இலங்கை பிரதான செய்திகள்

உயரிய பாதுகாப்பில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த விசாக பொங்கல்! பக்தர்களுக்கு நிபந்தனைகள் :

 

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தினுடைய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் விழா தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 16.06.2019 இன்றையநாள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையடலில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இம்முறை பொங்கல் விழாவில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனின்  தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், இராணுவப் பொறுப்பதிகாரிகள், காவற்றுறைப் பொறுப்பாதிகள், கடற்படைப் பொறுப்பதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய  அரச திணைக்களங்களின் அதிகாரிகள், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சில சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்திருந்தனர்.

மேலும் கலந்துரையாடலின் முடிவில், மாவட்ட செயலர் திருமதி  ரூபவதி கேதீஸ்வரன் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

வருடந்தோறும் நடைபெறுகின்றதான வற்றாப்பளை அம்மன் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வு இம்முறையும் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்த வகையிலே நாட்டில் ஏற்பட்டிருக்கின்றதான பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொங்கல் விழாவிற்குரிய  பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

அதன் அடிப்படயில் ஒருசில விடயங்களை இவ்வருடம் தவிர்ப்பதாக இன்று ஆலய பரிபாலன சபையினரும், மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் ஆலோசனைகளின் பிரகாரம் சில விடயங்களை நாங்கள் தவிர்ப்பதற்காக எண்ணியுள்ளோம்.

அந்தவகையில்  தூக்குக்காவடிகள், இம்முறை உள்ளே கொண்டுவராமல் இருப்பதற்காக நாங்கள் மக்களுக்கு அலோசனை வழங்குகின்றோம். எனவே  தூக்குக்காவடிகளை நிறுத்துமாறும், வாகனங்கள் செல்வதற்கான பாதைகளில் கூட சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

வழக்கமாக நாங்கள் விசேடமான அதிதிகள் வருவதற்கான ஒரு பாஸ்கொடுக்கின்ற நடைமுறைகள் இருந்திருக்கின்றன. இம்முறை அவ்விதமான நடைமுறை எதுவம் இல்லை.எனவே வாகனங்களை நிறுத்தவேண்டிய இடங்களில் நிறுத்திச்செலலவேண்டிய தேவைப்பாடும் வருகின்ற பக்தர்களுக்கு இருக்கின்றதென்பதை நான் இந்தவேளையிலே குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு நந்திக்கடலிலே வற்றாப்பளை ஆலயத்தை  அண்டியிருக்கின்றதான நந்திக்கடல் பகுதியிலே 2 கிலோ மீற்றர் தூரத்திற்குட்பட்டதான இடத்திலே மீன்பிடி எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதிவரை தடைசெய்யப்பட்டுள்ளது.

அதேவேளை வழக்கமாக நாங்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு முதல் நாளும் மறு  நாளும் இறைச்சிக்கடை மற்றும் மதுபானக் கடைகள் என்பன எங்களுடைய மாவட்டத்திலே மூடுவது வழக்கம் அந்தவகையில் இம்முறையும் எதிர்வரும்  19ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரைக்கும்   மூடுவதற்கு எண்ணியிருக்கின்றோம்.

எனவே இந்தமுறை நடைபெற இருக்கின்றதான இந்த வற்றாப்பளைப் பொங்கல் உற்சவத்திற்கு வருகைதரவிருக்கின்ற பக்தர்கள் நாட்டினுடைய பாதுகாப்பு மற்றும் ஆலய உட்சவத்தில்   கலந்துகொள்கின்ற ஏனைவருடைய பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு எங்களால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்களில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

#உயரிய பாதுகாப்பில் #முல்லைத்தீவு #வற்றாப்பளைகண்ணகிஅம்மன்ஆலயம்  #விசாகபொங்கல்   #நிபந்தனைகள்    #mullaitheevu

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap