இலங்கை பிரதான செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் தொடரில் இன்று அரச தரப்புச் சாட்சியான காவல்துறை அலுவலகர் சாட்சியம் வழங்க முற்படுத்தப்பட்ட போதும் அவரால் முன்வைக்கப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட சாட்சியின் பிரதி சிங்களமொழி மட்டுமே காணப்பட்டதால் அதன் தமிழ்மொழிப் பிரதியை சமர்ப்பிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ். பீற்றர் போல், விசாரணையை வரும் ஜூன் 13ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவல்துறை மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் 5 காவல்துறை உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் காவல்துறை சேவையில் மீளவும் இணைக்கப்பட்டனர்.

வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சுருக்கமுறையற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்குத் தொடுனர் தரப்பால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள் மன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (24) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகின.ர்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் தோன்றினர். வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.

வழக்குத் தொடுனர் தரப்பில் காவல்துறை உத்தியோகத்தர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரது பதிவுப் புத்தகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிரதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பிரதி தனிச் சிங்கள மொழியில் காணப்பட்டது.

சாட்சியின் பிரித்தெடுக்கப்பட்ட பிரதியின் தமிழ்மொழிபெயர்ப்பை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், வழக்கை குறைந்த காலப்பகுதியான வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

#யாழ் பல்கலைக்கழக  #மாணவர்கள் #சுட்டுக் கொல்லப்பட்ட #ஒத்திவைப்பு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.