இலங்கை பிரதான செய்திகள்

தடுப்பில் உள்ள 3 சகோதரர்களுக்கும், தாக்குதல்களுக்கும் நேரடித் தொடர்பு…

தாக்குதல் நடத்தியோர் ஒன்றாக பயணித்தனர் –

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய அலாஹுதீன் அஹமட் முவாத், கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் பயணித்த வாகனத்தில் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தை தேவாலயத்திற்கு 75 மீட்டர் தொலைவில் நிறுத்தியபின் தற்கொலைக் குண்டுதாரி தேவாலயத்திற்குள் சென்றுள்ளமை CCTV காணொளிகளூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, செயழிலக்கச் செய்ய முடியாதவாறு தயாரிக்கப்பட்டிருந்த குண்டு வைக்கப்பட்டிருந்த வாகனத்தை பாதுகாப்புத் தரப்பினர் வெடிக்கச் செய்தனர். இந்த வாகனத்தின் பாகங்களை அரச இரசாயனப் பகுப்பாய்விற்கு உட்படுத்தி அறிக்கை ஒன்றைப் பெறுமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவரின் சகோதரர்களான அலாஹுதீன் அஹமட் முஸ்கின், அலாஹுதீன் அஹமட் முஸ்தாக் மற்றும் அவர்களின் சகோதரியான பாத்திமா சுமேஷா அலாஹுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி கண்காணிப்பின் நிமித்தம் மன்றில் முன்னிலையாக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய, சந்தேகநபர்களைத் தடுத்து வைத்துள்ளதாகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.
குறித்த மூன்று சந்தேகநபர்களும் இந்த தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளூடாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்கொலை குண்டுதாரியை உறுதிப்படுத்துவதற்காக DNA பரிசோதனை அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனனர். #eastersundayattackslk

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.