இலங்கை பிரதான செய்திகள்

“பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்”

இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள காணொளியில் இதனை வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக 26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்கு வந்திருந்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். யுத்தம் நாடு முழுவதிலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் கனேடியர்கள் பலரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, அவர்களின் வலிகள் வேதனைகளை கேட்டறிந்துகொண்டதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கனேடியர்களுடான சந்திப்புக்களின் ஊடாக இலங்கையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது மிக நீண்ட பயணம் என்பதனை புரிந்து கொண்டதாக குறிப்பிட்ட ஜஸ்ரின் ட்ரூடோ, பாதிக்கப்பட்டவர்களினால் நம்பக்கூடிய வகையிலான பொறுப்புக் கூறல் பொறிமுறைமை ஒன்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பொறுப்புக்கூறல் பொறிமுறைமை, சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும். இந்த நிலையில், யுத்தம் காரணமாக சொந்தங்களை இழந்த, பல்வேறு வழிகளில் இழப்புக்களை எதிர்நோக்கிய மற்றும் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் கனேடிய அரசாங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் வெளியிட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து மக்களும் தங்களது நம்பிக்கைகளின் ஊடாக வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உ்ளார். #கனேடியபிரதமர்ஜஸ்ரின்ட்ரூடோ #பொறுப்புக்கூறல் பொறிமுறை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.