இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இலங்கையில் இஸ்லாமியவாத தீவிரவாதம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? கீதபொன்கலன்..

இலங்கை
Image captionகோப்புப்படம்

இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை உள்ளூர் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, தாக்குதலின் பிரமாண்டமும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுமே அன்றி தாக்குதல்கள் அல்ல.

இதுவரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில், தாக்குதலாளிகள் அனைவரும் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மைக் குழுவாகிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த சில காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையில் பிளவும் பதற்றமும் அதிகரித்து வந்துள்ளது.

குறிப்பாக இன யுத்தம் 2009-ஆம் ஆண்டு முடிவடைந்ததில் இருந்து அவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. இது இலங்கை முஸ்லிம்களில் ஒரு சாராரிடையே தீவிரவாதத்தை உந்தியிருந்தது.

தாக்குதல் நடைபெற்ற தேவாலயம்.

இஸ்லாமிய அரசு (ISIS)

இருப்பினும் உள்ளூரில் செயற்படும் ஒரு சிறிய குழுவினால் இத்தகைய பிரமாண்டமான ஒரு தாக்குதலை தனியே முன்னெடுத்திருக்க முடியுமா என்ற கேள்வி தாக்குதலின் பின் மிக விரைவாகவே கேட்கப்பட்டது.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே இத்தாக்குதலுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கக்கூடும் என்று யூகிக்கப்பட்டது. குறிப்பாக இஸ்லாமிய அரசு சந்தேகிக்கப்பட்டது. இச்சந்தேகம் விரைவாகவே தீர்க்கப்பட்டது.

தாக்குதலின் சில தினங்களுக்குள் இஸ்லாமிய அரசு தாக்குதலுக்கு உரிமை கோரியதுடன் அதன் வெற்றியை கொண்டாடத் தொடங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் சுட்டிக்காட்டின.

இறந்தோர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள சாய்ந்தமருது நகரில் இஸ்லாமிய அரசின் கொடியும் வேறு இலச்சினைகளும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட காணொளியூடாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்பக்தாதி, `இலங்கை தாக்குதலை உரிமை கோரியதுடன் இத்தாக்குதலின் இஸ்லாமிய அரசின் தொடர்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டது. எனவே, உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்கள் இஸ்லாமிய அரசு சார்பாக இலங்கை இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது என்று கூறுவதில் தவறு இருக்க முடியாது.

சவால்கள் என்ன?

இத்தாக்குதலில் இஸ்லாமிய அரசின் தொடர்பு, இலங்கை அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பினரையும் பொறுத்தவரை மிக முக்கியமான சவால் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. அது `அறியப்படாமை` ஆகும்.

இஸ்லாமிய அரசின் தாக்குதல் தந்திரோபாயங்கள், வழிமுறைகள், செயற்பாட்டு பாணி ஆகியவை தொடர்பில் போதிய அளவில் உள்ளூர் நிபுணத்துவம் காணப்படுகின்றது என்று கூற முடியாது.

இதுவே உள்ளூர் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருந்திருக்குமாயின் அதை இலகுவாக கையாளக்கூடிய வல்லமை இருந்திருக்கும்.

இலங்கை பாதுகாப்பு படை, தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் செய்ததன் மூலமாகவும், இறுதியில் அதனை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததன் மூலமாகவும், பாரிய அனுபவத்தையும், அறிவையும் பெற்றுள்ளது. இவை உள்ளூர் தீவிரவாதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போதுமானவையாக இருந்திருக்கும்.

முஸ்லிம் பெண்கள்

இருப்பினும், இஸ்லாமிய அரசின் வழிமுறைகள் பற்றிய அறியாமை சவால் ஒன்று உள்ளமையினால் இரண்டு சிக்கல்கள் தோன்றலாம். ஒன்று, இப்புதிய தீவிரவாதத்தை முழுமையாக கட்டுப்பாட்டினுள் கொண்டுவர மேலதிக நேரம் தேவைப்படலாம், அல்லது பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாடு பலவீனமானதாக இருக்கலாம். இதன் கருத்து என்னவெனில், மேலதிக தாக்குதல்கள் முழுமையாக தடுக்கப்பட முடியாதிருக்கலாம்.

அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு

இஸ்லாமிய அரசின் தொடர்பினால் ஏற்பட்ட ஒரு பலன் என்னவெனில் அது இலங்கை அரசு வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது.

தெற்காசியாவின் பல நாடுகளும் இப்பிராந்தியத்தில் இஸ்லாமிய அரசின் விஸ்தரிப்பின் காரணமாக கவலையடைத்துள்ளன. அண்மைய கடந்த காலத்தில் இஸ்லாமிய அரசு பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது செயற்பாடுகளை துரிதப்படுத்தி வந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய அரசின் பாரிய சவால் ஒன்று காணப்படுகிறது. இஸ்லாமிய அரசு இந்தியாவை தனது கலிபாவின் ஒரு பகுதியாக அறிவித்துள்ளதுடன், அங்கு தனது ஆட்சேர்ப்பையும், செயற்பாடுகளையும் முடுக்கி விட்டுள்ளது.

இப்போது இஸ்லாமிய அரசு இலங்கையில் நுழைந்துள்ளமை இந்திய அரசுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாம். இலங்கை, இந்தியாவுக்கும் தெற்காசியாவின் ஏனைய நாடுகளுக்குமான `வாயிலாக` பயன்படுத்தப்படலாம்.

தாக்குதலின் சூத்திரதாரி என்று இலங்கை அரசு கூறுகின்ற சஹ்ரான் ஹாசிமின்
Image caption தாக்குதலின் சூத்திரதாரி என்று இலங்கை அரசு கூறுகின்ற சஹ்ரான் ஹாசிமின்

இதற்கு புறம்பாக அமெரிக்காவும், ஏனைய மேற்குலக நாடுகளும் இஸ்லாமிய அரசுக்கு எதிரான சர்வதேச யுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளன. இவையும் இலங்கை தாக்குதல் தொடர்பில் கரிசனையுடையவையாகவே உள்ளன. எனவே, இந்நாடுகள் அனைத்தும் ஏற்கனவே இப்பிரச்சனை தொடர்பில் இலங்கை அரசுக்கு உதவத் தொடங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, இலங்கையில் இஸ்லாமிய அரசு தொடர்புடைய தீவிரவாதத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சர்வதேச மட்டத்திலான அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு செயற்திட்டம் ஒன்று ஏற்கனவே முடுக்கி விடப்பட்டிருக்கும் என்பது தெளிவானது. தீவிரவாதிகளை அடையாளம் காண்பதிலும் அவர்களைக் கைது செய்வதிலும் இலங்கை பாதுகாப்பு படை வெளிப்படுத்திய செயற்திறனின் பின்னணியில் இவ்வரசின் ஒத்துழைப்பு இருந்திருக்குமாயின், குறிப்பாக இந்தியாவின் உதவி இருந்திருக்குமாயின் ஆச்சரியப்படுவதற்கில்லை. இத்தகைய பரந்த சர்வதேச ஒத்துழைப்பு செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது அவ்வாவு கடினமானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனெனில், 2009-ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக நிர்மூலமாக்குவதில் இத்தகைய சர்வதேச ஒத்துழைப்பு பாரிய பங்கு வகித்திருந்தது.

பாதுகாப்பு படை

இறுதி யுத்தத்தின் போது இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற பல நாடுகளும் இலங்கை அரசுக்கு சாதகமாக தமது பங்களிப்பை செயற்படுத்தி இருந்தன. எனவே, அப்போது நடப்பில் இருந்த செயற்திட்டத்தை புதுப்பிப்பதே இப்போதைய தேவையாக இருந்திருக்கும்.

இன வன்முறை

உயிர்ப்பு ஞாயிறு படுகொலைகள் அரசியல், ராணுவ விளைவுக்கு புறம்பாக சமூக மட்டத்திலான பாரிய பதற்ற நிலை ஒன்றைத் தோற்றுவித்துள்ளமை முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இது பெரும்பான்மை இன மக்களிடையே இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஏற்கனவே காணப்பட்ட அதிருப்தியை தூண்டிவிட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரம் ஒன்று ஏற்படலாம் என்று எதிர்பாக்கப்பட்டது.

உடனடி நிலையில் சிறு மட்ட பதற்றநிலை சில பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த போதும், பாரிய தாக்குதல்கள் எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை. இருப்பினும் இக்கட்டுப்பாடு நீண்டகாலம் நீடிக்கவில்லை.

மே மாதம் 13ஆம் தேதி நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம் மக்களின் உடமைகளுக்கு எதிரான பரவலான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வின வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் ஈஸ்டர் தின தொடர் குண்டுதாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது
இலங்கையில் ஈஸ்டர் தின தொடர் குண்டுதாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது இவ்வின வன்முறையும் தொடரும் பதற்றமும் இஸ்லாமிய குழுக்களிடையேயான தீவிரவாதம் தொடர்பில் இரண்டு விதமான தாக்கத்தை கொண்டிருக்கலாம். இவ்விரு தாக்கங்களும் சமாந்திரமாக செயற்படலாம்.

ஒன்று, எதிர்தாக்குதல் அச்சம் காரணமாக இஸ்லாமிய குழுக்களுக்கிடையே காணப்படுகின்ற தீவிரவாதம், தீவிரவாத ஆதரவு என்பவை மந்தப்படுத்தப்படலாம். இதன் விளைவாக சில குழுக்கள் அரசு மீதான விசுவாசத்தையும் அதை வெளிப்படுத்துவதையும் கூர்மைப்படுத்தலாம்.

இரண்டு, இத்தாக்குதல் காரணமாக அதிருப்தியும் விரக்தியும் அடையும் சிலர் தமது தீவிரவாதத்தை அதிகரித்துக்கொள்வதுடன் இஸ்லாமிய அரசு உற்பட ஏனைய தீவிரவாத குழுக்களுடன் இணையலாம்.

இவை இரண்டு செயற்பாடுகளும் சமாந்திரமாக இடம்பெறக்கூடுமாயினும் இக்குழு பெரும்பான்மையாக இருக்கப் போகின்றது என்ற கேள்விக்கு காலம் பதில் கூறும்.

(கட்டுரையாளர்: பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன், பாதுகாப்பு பகுப்பாய்வாளர், சாலிஸ்பரி பல்கலைக்கழகம், மேரிலாந்து, அமெரிக்கா)

1) படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2) படத்தின் காப்புரிமைANADOLU AGENCY/GETTY IMAGES

3)  படத்தின் காப்புரிமைAFP

4)  படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI

5)  படத்தின் காப்புரிமைALLISON JOYCE Image caption

நன்னி – BBC

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap