இலங்கை பிரதான செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் காவல்துறையினரால் நேற்று வியாழக்கிழமை வாக்குமூலம் பெறப்பட்டது. மருத்துவ பீட வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலையில் கடந்த 3ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலில் தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டதனையடுத்து சிற்றுண்டிச் சாலையை ஒப்பந்த அடிப்படையில் நடத்துபவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு முற்படுத்தப்பட்டதற்கமைய சிற்றுண்டிச் சாலை நடத்துனர் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிற்றுண்டிச் சாலை நடத்துனருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு சாட்சியாக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. கோப்பாய் காவல் நிலையத்தில் வைத்து இந்த வாக்குமூலம் காவல்துறையினரால் பதியப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான வழக்கிலும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிலரிடம் சாட்சியம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#jaffnamedicalfaculty #university #statement #studentunion

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.