Home இலங்கை யாழ் பல்கலை மாணவர்களையும், சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் உடன் விடுதலை செய்..

யாழ் பல்கலை மாணவர்களையும், சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் உடன் விடுதலை செய்..

by admin


கடந்த 03 ம் திகதி வெள்ளிக்கிழமை படையினர் யாழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பழைய புகைப்படத்தை வைத்திருந்தனர் என்பதற்காகவும், மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் தியாகி திலீபனின் படத்தை வைத்திருந்தார் என்பதற்காகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளரையும், சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் பங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இப்புகைப்படங்கள் இருந்தமைக்காக கைது செய்வது அற்பத்தனமான நடவடிக்கை ஆகும். ஆயுதங்களைத் தேட வந்தவர்கள் அற்பத்தனமான காரணங்களுக்காக கைது செய்தமையை சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தை சார்ந்தவர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தென்னிலங்கையில் ஆயுதப்போராட்டத்தை நடாத்திய ஜே.வி.பி இன் தலைவர் ரோகண விஜேவீராவின் படத்தினை அக்கட்சியினர் பட்டி தொட்டியெங்கும் வைத்திருக்கின்றனர். அங்கு எவரும் கைதுசெய்யப்படவில்லை. இங்கு மட்டும் கைது செய்திருப்பது அற்பத்தனமான அரசியல் காரணங்களுக்காகவே ஆகும். தங்களுடைய ஆட்சி அதிகார நலன்களுக்கு புலிகள் மீள எழுச்சியடைகின்றனர் என்ற கற்பனைக்கதை அவர்களுக்கு தேவையாக உள்ளது. அதற்காக மாணவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டமை சட்டப்பிரச்சனையல்ல. அரசியல் பிரச்சனையே ! அரசியல் பிரச்சனையை அரசியல் வழிமுறைகளின் மூலமே தீர்க்க வேண்டும். எமது அரசியல் தலைமை இதனை ஜனாதிபதி பிரதமரோடு பேசித்தீர்ப்பதற்கு பதிலாக சட்டமா அதிபருடன் பேசி சட்டப்பிரச்சனையாக திசை திருப்ப முற்படுகின்றது. இந்த திசை திருப்பலையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசின் பங்காளிகளாகச் செயற்பட்டு அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவளித்த எமது அரசியல் தலைமைக்கு இது விடயத்தில் பொறுப்புணர்வு இல்லாதது மிகவும் கவலையளிக்கின்றது.

முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழ்த்தரப்பின் அமெரிக்க தலமையிலான மேற்குலக சார்பு அரசியலுக்காக தமிழ்க் கிறிஸ்தவர்களையே பெருமளவு இலக்கு வைத்தனர், தொடர்ந்தும் இலக்கு வைப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. படையினர் போர்க்கால மனோநிலையிலேயே தற்போதும் இருக்கின்றனர். ஆட்சி அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் தரப்பினர் தமிழ்ப் பிரதேசத்தின் அமைதி நிலையைக் குழப்ப விரும்புகின்றனர். சொற்ப காலம் நடைமுறையிலிருந்த ஜனநாயகவெளி தமிழ் மக்களுக்கு தற்போது முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. காணிப் பறிப்பு விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் தீர்வு விவகாரம், அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நிலைமாறுகால நீதிக்கான ஜெனிவாத் தீர்மானங்களும் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் அருகியுள்ளன இந்நிலையில் தற்போது உயிர் பாதுகாப்பு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் பலவந்தமாக  முடக்கப்பட்டுள்ளன. கட்டமைப்பு சார் இன அழிப்புக்கள் தொடரக்கூடிய சூழலே உண்டு. எனவே எந்தவித பாதுகாப்புமற்று இருக்கும் தமிழ் மக்களுக்கு சர்வதேசப் பாதுகாப்பை கோருகின்றோம். குறைந்த பட்சம் ஐ.நா கண்காணிப்பு அலுவலகம் உடனடியாக தமிழ்ப் பிரதேசங்களில் உருவாக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றோம். சாட்சியமற்ற முள்ளிவாய்க்கால் அழிவு போல இன்னோர் அழிவு வருவதை தமிழ் மக்கள் அறவே விரும்பவில்லை என்பதையும் இது விடயத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தாக்குதலில் தமிழ் கிறிஸ்தவர்களும், சிங்கள கிறிஸ்தவர்களும், வெளிநாட்டவர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ஒரு வெளி நாட்டு விவகாரத்திற்காக இத்தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. சர்வதேச புலனாய்வுப் பிரிவினர்களின் முன்கூட்டிய எச்சரிக்கைகள் அசட்டை செய்யப்பட்டுள்ளமையினால் ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்குமிடையில் தொடர்புள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது. இந் நிலையில் இலங்கை மட்டம் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் எனக் கூற முடியாது எனவே இது விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோருகின்றோம்.

எல்லாவற்றிற்கும் முதலில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் எந்தவித நிபந்தனையுமில்லாமல் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகின்றோம்.#eastersundayattackslk

இணைப்பாளர்
-சமூக விஞ்ஞான ஆய்வுமையம்-

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More