத்தை புனர்நிர்மாணம் செய்வதாக இருந்த போதிலும் ராம் மோகனின் பாரம்பரியம் அரசியலிலிருந்து கலாசாரத்தை வேறுபடுத்தி நோக்கியது. அவர்கள் சம கால சமூக நிலைமையை கருத்தில் கொள்ளாமல்- இடைக்கால சமூகத்தைப் பற்றி அக்கறைப்படாமல்- நவீன காலத்தை மாத்திரம் அவாவி நின்றனர். அவர்கள் நிலைநாட்ட விரும்பிய சமூகம் மட்டுப்பாடுகளையும் ஆழமான முரண்பாடுகளையும் கொண்டதாக இருக்கும் என்று டேரோசியன்கள் வாதித்தனர்.13 அவர்கள் விளையும் கலாசாரமோவெனில் மேலோங்களுக்கு பொருத்தமாகவும் காலனிய சட்டகத்துக்கு அமைவாகவும் இருக்கிறது என்று விளக்கம் அளித்த அவர்கள் அது பொது மக்களுக்கு ஏற்புடையதல்ல என்றனர்.14 இம்முரண்பாடுகளிலிருந்து டெரோசியன்களின் அரசியல் முளை கொணடது. அடிப்படை நோக்கங்களை டேரோசியர்கள் ஏற்றுக்கொண்ட போதிலும் சமூக சீர்திருத்தத்தில் அவர்களின் சேர்க்கை (ளலவொநளளை) என்ற கருத்தியலை டேரோசியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராம்மோகன்களின் புதுமைக் கருத்துக்களை வரவேற்கும் போதில் அவர்கள் பழைமையை கண்டித்தனர். அவர்கள் ராம்மோகன்களின் கொள்கையை அரசியல் தலையீடு இல்லாமல் அரசியலுக்கும் கலாசாரத்துக்கும் இடைநடுவில் இருக்கும் ‘சமூக சீர்திருத்தம்’ என்று எள்ளிநகையாடினர்.15 அவர்கள் ராம்மோகனின் ஆதரவாளர்களை ‘அரைச் சுதந்திர அப்பாவிகள்’ என்று நக்கல் அடித்தனர்.16 டெரோசியன்களின் குரலாக ஒலித்த கிழக்கு இந்தியா என்னும் பத்திரிகை 1831ல் ஓக்டோபரில் ராம் மோகன்களின் பொய்மைகளையும் வெளிவேடங்களையும் அம்பலமாக்கி எழுதி இருந்தது.17

ராம் மோகன்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு விதமாகவும் பொது வாழ்க்கையில் வேறு விதமாகவும் நடந்து கொள்வதை டெரோசியன்களால சகிக்க முடியவில்லை.; அவர்களுக்கு நவீனத்துவம் மொத்தமானது; ஒன்றிணைந்தது. அதாவது அது விஞ்ஞானம், தொழில் நுட்பம், கல்வி, ஆட்சி முறை, கலாசாரம், இலக்கியம் என்ற இன்னோரன்ன அம்சங்கள் ஒன்றிணைந்து வெளிப்படுவதாகும். அவர்கள் கல்கத்தா மருத்துவ கல்லூரியை 1835 லும் கல்கத்தா பொது நூலகத்தை 1836 லும் ‘பங்களா பற்சலா’வை(சிறார்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு) 1839ல்லும் ஆரம்பித்தனர். அவர்கள் வளர்ந்து வருகின்ற அரசியல் விழிப்புணர்வுடன் இணைந்திருந்தனர். இளைய வங்காளிகளுக்காக வங்காள பிரித்தானிய சங்கத்தையும் பிரித்தானிய இந்திய அமைப்பையும் முறையே 1843,1851 எனும் ஆண்டுகளில் தோற்றுவித்தனர். கருத்து சுதந்திரத்தை வேண்டி ராம்மோகன்கள் முன்னெடுத்த செயல்பாட்டை தொடர்ந்ததால் 1835 மேற்காப் பிரவு அதற்கு அனுமதியளித்தார். அவர்கள் ஏற்படுத்திய பிரித்தானிய இந்திய சங்கம்(1839) பிரித்தானிய மக்களுக்கு இந்திய மக்கள் அநுபவிக்கும் துயரத்தை எடுத்துரைப்பதற்காக நிறுவப்பட்டது.

டெரோசியன்கள் ஐரோப்பிய விஞ்ஞானத்தையும் கல்வியையும் இந்திய மக்களிடையே பரப்புவதை பாரிய குற்றமாகக் கருதினர். நவீனத்துவம் இந்தியாவுக்கு படிப்படியாகவோ தர்க்க ரீதியாகவோ அறிமுகமாகவில்லை. அது ஒரு சடங்கு செயல்பாடாக இருந்தது. டெரோசியன்கள் தாங்கள் பழைய பாரம்பரியங்களை ஏற்றுக்கொள்ளாமையை காட்டு முகமாகவே மேற்கு வழி நவீனத்துவத்தை ஆதரித்தனர்.18 அதனால் பொது வாழ்வில் இந்து சடங்குகளை மறுத்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அவற்றை மீறத் தயங்கினர். ஆசாரத்துக்கு வீரோதமான உணவுகளையும் பானங்களையும் தொடவும் தயங்கினர். அவர்கள் அரசியலில் தேசிய வாதமற்ற தன்மையை ஏற்க முடியாதவர்களாகவும் பொது நடைமுறையில் ஆங்கில மயப்பட்டவர்களாகவும் அவர்களின் செயல்பாடுகள் இருந்தன.

சமூகத்தால் தடைசெய்யப்பட்ட பன்றி இறைச்சியும் மாட்டிறைச்சியும் பியர் போத்தல்களும் தாராளமாக தாராளவாதிகளிடையே புழங்குவது கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைகின்றனர். இது தனிமனித சுதந்திரம் என்றும் அபிவிருத்தியில் இது தவிர்க்க முடியாதது என்றும் சொல்லப்படுகிறது… டெரோசியன்களின் நோக்கம் இந்த தர்க்கத்திலிருந்து இந்து சமயத்தை காப்பாற்றுவதாகும.19

மதுசூதன் தத்தர் டெரோசியன்களின் இந்த அறிவு ஜீவி மரபை ஆதரிப்பவராக இருந்தார். அவரை அவரின் தாய்மொழியில் எழுத வைத்தது ஓரு மகிழ்ச்சிகரமான திருப்பு முனையாகும். அவர் தனது தாய்மொழியில் எழுதத் தொடங்கிய போது அவரது கவித்துவ வேகத்துக்கு அது இசைந்து கொடுக்கவில்லை. அதனால் அவர் இடைக் காலத் தன்மை கொண்டிருந்த வங்க மொழியில் நவீன ஐரோப்பிய இலக்கியத்தில் உள்ள நல்ல அம்சங்களை புகுத்தினார். இது பற்றி அவர் தனது நண்பரொருவருக்கு சொன்ன பிரபலமான கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது: ‘இலக்கிய விடயங்களைப் பொறுத்த வரையில், நண்பரே, நான் சுயமரியாதை கொண்டவன். இரவல் ஆடையை அணியும் உலகில் நான் ஒரு சிறிய மேல் கோட்டை அல்லது இடைச் சட்டையை மாத்திரமே கடன் வாங்கியுள்ளேன்.’20 அக்கால வங்காள இரு மொழிப் புலமையாளரிடையே காணப்பட்ட ஓரு பொதுவான பண்பு இது என்று பார்த்தா சட்டர்ஜி குறிப்பிடுகிறார்.21அவர்கள் தங்கள் தாய் மொழி தங்களின் கலாசார அம்சங்களைக் கொண்டிருந்தது; காலனிய வாதிகள் அவற்றை சீரழித்துவிட்டனர். ஓரு தேசியம் தனது இறைமையை நிலைநாட்டுவதற்கு அவசியமானது மொழியாகும். நவீன உலகுக்கு ஏற்ப அது விருத்தி செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வாதித்தனர் என்கிறார் பார்த்தா சட்டர்ஜி. மதுசூதன் முறையாக வங்க மொழி படிக்காவிட்டாலும் அதன் வளமும் ஆற்றல்களும் அவருக்கு விரைவில் கைகூடின. இது பற்றி ராஜ் நாராயணன் பாசுவுக்கு எழுதும் போது, ‘நீங்கள் அறிந்தது போல் நான் வங்காள மொழி படிப்பாளி இல்லாவிடினும் அம்மொழி எனது விருப்பப்படி இசைந்து கொடுக்கிறது. எனது சிந்தனைக்கும் கற்பனைக்கும் பொருத்தமான சொற்கள் இயல்பாக வந்து அமைகி;ன்றன. என்ன ஆச்சரியம்! அந்த சொற்கள் எனக்கு ஏற்கெனவே தெரியாததாகும். இது எனக்கு ஒரு மாயமாக தோன்றுகிறது’22

மதுசூதனின் சாதனைகளில் முக்கியமானது அவர் வங்காள மொழிக் கவிதையில் வசன கவிதை வடிவத்தை அறிமுகம் செய்ததாகும். ‘இதனால் கவிதை எடுத்துரைப்பு முறையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தனது மேகநாத் வடா காவியத்தில் கிரேக்க புராணத்தில் காணப்படும் அழகிய நயங்களை வங்க மொழிக்கு கொண்டு வந்தார். புதிய உணர்வுகளையும் வடிவங்களையும் அறிமுகம் செய்து வங்காள மொழிக் கவிதையை மறுவரைவு செய்து தனது வாசகரை கவர்ந்தார்.’23 இது தான் அவர் வேண்டியது. ‘கிரேக்க புராணத்தின் அழகிய நயங்களை எங்களுடையதாக மாற்றுவது எனது அவாவாகும். இதில் எனது படைப்புத் திறனை முடிந்தளவு வெளிப்படுத்தியுள்ளேன். நான் வால்மீகியில் இருந்து குறைவாகவோ எடுத்துக் கொண்டேன். நீங்கள் இக்கவிதையில் இந்து அல்லாத பண்புகள் உள்ளன என்று முறையிடக் கூடாது. நான் கிரேக்க புராணக் புராண கதைகளை இரவல் பெறவில்லை. ஆனால் கிரேக்கர் எழுதுவது போல எழுத முயன்றுள்ளேன்.’24 மதுசூதன் வங்காளி இலக்கியத்தில் தான் புரட்சி செய்கிறேன் என்பதை உணர்ந்திருந்தார். செர்மிசாவை வேளியிட்ட பின் கௌடாஸ் பசாக் என்ற நண்பருக்கு எழுதினார், ‘இந்த நாட்டின் இலக்கியத்தில் இதற்கு நிரந்தரமான இடம் உள்ளது… செர்மிசா எனக்கு வங்காளி எழுத்தாளர்களில் முதன்மை இடத்தை பெற்று தரும்.’25 வசன கவிதையை அறிமுகம் செய்த போது எழுதினார்: ‘உனக்கு நான் வங்காள மொழியை கிண்டல் அடித்துள்னேன் என்று ஐரோப்பியர்கள் யாரும் சொல்லி இருக்கலாம். அது உண்மை தான். நான் இப்போது அறிமுகம் செய்துள்ள வசன கவிதைகள் அமெரிக்கர்கள் கூறுவதைப் போல ஆங்கிலேயர்களை உதைக்கும். பகிடியை விட்டால் வசன கவிதைகள் எங்கள் மொழிக்கு வளத்தை கொண்டு வரும்’26இன்னொரு கடிதத்தில் எழுதினார் ‘எனது வார்த்தைகளை கொஞ்சம் கேளுங்கள், காலகதியில் எங்கள் மொழி வசன கவிதைகள் ஐரோப்பியர்களின் கவிதைகளை விஞ்ஞா விட்டாலும் சமதையாகவாவது இருக்கும்.27 வங்க மொழியில் மாற்றங்களை செய்கிறேன் என்ற பிரக்ஞை மதுசூதனுக்கு இருந்தது. ‘நான் முசுப்பாத்தியாகதான் கவிதை எழுதத் தொடங்கினேன். பின்னர்தான் தெரிந்தது, நான் எங்கள் தேசிய கவிதையை கைதூக்கி விடும் காரியத்தை செய்கிறேன் என்று. எந்த வகையிலும் அவை எதிர்கால வங்காளிக் கவிஞனுக்கு கவிதை என்றால் என்ன என்பதை எடுத்துரைக்கும். அவை அவனுக்கு கிருஷ;ணநாதரில் இருந்து(மோசமான கவிதையின் தந்தை) கவிதை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை உணர்த்தும’28

உண்மையில் மதுசூதன் கைகளில் வங்காள மொழி தனது இடைக்காலத் தன்மையை களைந்து விடுதலை அடைந்தது; நவீனத்துவத்தை நோக்கி வீறுநடை போட்டது. அவர் வங்காளி மொழியில் வசன கவிதையையும் சொனற் பாக்களையும் அறிமுகம் செய்து வைத்தார். அவர் சமஸ்கிருத மயப்பட்ட வங்காளி மொழியை கையாண்டார்.29 பேச்சு மொழி வழக்கை நையாண்டி நாடகங்களுக்கும் செம்மொழி வழக்கை காவியங்களுக்கும் கையாண்டார்.

மதுசூதன் தனது புனைவுகளில் இந்து காவியக் கதைகளை தன்னிச்சையாக விபரிக்கிறோம் என்பதை உணர்ந்திருந்தார். அவர் எழுதினார், ‘நண்பரே, நான் உனக்கு சொல்ல வேண்டும், ஒரு கிறுக்குத்தனமான கிறித்தவ இளைஞனாக நான் இருந்ததால் இந்து சமயத்தை கவனமாக கையாளவில்லை. எங்கள் முன்னோர்களின் புராணங்களின் அருமையை நான் இப்போது உணர்கிறேன். அவற்றில் நிறைய கவித்துவம் உள்ளது. ஆளுமையுள்ள ஒருவன் அழகிய படைப்புகளை அவற்றிலிருந்து படைக்க முடியும்.’30 இந்து ஆண்,பெண் கடவுளர்களைப் பற்றி எழுதும் போது பாரம்பரிய துதிகளை அவர் தவிர்த்துக் கொண்டார். அவர் எழுதியதெல்லாம் தெய்வீக அருளை மறுதலித்த ஒருவனின் எண்ணங்களாகும். கடவுளின் பெருமையை பேச அவரால் முடியவில்லை.31

அவர் தனது புனைவாக்கங்களுக்கு இந்து புராணங்களை அதிகம் நாடவில்லை. இஸ்லாமிய வரலாற்றில் வரும் கர்பலா என்ற கதை காவியம் ஒன்றை படைக்க தோதானது என்பதை உணர்ந்து செயல்பட்டார்.32 டில்லி சுல்தான்கள் காலத்தில் ஆண்ட ராசியா என்ற பேரரசியை தனது காவியத்துக்கு கருப்பொருளாக்கினார்.34 இது அக்காலத்தில் மிகவும் விதிவிலக்கான காரியமாகப்பட்டது. இந்த வகையில் மது முஸ்லீம் வளங்களை கையாண்ட முதலாவது நவீன வங்க எழுத்தாளர் என்று கணிக்கப்படுகிறார். அவர் கேசப் கங்குலி என்னும் நடிகருக்கு எழுதிய கடிதமொன்றில் ‘நாங்கள் இந்திய முஸல்மான்களின் விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் எங்களை விட பயங்கரமானவர்கள். அவர்களின் பெண்கள் கடுமையாக மூடி வைக்கப்பட்டுள்ளனர்.’35

இவ்வாறான செயல்பாடுகள் மதுசூதன் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களாகும். அவர் இடைக்காலம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் காலகட்டத்தில் பிறந்தவர். அவர் காலத்தில் யன்னல் திறக்கத் தொடங்கி இருந்தாலும் இன்னும் புதுக்காற்று வீசத் தொடங்கவில்லை. மதுசூதனின் முயற்சியால்தான் வங்காள மொழி ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியை கடந்து நவீன காலத்துக்குள் பிரவேசித்தது என்று சொல்லலாம்.36 ஒரு கடிதத்தில் அவர் கூறுகிறார்: ‘எங்கள் மொழி அழகான மொழி. அதை வளப்படுத்துவதற்கோ சீர்திருத்துவதற்கோ அவசியமில்லை. நாங்கள் எங்கள் மொழியில் பேசினால் அது உலகத்துக்கு கேட்கும். அவ்வளவு வளமானது எங்கள் வங்காள மொழி.’1865ல் கௌடாஸ் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் வங்காள மொழிக்கு அதிகம் சேவை செய்ய முடியவில்லை என்று மனவருத்தப்பட்டார்.37 ‘ என்னை நம்புங்கள் நண்பரே, எங்கள் வங்காள மொழி மிகவும் அழகிய மொழி. அம்மொழியில் சீரான கல்வி இன்மையால் அம்மொழி பற்றி தப்பபிப்பிராயம் கொண்டிருந்தேன். அதைப் படிக்க முழு நேரத்தையும் ஓதுக்க விரும்பினேன். ஆயினும் என்னிடம் அதற்கு போதிய வளமில்லை. ஆயினும் நான் இதுவரை செய்ததை இட்டு சமூகம் திருப்தியடையவே செய்யும்.’ மதுசூதன் தனது நித்தியமான படைப்புகளை ஆங்கில மொழியை விட தனது தாய்மொழியில்தான் அதிகம் படைத்துள்ளார்.

விலை மதிப்பற்ற கற்களை
தன்னுள் பதித்துள்ளது எனது தாய்மொழி
அதனை நான் அறியாமல்
நாடு நாடாய் அலைந்தேன்
பேராசை கொண்ட வாணிபக் கப்பல்
துறைமுகம் துறைமுகமாய் அலைவதைப் போல
ஒரு நாள் என் கனவில் ஒரு தேவதை தோன்றி
உனது மொழியில் நிறைந்த செல்வங்கள் உள்ளன
நீ ஏன் பிச்சைக்காரனைப் போல அலைகிறாய்
சகல மகிழ்ச்சிகளையும் பறி கொடுத்தவனாக என்றாள்.38

ஒரு கவிஞனாக மதுசூதனின் செயற்பாடுகள் கலாசார எல்லைக்குள் அடங்கி இருந்தன. அவற்றின் அரசியல் சம்பந்தம் ஆங்கில இலக்கியத்தில் அடைந்த ‘தோல்வி’க்குள் கிடக்கிறது. அவரின் சுதேசியத்துக்குள் திரும்பல் ஆழமானது. இது 19ம் நூற்றாண்டு கலாசார தேசிய வாதத்தின் பிரதிபலிப்பாகும.; மதுசூதனின் காலமும் வாழ்வும் இந்திய அடையாளம் முகிழ்ந்து வந்த காலகட்டத்தை சேர்ந்தது. அக்காலத்தில் பிரித்தானிய காலனித்துவ வாதிகள் தமது பிடியை இந்தியா மீது இறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் குறுக்கறுப்பு 2000 ஆண்டுகால பழைமையான சமூக அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்த முற்பட்டது. ஐரோப்பிய கருத்துக்களின் செல்வாக்கால் அப்பழைமையான நாகரிகம் மீள் உருவாக்கம்; அடைந்து கொண்டிருந்தது. இதில் காலனித்துவவாதிகள், மிசனறிகள், சீர்திருத்தவாதிகள் ஆகியவர்களின் பங்களிப்புகள் அடங்கியுள்ளன.39 இவற்றால் மாற்றமடைந்து வந்த இந்திய நாகரிகம் தனது இந்து அடையாளத்தை தக்கவைக்க போராடியது. அது தன்னுள் பிற்போக்கு அம்சங்களையும் பார்ப்பனிய இயல்புகளையும் அடக்கி இருந்தது. அவை கட்டித்த தன்மையும் மீண்டெழும் தன்மையும் கொண்டவை. பிரத்தியேகமானவை, சமூகப் பூசல்களை உருவாக்கும் இயல்பின, சாதி உணர்வை பேணுபவை. அது தந்தமை வாதத்தின் வெளிப்பாடாகும் அல்லது அரசியல் அடக்கு முறையின் அல்லது அச்சுறுத்தலின் கலாசார மீட்பு வாதமாகும்.40

மதுசூதன் ஒரு பூரண மறுமலர்ச்சி மனிதனாவார். அவர் கூரிய முரண்பாடுகளின் மத்தியில் வாழ்ந்தார். அவர் இம்மை வாதியாகவும் சர்வ தேசிய வாதியாகவும் செயல்பட்டார். அவர் சமூக சீர்திருத்த வாதி என்று பாசாங்கு காட்டவில்லை. சுதேச கல்வி, இந்து விதவா விவாகம், இந்திய முசல்மான்கள், இந்து மறுமணம் பற்றி திரரவிடர் கண்டனம், இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம், இம்மைக் கல்வியின் அவசியம், சமகால அச்சு ஊடகங்களை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லல் போன்ற பொருட்களைப் பற்றியெல்லாம் எழுதியுள்ளார். அவற்றை எல்லாம் பழைமைவாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை; வெறுத்தனர். மதுசூதன் அக்காலத்தில் மேலெழுந்து வந்த புதிய கலாசார அரசியலுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் காரணமாக சமூகத்திலிருந்து புறமொதுக்கப்பட்டார். அவரது இலக்கிய முயற்சிகள் தூற்றப்பட்டன் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொது மக்களின் பரிகாசத்துக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாறான தாக்குதலுக்கு முதலில் உள்ளானவர் மதுசூதன் இல்லை. அது ராம் மோகன் ராயாகும.;41,42 அவரின் புரட்சிகர சிந்தனை கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. ஆத்திரம் கொண்ட கும்பல் அவரை வீதியில் வைத்து தாக்கியது.43 அவர் இந்துக் கல்லூரி கொமிட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.44 ராம் மோகனுக்குப் பின் இந்த எதிர்ப்பை எதிர்கொண்டவர் டெரோசியோவாகும்.45 வளர்ச்சியடைந்து கொண்டிருந்த இந்து அடையாளம் டெரோசியோவால் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்து கல்லூரி பணிப்பாளர் குழு சகல துயரங்களுக்கும் காரணம் டெரோசியோவென்று முடிவெடுத்து அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது. மேலும் அது ‘இந்து சமயத்துக்கு எதிர்ப்பை காட்டும் மாணவர்கள், பாரம்பரிய நம்பிக்கையை கண்டிக்கும் கூட்டங்களுக்கு செல்கின்ற மாணவர்கள அனைவரும் கல்லூரியிலிருந்து நீக்கப்பட வேண்டும், பாடப் புத்தகங்கள் அல்லாத புத்தகங்கள் வாசிக்க அனுமதிக்கப்பட கூடாது.’46 என முடிவெடுத்தது. மதுசூதன் சமூக சீர்திருத்த வாதியோ பொதுச் சேவையில் உள்ளவரோ இல்லையாதலால் இவ்வாறான கண்டனங்களுக்கு ஆட்படவில்லை.47 ஆயினும் பழைமைவாதிகளின் எதிர்ப்புக்கு உள்ளானார். இந்துக்கள் பற்றிய அவரது நோக்கு பொதுவானது. ழுn வாந ர்iனெர வில் அவர் எழுதினார், ‘நான் சொல்கிறேன்,இந்துக்கள் புராதனமானவர்கள். அவர்கள் தள்ளாடிக் கொண்டு ஒழுக்க புதை குழிக்குள் செல்கிறார்கள். அவர்களுக்கு மீட்சியில்லை. அவர்கள் சாகப் போகிறார்கள். அழகிய படகொன்று பாறையில் மோதி உடையப் போகிறது.’48

மைக்கேல் மதுசூதனோடு முரணித்தல்: மற்றமையின் அரசியல்

மதுசூதன் கலகக்காரனாக ஒடுகாலியாக கிளர்ச்சிக்காரனாக இருந்தார். அவரால் ‘வெற்றுப் பாதையில் திரும்பத் திரும்ப செல்வதை சகித்துக் கொள்ள முடியாமலிருந்தது.’ 49அவர் அந்நிய மதத்தில் இணைந்திருந்தமையும் ‘யவன’ மொழியில் எழுதத் தொடங்கி இருந்தமையும் ‘மிலேச்ச’ நாட்டுக்கு இடம்பெயர எத்தனிக்கின்றமையுமே அவர் இந்து திருவுருவங்களை இந்து அல்லாத பாங்கில் சித்தரிக்க காரணங்கள் என்று சொல்லப்பட்டன. நியூஸ் பத்திரிகைகள் அவரை வங்காளி சாகேப்(டிடயஉம நுரசழிநயn) என்று ஏளனம் செய்தன.50 அவர் இறந்த போது ஓரு செய்திப் பத்திரிகை அளவுக்கதிகமான மதுபாவனை என்ன விளைவுகளை கொண்டுவரும் என்பதை மதுசூதன் வாழ்க்கையில் இருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏளனமாக எழுதியது.51 வங்காளி இலக்கியத்தில் மதுசூதனின் புதுமையாக்கங்கள் ஆழமாக வேரூன்றிய பின்பே அவர் பற்றிய மதிப்பீடுகள் ஆரம்பமாயின. வங்காள மொழி இடைக்கால தன்மையில் மூழ்கிக் கிடந்த காலகட்டத்தில் மதுசூதனின் வருகை நிகழ்ந்தது. ஓரேயோரு ஒளிக்கீற்று நவீனமானவர் என்று பூரணமாக சொல்ல முடியாத ஈஸ்வர சந்திர குப்தா என்பவரின் படைப்பிலக்கியங்களாகும்.52 மதுசூதனின் கவிதை, நாடக வெளியீடுகள் வங்காள வாசகரை இரு கூறாக்கியது.53 ஒரு பகுதியினர் அவரின் படைப்புகளை கைதட்டி வரவேற்றனர். மற்றப் பிரிவினர் கடுமையாக எதிர்த்தனர். பின்னவர்கள் வங்காள மொழிச் சொற்களையும் தொடர்களையும் மதுசூதன் தன்னிச்சையாக உபயோகிப்பதை கண்டித்தனர்.54 மற்றவர்கள் அவரைப் பாராட்டினர். வசன கவிதையை வங்காள மொழிக்கு அறிமுகம் செய்தமை சிறப்பான செயல் என்றனர்.55
மைக்கேல் மதுசூதன் தத்தரின் வாழ்க்கை வரலாற்றை முதலாவதாக எழுதிய ஜோதிந்திர நாத் பாசு சிரமமெடுத்து அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை திரட்டினார். இது நூலாக 1890ல் வெளிவந்தது. கவிஞரை பற்றி வாழ்க்கை வரலாற்று நூல் ஓன்றை எழுதிய விமர்சகர் பிரேமதா நாத் பிஸ்சி பாசுவின் நூல் கவிஞரின் துயரங்களுக்கு அவர் தனது சொந்த மதத்தை கைவிட்டு அந்நிய மதத்துக்கு மாறியதே காரணம் என்று கூறியுள்ளதை தவிர மற்ற விடயங்களில் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிடுகிறார்.56 பாசு தனது நூலை பின்வரும் அறிமுகத்துடன் தொடங்குகிறார்:

ஆங்கில மொழி, இலக்கியங்களின் வருகையால் நாங்கள பெருமளவு நன்மை பெற்றோம் என்பதில் ஐயமில்லை. இந்த ஆங்கில மொழி, இலக்கியங்களின் அதீத பாவனையால் நாங்கள் எங்கள் தேசிய அடையாளத்தை இழந்தோம் என்பதும் உண்மையாகும். இந்த விடயத்தை தெளிவாக எடுத்துக்காட்ட நல்ல உதாரணம் மைக்கேல் மதுசூதன் தத்தராவார். நீண்ட கால ஆங்கில மொழிப் பாவனை இந்து சாதியினதும் அதன் தனித்துவ இருப்பையும் ஆபத்துக்குள்ளாக்கியது. எங்கள் தேசியத்தை உயிர்க்க வேண்டுமானால் நாங்கள் சமஸ்கிருதத்தை தழுவிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை…மதுசூதன் திறமை வாய்ந்த ஆய்வறிவு பூர்வமான மனிதனாக இருந்தாலும் சுய கட்டுப்பாடு இல்லாமை அவரை துயர வாழ்வுக்கு இட்டுச் சென்றது. அவர் தனது சொந்த மதத்திற்கு துரோகம் இழைத்தார்; பெற்றோருக்கும் சமூகத்திற்கும் செய்யும் கடமையை மறந்து மனம் போன போக்கில் செயல்பட்டார். தனது தனிப்பட்ட இன்பம் ஒன்றையே பிரதானமாக கொண்டார். மதுசூதனின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள இந்த சமூகத்திற்கு நிறைய உள்ளன57

மதுசூதன் தனது வாழ்க்கை காலத்தில் புறக்கணிப்புகளுக்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. அவரது முதலாவது வாழ்க்கை வரலாறு அவர் காலமாகி இருபது வருடங்களின் பின்னர் வெளிவந்தது. அவரின் நெருங்கிய நண்பரான பூதேவ் முக்கோபாத்தியாயவும் கூட அவர் கிறித்தவ மதத்திற்கு மாறியதை மன்னிக்கவில்லை.58 ஒரு செய்திப் பத்திரிகை அவரை கபீல நிற ஐரோப்பியன் என்று நக்கல் அடித்தது. பொருத்தமாக பெயரிடப்பட்ட வங்காளி சாகேப் என்ற கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிட்டார்: ‘மைக்கேல் மதுசூதன் இஙகிலாந்தையும் ஐரோப்பாவின் ஏனைய இடங்களையும் சுற்றி பார்த்து வந்துள்ளார். அங்குள்ள இலக்கியத் தோட்டங்களின் மலர்த்தேனை பருகியுள்ளார். அவர் அங்கிருந்து எதை எங்கள் இலக்கியத்துக்கு கொண்டு வந்தார்? அவர் எங்கள் நாட்டுக்கு பொருத்தமானது எதையாவது கொண்டு வந்திருக்கலாமே. அதையெல்லாம் அவர் செய்யமாட்டார்’59 மதுசூதன் சமூகத்தில் மேற்கு மயப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந்தும் அவ்வகுப்பினரின் பொய்மைகளையும் இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்தினார். அவர் தனது நையாண்டிப் புனைவுகள் இரண்டை(இது ஒரு நாகரிகமா?,பழைய பறவையில் புதிய சிறகுகள்) கல்கத்தாவில் மேடையேற்ற முயன்ற போது அவ்வகுப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பை காட்டினர்.60 தாங்கள் கேலி சித்திரமாக்கப்படுவதை எதிர்த்தனர். வாய் கூசும் வார்த்தைகளால் அவரை வைதனர்.61

இந்து இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட மேக நாத் வாட் காவியம்(மேக நாதனின் கொலை பற்றிய காவியக் கதை) என்ற படைப்பு மேற் குறிப்பிட்ட காவியம்(இராமாயணம்) பற்றிய மதுசூதனின் சச்சைக்குரிய கருத்தை வெளிக்காட்டுகிறது. அதற்கு ஆரம்பத்தில் தாகூரிடமிருந்து கடுந்தாக்குதல்; ஒன்று வந்தது.62 பதினைந்து வயதுப் பிராயத்தினராக இருந்த தாகூர் அப்போதே எழுத ஆரம்பித்து விட்டார்.63 அக்கட்டுரை பாரதி சஞ்சிகையில் முதல் வருடத்தில் தொடராக வெளிவந்தது. ஆயினும் உலக மனிதாபிமானியாகவும் சர்வதேசிய வாதியாகவும் பிற்காலத்தில் மலர்ந்த தாகூர் தனது மதுசூதன் பற்றிய முன்னைய கருத்தை பிற்பாடு மாற்றிக் கொண்டார்.64அதற்கு பட்சாத்தாப்பட்டோ என்னவோ மதுசூதனின் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் பெயர்த்து வெளியிட்டார்.65 மதுசூதனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜோதிந்திர நாத் பாசு அவரின் இந்துவல்லாத நோக்கை விமர்சிக்கும் தொடர்பில் தாகூரின் மேற்போந்த கட்டுரையை மேற்கோள் காட்டியிருந்தார். அதனை மறுத்து தாகூர் எழுதினார்: ‘பதினைந்து வயதுப் பையனாக இருந்து ஆசிரியர் எழுதி மறந்து போன கட்டுரையை விமர்சகர் இப்போது தூக்கிப் பிடிக்கக் கூடாது. தனது அப்போதைய முரட்டுத் தனத்திற்காக ஆசிரியர் இப்போது மன்னிப்புக் கேட்கிறார் என்பதை விமர்சகருக்கு அறியத் தருகிறேன.’;66பல வருடங்களுக்குப் பின்னர் திறமையான விமர்சகரும் கவிஞருமான புத்த தேவ பாசு மதுசூதனைக் கண்டித்து ஓரு கட்டுரை ஒன்றை எழுதினார். ஆயினும் அவர் தாகூர் போல மன்னிப்பு கேட்கவில்லை67

மதுசூதனுக்கு இந்து சமயம் மூடத்தனத்தின் கோர்வையாகப்பட்டது; இராமனும் அவன் பரிவாரமும் பரிகாசத்திற்கு உரியவர்களா தோன்றினர். அவர் மேக நாத் வட் காவியத்தில் இந்து கடவுளர்களையும் நாயகர்களையும் பரிகாசம் பண்ணியதற்கு மனவருத்தம் அடையவில்லை. ‘ஒரு பெரும் இலக்கிய புரட்சியாளனாக நான் நமது மக்கள் நூற்றாண்டுகளாக வணங்கி வரும் இராமஇலக்குமணர்களை தரம் குறைத்திருக்கிறேன். அவர்கள் இடத்தில் பெருமைக்குரிய இராவணனின் மகனாகிய மேகநாத்தை தூக்கி நிறுத்தியுள்ளேன். அவன் ஓர் உயர்ந்த மனிதன். அந்தப் போக்கிரிப் பயல் விபீஷணன் குரங்குப் படையை கடலுக்குள் தள்ளி இருக்க வேண்டும் இல்லையா?’

இந்த அடிப்படையில் அவர் இராவணனின் சிறப்புகளையும் இராமனின் சிறுமைகளையும் நோக்கினார். அவரைப் பொறுத்த வரையில் இராமாயணத்தின் நாயகன் இராமன் அல்ல, இராவணனே ஆகும். அவனின் அரக்க குணம் ஆண்மையின் அடையாளமாக அவருக்குப்பட்டது. அவர் இராவணனின் இயல்புகளை இயல்பான ஆணின் நடத்தை என இனம் கண்டார். மற்றப்பக்கமாக இராமனை ஏளனம் செய்தார். அவனை பலவீனமானவனாக, பெண்மைத் தன்மை வாய்ந்தனாக சித்தரித்தார்.68
இவ்வாறு புனித காவியத்தை அவதூறாக சித்தரிப்பதை கண்டு கொதித்துப் போனவர்கள் இராவணனுக்கும் மதுசூதனுக்குமடையே தனிப்பட்ட வாழ்வில் ஒற்றுமையை கட்டமைத்தனர். இருவரையும் ஓத்த பண்பு கொண்டவர்களாக- அகங்காரமும் சுய கட்டுப்பாடு இல்லாதவர்களாக –உருவகித்தனர். இவையே அவர்களின் துயரத்துக்கு காரணம் என்றனர்69. முன்னர் கவிஞருக்கு ஒரு பாராட்டு விழாவை ஒழுங்கு செய்து நடத்திய காளி பிரசன்னா சிங் இராமாயணத்தின் வில்லன்களான இராவணனும் மேகநாதனும் மதுசூதன் கைகளில் நாயகர்களாக மாறி உள்ளதால் மாபெரும் காவிய கர்த்தா வால்மீகி, இனி புதைகுழிக்குள்தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.70 அமிர்த பஜார் பத்திரிகையில் வெளி வந்த விமர்சனமொன்று மேக வடா காவியத்தை சுசுண்டர் வாடா காவியம் (ஓரு எலியின் கொலை பற்றிய காவியக் கதை) என்று நக்கல் அடித்து எழுதியது.71 ராஜ் நாராயணணோடு சேர்ந்து மதுசூதனை மிகக் கடுமையாக விமர்சித்தவர் ரம்காட்டி நியரட்ணா வாகும். அவர் அக்காவியத்தில் பெறுமதியான தொன்றுமில்லை என்றார். அவர் ‘கவிஞர் தன்னைப் பற்றி பெருமையாக என்ன நினைத்தாலும், புத்திஜீவிகள் என்று சொல்பவர்கள் என்ன சொன்னாலும்,.. நாங்கள் வெளிப்படையாக சொல்கிறோம் எங்களைப் போல ஓரு கைவிரல் எண்ணிக்கையுள்ளவர்களை தவிர யாரும் அவரின் வசன கவிதைகளை விரும்பமாட்டார்கள்’72

மதுசூதனின் கடிதங்களையும் எழுத்துக்களையும் ஆராய்ந்தால் அவர் இந்து சமயத்தை மாத்திரம் விமர்சிக்கவில்லை என்பது வெளிப்படுகிறது. அவர் இஸ்லாம், கிறித்தவம் உட்பட எல்லா மதங்களிலும் உள்ள அர்த்தமற்ற சடங்காசாரங்கள், பிற்போக்கு நடைமுறைகள் என்பனவற்றையெல்லாம் சாடியுள்ளார். அவர் தான் இணைந்து கொண்ட சேர்ச்சில் உள்ள அதிகாரப் போக்கு, சர்வாதிகார நடைமுறை என்பவற்றையெல்லாம் சாடினார். நணபருக்கு எழுதிய கடிதமொன்றில் தனது முஸ்லீம் நண்பர் குறித்து ‘அவர் இன்னும் இஸ்லாம் தடைசெய்துள்ள உணவுகளையும் பானங்களையும் அருந்தத் தொடங்கவில்லையா’ என்று வினவினார்.73 அவர் முஸ்லிம் பெண்களின் அறியாமையை களைய நவீன கல்வி அவர்களிடையே பரவுவது அவசியமானது என்றார்.74 அவர் சீர்திருத்த வாதி இல்லை என்றாலும் சுதேசிகளின் கல்வி(1851) இந்து விதவைகளின் மறுவிவாகம்(1851) மொகலாயர். ஆங்கிலேயர் ஆட்சிகளின் சாதக பாதகங்கள் என்ற பொருள்கள் பற்றியெல்லாம் எழுதியுள்ளார்.75 அவருடைய இந்துப் பெண்கள் என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் இன்றைய நவீன காலச் சிந்தனையின் தரத்தில் உள்ளதை காணலாம்.

இந்தியாவிலும் மற்றும் கீழைத் தேயங்கள் எல்லாவற்றிலும் பெண்கள் ஆண்களின் மோகப்பசிக்கு இரையாகக் கூடிய விலங்குகளாகவே கருதப்படுகின்றனர். எல்லாம் வல்லவரால் வரையறுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த மிலேச்ச மனேபாவத்தால் பெண் பாலார் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் தங்களைக் கீழ்நிலைக்கு உரியவர் என்று கருதுவது மாத்திரமன்றி பேசும் மிருகங்கள் எனவும் எண்ணுகின்றனர்;…இந்தியா போன்ற நாடுகளில் பிள்ளைப் பராமரிப்பு பெண்களுக்கென்று ஓதுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு கல்வி அவசியமாகிறது. ஏனென்றால் பிள்ளைகள் தமது அறிவை தாய்மார்களின் வளர்ப்பிலிருந்தே பெறுகிறார்கள். பெண்களை அறிவுடையராக்குவதால் நாடு நிச்சயமாக நாகரிகத்தை நோக்கி நகரும். எதிர்காலத்தில் தத்துவ ஞானிகளும் கவிஞர்களும் தோன்ற வழி சமைக்கும்76

அவர் தனது தலைசிறந்த கடைசிப் படைப்பான விரன்கான காவியத்தை ஈஸ்வர சந்திர வித்தியா சாகருக்கு அர்ப்பணித்திருந்தார். ஏனென்றால் வித்தியாசாகர்தான் முதன்முதலில் இடைவிடாமல் இந்தியப பெண்களின் முன்னேற்றத்துகாக பாடுபட்டவர். இந்த காணிக்கையை வெறும் புலமைச் சடங்கு என்று கொள்ள முடியாது. இது பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட முன்னோடிக்கு- ஒரு பெண்ணிய இயக்கம் ஓன்றை ஏற்படுத்தி நடத்தி காட்டிய மூலவருக்கு- மதுசூதன் வழங்கிய தார்மீக காணிக்கையாகும். இதை விட மதுசூதன் வித்தியாசாகர் மீது சொனற் பாக்களை புனைந்துள்ளார். அவர் பலதார மணத்தை வெறுத்தார், மனு-சம்கிகா பலதார மணத்தை ஆதரிக்குமென்றால் அதை தூக்கி பீயூரி கங்கா ஆற்றில் வீசி எறியுங்கள் என்றார். இந்த வார்த்தைகள் வைதிக இந்துக்கள் மத்தியில் ஆத்திரத்தை தூண்டி விட்டன.77

மதுசூதனின் வாழ்க்கையில் சோகத்தை கட்டமைக்க அவரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் முனைந்தனர். அவர் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த போதும் கொடிய வறுமையில் உழன்றார்;;; இடத்துக்கிடம் அலைந்தார்;; கடன் வாங்கி சீவிக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளானார்; பெற்றோராலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டார். பல வித நோய்களுக்கும் துயரங்களுக்கும் உட்பட்டதால் அவரது வாழ்வும் குடும்பத்தவர்களின் வாழ்வும் சுருக்கத்தில் முடிந்தது. அநாதையாக இறந்து போனார். கவிஞரின் வாழ்க்கையில் துண்டு துண்டாக நிகழ்ந்த இவ்வாறான சம்பவங்களை கோர்வை படுத்தி ‘சோகத்தை’ கட்டமைக்க அவரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் முயல்கிறார்கள். இந்த கட்டமைப்பு நடவடிக்கைக்கு பின்னால் அரசியல் நோக்கங்கள் ஒழிந்துள்ளன என்பது தெளிவானது. அதாவது அவர் மதம் மாறியதற்கு பழி தீர்ப்பது. இந்த செயற்பாடு அவரின் முதலாவது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜோதிந்திர நாத் பாசுவால் தொடங்கி வைக்கப்பட்டதாகும். மற்றவர்களுக்கு இது ஒரு கற்பனையாக பட்டது. மதநிந்தனை செய்தால் வறுமையும் வேதனையும் சம்பவிக்கும் என்றால் மதுசூதனை விட நஜ்ருல் இஸ்லாமே கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டியவர். அண்மைக் கால வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான குலாம் முர்சீட், இலக்கிய வரலாற்று ஆசிரியரான சிசிர் குமார் டாஸ் என்பவர்கள் கூட இந்த கற்பிதத்தில் இருந்து மீளவில்லை. மர்சீட் மதுசூதன் தனது காலத்துக்கு முன் பிறந்தவர் என்ற இன்னொரு கற்பிதத்தையும் கட்டமைக்க முயல்கிறார். ஆனால் அவரின் நூலிலேயே இந்தியா நவீனத்துக்கு மாறிக்கொண்டிருந்த காலத்தின் உற்பத்திதான் மதுசூதன் என்று முர்சீட் கூறுகிறார். இந்திய நவீனத்துவத்தின் முன்னோடிகளான ராம் மோகன், வித்தியா சாகர், டெரோசியோ போன்றவர்களை ஒத்தவர்தான் மதுசூதன். அவர்கள் சமூக சீர்திருத்த துறைகளில் உழைக்க மது இலக்கிய துறையில் செயல்பட்டார். இந்த வகையில் சரியான நேரத்தில்தான் அவர் பிறந்திருக்கிறார். அவரது கருத்துக்களும் செயல்பாடுகளும் அவர் காலத்தோடு பொருந்தியவை. அக்கால சமூக கலாசார சூழ்நிலைகள் அவரை மொழி,கலாசார, தேசிய துறைகளில் செயல்பட உந்தி தள்ளின. சிசிர் குமார் டாஸ் மதுசூதனின் துயரத்துக்கு காரணம் அவரின் புரட்சிகரமான செயல்பாடுகளாகும் என்கிறார்.

ராஜ் நாராயணன் பாசு என்பவர் மதுசூதனின் பிள்ளைப்பிராய நண்பராவர். அவரிடமிருந்தே விமர்சன மதிப்பீட்டு அணுகுமுறையை மதுசூதன் கற்றுக் கொண்டார். ராஜ் நாராரயணன் போன்ற கல்விமான்களின் ஆதரவு மதுசூதனின் படைப்பு முயற்சிகளுக்கு தேவையாக இருந்தது. உண்மையில் ராஜ் நாராயணன் கவிஞரின் ஆரம்ப கால வங்காள மொழிப் படைப்புகளை வாசித்து அவரை சிரஞ்சீவி என்று பாராட்டி இருந்தார். இதே நாராயணன் கவிஞர் இறந்த சிறிது காலத்தில் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். அவர் கவிஞரின் நோக்கம், புத்தாக்கம், மனப்பாங்கு என்பவைகள் இந்திய கலாசாரத்துக்கு அந்நியமானவை; எந்த வகையிலும் மதுசூதனின் எழுத்துக்களில் தேசியத் தன்மை இலலை என்றார்.81 1860க்களில் மதுசூதனின் கவிதையை வியந்து பாராட்டிய நாராயணன் பிற்காலத்தில் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.82அவர் இந்திய கலாசாரத்தின் பாலும் தேசிய வாதத்தின் பாலும் ஆழமாக ஈர்க்கப்பட்டிருந்தார். ராஜ் நாராயணன் ராம் மோகனின் பிரமசமாஜத்தில் இருந்து விலக்கிய குழுவை சேர்ந்தவராக இருந்தார். 1861ல் அவர் தேசிய பெருமையை வளர்ப்பதற்காக மிட்னாபூர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தாபித்தார். இந்து முதன்மையே தனது பிரதான நோக்கம் என்று அவர் கூறினார். அவர் 1865ல் நவகோபால் மிஸ்ரா, ஜோதிந்திர நாத் தாகூர் என்பவர்களுடன் இணைந்து தேசப்பற்றார்களுக்கான அமைப்பொன்றை நிறுவினார். அவர் தேசிய திருவிழாவை(இந்து மேளா) ஒழுங்கு செய்து நடத்தியமை அவரின் பெரும் சாதனை என்று கூறப்படுகிறது. புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் சுசோபான் சர்க்கார் ‘சிப்பாய் கலவரத்துக்கு பின்னர் இந்திய தேசிய உணர்வு ராஜ் நாராயணன் பாசுவை சுற்றியே சுழன்றது.’ என்கிறார்.83 புத்ததேவ் முகர்ஜி சிப்பாய் கலகத்துக்கு அரைநூற்றாண்டு கழித்து ஒரு கட்டுரை எழுதினார். அதில் இந்து ராச்சியம் ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு மராட்டிய வீரர் சிவாஜியின் பரம்பரையில் வந்த மகாராஜா ராமச்சந்திராவை அரசராக்கி ஆட்சி மொழியாக இந்தியை கொண்டு ஆளவேண்டும் என்ற தனது அவாவை வெளியிட்டார்.

இவற்றிலிருந்து மதுசூதன் பற்றிய ராஜ்நாராயணனின் கருத்து இலக்கியத்துக்கு புறம்பான காரணங்களால் உருவானது என்பது வெள்ளிடை மலை போலத் தெளிவாகிது.84 அவர் காலத்து செய்திப் பத்திரிகைகள் கூட அவர் அந்நிய மதத்திற்கு மாறியமை பற்றி அதிப்தி கொண்டிருந்தன. வித்தியா சாகரர் கூட திலோத்தமா சம்பாவு காவியத்தில் இந்து புராண பாத்திரங்களை தன்னிச்சையாக சித்தரித்துள்ளமையை விரும்பவில்லை. இது ஒன்றும் ஆச்சரியமானதில்லை. கல்கத்தாவில் அக்காலத்தில் வாழ்ந்த அறிவுஜீவிகள் வித்தியா சாகரில் மறைமுகமாக உள்ளார்திருந்த பார்ப்பனிய சார்பு நிலை பற்றி அறிந்திருந்தனர்.85 காலனியம் வருவதற்கு முன்பே பார்பனிய கருத்தியல்கள் பொது மக்கள் வாழ்வில் ஆழ ஊடுருவி இருந்தன.87 இவற்றின் பாதிப்புக்கு வித்தியாசாகரரும் உட்பட்டிருந்தார். இதனால் ஆழமாக சிந்திப்பவர்கள் அவரை குறைத்து மதிப்பிடும் நிலையேற்பட்டது.86 ஆயினும் காலப்போக்கில் திலோத்தமை பற்றிய தனது அபிப்பிராயத்தை வித்தியாசாகர் மாற்றிக் கொண்டார். இது மதுசூதனுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் மது ராஜ்நாராயணனுக்கு எழுதினார், ‘புகழ் பூத்த வித்தியாசாகரரும் தனது பிடிவாதத்தை தளர்த்தி திலோத்தமையில் சிறப்புகளை தேட தொடங்கிவிட்டார். சோம் பிரகாஷ; கூட சாதகமாக பேச ஆரம்பித்துள்ளார்.’88 அவரது மகிழ்ச்சிப் பெருக்கு இரு வருடங்களுக்குப் பின்னும் குறையவில்லை என்பதை ராஜ் நாராயணனுக்கு எழுதிய பிறிதொரு கடிதத்தின் மூலம் புலப்படுகிறது. பக்கீம் சந்திர சட்டரஜி மதுசூதனின் இளைய சமகாலத்தவர்.89 அவர் மதுசூதன் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முதல் கல்கத்தா ரிவீயூவில் வங்காளி இலக்கியம் என்று மகுடமிட்டு எழுதிய கட்டுரையில் சில இடங்களில் பாராட்டியும் சில இடங்களில் விமர்சித்தும் இருந்தார். அவர் மதுசூதனை மகாகவியாக காணவில்லை. ஆயினும் சிறந்த சமகால வங்க மொழிக் கவிஞர்களில் ஒருவராக அவரைக் மதிப்பிட்டிருந்தார்.90 மேக நாத் காவியத்தில் சில சிறப்புகளை கண்டாராயினும் சொனற் பாக்களில் எந்த சிறப்புகளையும் அவரால் காணமுடியவி ல்லை.91 மதுசூதன் இறந்து இரண்டு மாதங்களின் பின்னர் அவருக்கு இரங்கல் குறிப்பாக வங்காள ஜேர்னலில் எழுதிய கட்டுரையில் கவிஞரின் படைப்புகளை மதிப்பிட்டிருந்தார்.92 இந்த மதிப்பீடு சற்று மந்தமானது என்று குலாம் மர்சீட் குறிப்பிடுகிறார். உண்மைதான். பக்கீம் மதுசூதனை மனதார ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறினார். இது பக்கீமின் உள்ளுணர்வுடன் சம்பந்தப்பட்டது. பக்கீமின் இம்மைசார்பு சந்தேகத்துக்கிடமானது; அவரின் சிந்தனையில் மேலோங்கி நின்றது இந்துத்துவாகும் ‘அவருக்கு இந்து சமயம் அழகு, உண்மை, ஞானம் ஆகியவற்றின் பரிபூரண கலவையாகப்பட்டது. இது அவரின் பேச்சுகளிலும் எழுத்துகளிலும் புலனாகிறது.’ 93அவரின் மிருளானி, ஆனந்த மடம், சித்தாரம் ஆகிய நாவல்களில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியற்ற இந்து ராச்சியம் ஒன்று பற்றி அவர் கனவு கண்டார். மதுசூதன் பற்றிய அவரின் மதிப்பீட்டை அவரின் நாவல்களான சீத்தாரம், நச்சுமரம், மிருனாளனி, ஆனந்த மடம் ஆகியவற்றில் அவர் வெளிப்படுத்திய கருத்துக்களை வைத்து கணிக்கலாம். மதுசூதனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பக்கீமுக்கு தெரியாததல்ல. 19ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் தொழிற்பட்ட ஓழக்க விழுமியங்களை அவரின் முதலிரு நாவல்கள் பிரதிபலிக்கின்றன. பக்கீமின் நாவல்களூடாக வெளிப்பட்ட தேசிய உணர்வுக்குள் மதுசூதனின் நவீனத்தை உள்ளடக்க முடியாது. பல வருடங்களின் பின்னர் வந்த ஆற்றல் வாய்ந்த கவிஞரும் விமர்சகருமான புத்த தேவ பாசு மதுசூதனை குறைத்து மதிப்பிடும் விமர்சனம் ஒன்றை முன்வைத்தார்.94 மதுசூதனுக்கு எதிராக புத்த தேவவின் கருத்துக்கள் வெறும் தப்பபிப்பிராயங்களே என்று அவரின் அபிமானிகள் கருதுகிறார்கள்.95

மதுசூதனின் மற்றமை அவரின் வாழ்வுடன் முடிந்து விடவில்லை. அவரது இறப்புக்கு பின்னும் அது தொடர்ந்தது; அவரின் உடலை அடக்கம் செய்வதில் அது வெளிப்பட்டது. அவர் கிறித்தவராக இருந்தாலும் அவர் வெள்ளைக்காரனோ ஆங்கில இந்தியரோ அல்ல. மதம் மாறியதற்குப் பின்னர் இந்து சமயத்தை அவர் கனம் பண்ணவில்லை. இதனால் அவரது உடலுக்கு உரிமை கோர யாரும் முன்வரவில்லை. மதுசூதன் தனது உடல் தனது மனைவியின் உடலுக்கருகில் கிறித்தவ முறைப்படி அடக்கம் செய்யப்படுவதை விரும்பி இருந்தார். வங்காள மேலோங்கிகள் குழாத்தில் உள்ள அவரின் நண்பர்கள் கடும் முயற்சி எடுத்தும் சேர்ச் இணங்கவில்லை. கடைசியில் மதுசூதன் இங்கிலாந்தில் இருந்த போது அவரால் உதவி பெற்ற மன்மோகன் கோஷ; கடுமையாக முயற்சித்து சேர்ச்சை இணக்கத்துக்கு கொண்டு வந்தார். வங்காள இலக்கியத்தின் தலைசிறந்த காவியக் கவிஞரின் இறப்பு ஒரு சலனமும் இல்லாமல் நடந்து முடிந்தது.96

நவீன இந்தியாவின் இந்து அடையாளத்தை கட்டமைத்த மதச் சார்புள்ள சக்திகளுக்கெதிராக மதுசூதன் செயல்பட்டார்.97 அவர் தனது வாழ்க்கை காலத்தில் தனது விமர்சகர்களுக்கு எதிராக செயற்பட்டதில்லை.98 அவர் தன்னை விமர்சித்தவர்களை பார்த்து ‘தள்ளி நில்லுங்கள், நெருப்பு. எனது விவரம் தெரியாத பையன்களே. எரிந்து போவீர்கள், கவனம்’ என்று விளையாட்டாக கூறினார்.99 அவர்களின் கண்டனத்தால் சில வேளை நிலைகுலைந்து போனார். அப்போது தனது நண்பருக்கு எழுதிய கடிதமொன்றில் ‘எனது அருமை நண்பரே, இந்த மனிதர்கள், பெருமைமிக்க, அமைதியான, தனிமை நாட்டமுள்ள மனிதனை உணரத் தவறுகிறார்கள்’என்று குறிப்பிட்டார்.100 வங்காள நாடு, மொழி என்பவற்றில் ஆழ்ந்த உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்த போதிலும் மதுசூதன் தனது பிள்ளைகள் ஐரோப்பியர்களாக வளர்வதை விரும்பினார். இந்த நிலைப்பாடு அவரின் தேசிய உணர்வை சந்தேகிக்க வைத்தது. தனது பிள்ளைகள் கலப்பினத்தவராக இருப்பதால் தன்னைப் போல இரண்டும் கெட்டான் நிலையில் வாழ்ந்து துன்பப்படக்கூடாது என்று அவர் எண்ணி இருக்கலாம்

மதுசூதன் இரு வகை அரசியலை எதிர்கொண்டார். ஒன்று அவரிடமிருந்த அரசியல். மற்றது அவரை சுற்றி இருந்தவர்களின் அரசியல். அவர் டேரேரசியா வழியாக வரும் அரசியலை ஏற்றிருந்தார். தேசியவாத மற்ற நிலையை அடைய அரசியலை ஒரு வழிமுறையாக டோரோசியன்கள் பின்பற்றினர். அவர்கள் நவீனத்திற்கு முந்திய நிலையை இந்து அடையாளம் களைந்ததாக இருக்க வேண்டும் என்றனர். அவர்கள் பொது வாழ்க்கையில் இரட்டை வேடம் போடுவதை வேறுத்தனர். ராம் மோகனைப் பின்பற்றுபவர்கள் அவரின் மரணத்துக்குப் பின் வெறும் வேடதாரிகளாக மாறிப்போய் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர். மதுசூதன் தான் பிறந்த இந்து அடையாளத்தை மறுத்து வேறு அடையாளத்தை தரித்து கொண்டமையே அவரது துயரத்துக்கு காரணம் என்ற கற்பிதத்தை சிலர் முன்னெடுத்தனர். இந்த இரு அரசியல் முறைமைகளின் மோதுகையில் இடைக்காலத் தன்மையை நவீனத்துவமும் குறுகிய பிரிவினை வாத, சமூகப் பூசல் அடையாளத்தை மதச்சார்பற்ற, தாராளவாத அடையாளமும் வென்று வெற்றிவாகை சூடின. ‘அட்லாண்டிக் கடலைக் கடந்து வாழ்வதற்கா புதை குழிக்கா’ என்று கவிஞர் ஒரு தடவை பாடினார். வங்காளக் கவிஞனாக தான் நினைவு கூரப்பட வேண்டும் என்பது அவரது கடைசி ஆசை என்பது அவர் தனக்குத் தானே எழுதிய கல்லறை வாசகத்திலிருந்து வெளிப்படுகிறது.

கடந்து போகிறவர்களே
சற்று நில்லுங்கள், நீங்கள்
வங்கத்தில் பிறந்திருந்தால்
இந்தப் புதைகுழியில், தாயின் மடியில் குழந்தை
உறங்குவது போல உறங்குபன்
ஸ்ரீ மதுசூதன்
அவன் தத்தர் குடும்பத்தில் தோன்றிய கவிஞன்
கபோடக்ஷh ஆற்றின் கரையில் உள்ள
சடாகரி ஊரினன்
அவனது தந்தை ராஜ் நாராயணன் பிரபு
தாய் ஜனாவி
மதுசூதன் தனது இலட்சியத்தில் வெற்றி அடைந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இடைக்காலத் தன்மைக்கும் நவீனத்துவத்துக்குமான போராட்டத்தில் பின்னதை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். வரலாற்றில் மற்றமையின் அரசியல் பூமராங்கா போன்றது. ஒரு பொழுது தேசிய உணர்வு குறைந்தவரென்றும் உயர்ந்த கவிஞர் இல்லை என்றும் சொல்லப்பட்டவர் இன்று வங்காள இலக்கியத்தில் மகாகவி என்றும் போற்றப்படுகிறார். வங்காள தேசியம் இன்று அவரின் பெயரை பெருமையுடன் எடுத்துரைக்கிறது. இதைப் பற்றி பக்கீம் சந்திரர் அன்றே தீர்க்க தரிசனமாக சொல்லிவிட்டார்:  ‘காலம் கனிந்துள்ளது, ஐரோப்பியா அநுசரணையாக மாறியுள்ளது; இனிய தென்றல் வீசத் தொடங்கியுள்ளது. எங்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. அக்கொடியில் ஸ்ரீ மதுசூதனின் பெயரை பொறித்து பறக்கவிடுங்கள்’101

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.