Home இலங்கை தொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..

தொடரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் – பி.மாணிக்கவாசகம்..

by admin

 

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் பின்னர், மூன்று வாரங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நாட்டில் நிலவுகின்ற ஒரு மோசமான வன்முறைப் போக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது. அது நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்ற ஆட்சி முறை என்பவற்றை உள்ளடக்கிய இறைமையுள்ள அரசாங்கத்தையும் மீறிய ஒரு கும்பலாட்சி – குண்டர்களின் ஆட்சி நாட்டில் நிலவுவதையே அடையாளப்படுத்தி உள்ளது.

யுத்த வெற்றிவாத அரசியல் மனோநிலை சார்ந்த எதேச்சதிகார ஆட்சிக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த நல்லாட்சியின் கீழ் இரண்டு தடவைகளுக்கு மேலாக முஸ்லிம்கள் மீதான இந்த கும்பலாட்சி வன்முறைசார்ந்த தனது வக்கிரத்தை வெளிப்படுத்தி உள்ளது. இது இறைமையுள்ள ஆட்சிக்குள்ளே வலிமை வாய்ந்த வன்முறை சார்ந்த சக்தியொன்று மறைகரமாக இருந்து செயற்படுவதையே உறுதிப்படுத்தி உள்ளது.

சிங்கள பௌத்த நாடு என்ற தனியொரு இன, மத ரீதியான மேலாண்மை சார்ந்த அரசியல் போக்கை நிலைநாட்டுவதற்கான முயற்சியை வெளிப்படுத்துவதாகவே இது அமைந்துள்ளது. பல்லினங்கள் சார்ந்த பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்ற பன்மைத்தன்மை கொண்ட இந்த நாட்டின் பாரம்பரியத்தை படிப்படியாக அடித்து நொறுக்கி இல்லாமல் செய்கின்ற ஆபத்தான நிகழ்ச்சி நிரலைக் கொண்ட தொடர் நடவடிக்கையின் ஓர் அம்சமாகவே இது காணப்படுகின்றது.

எப்படி நடந்தது?

முகப்புத்தகத்தில் ஒருவர் வெளியிட்டிருந்த ‘சிரிக்காதே. நீயும் ஒரு நாள் அழுவாய்’ (Don’t laugh 1 day you will cry) என்ற கருத்துப் பதிவானது, வன்முறை வழியில் பழிதீர்க்கின்ற முஸ்லிம் மக்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்துவதாகத் தப்பர்த்தம் செய்து, அதற்கு எதிராக மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாக சிலாபம் பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் இதனை ஒரு சாதாரண சிறிய சம்பவமாகவே முதலில் கருதியிருந்தனர். ஆயினும் அது அவர்களுடைய கட்டுப்பாட்டையும் மீறி, சிலாபம் மற்றும் குருணாகலை மாவட்டங்களின் பல இடங்களுக்கும் இந்த வன்முறைகள் பரவி, முஸ்லிம் மக்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் மூலம் நாட்டில் உருவாகியிருக்கின்ற சர்வதேச பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரச படைகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு தருணத்தில், அதுவும் சிலாபம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த இறுக்கமான பாதுகாப்புச் சூழலில் சிலாபம், மினுவாங்கொட, பிங்கிரிய, ஹெட்டிப்பொல, குளியாப்பிட்டிய, கினியாம, கொட்டாம்பிட்டிய போன்ற பல இடங்களில் முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

வன்முறைக்குத் தூண்டுதலாகக் கருதப்பட்ட முகப்புத்தகப் பதிவானது, பாரிய அளவில் ஒரு சமூகத்தையே குறி வைத்து தாக்கி அவர்களுடைய உடைமைகளைத் தீயிட்டு நாசமாக்குகின்ற அளவுக்குப் பெறுமதி வாய்ந்த காரணமாகத் தோற்றவில்லை. ஆயினும் அந்த சிறிய சம்பவத்தை ஒரு தீப்பொறியாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இந்த குண்டர் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

முஸ்லிம் சமூகத்தைப் பழிவாங்க வேண்டும் என்ற ஆவேசத்துடன், நன்கு திட்டமிட்ட வகையில் இந்த வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதைக் காண முடிகின்றது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு, பொலிசாரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு மற்றும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த உச்ச கட்ட பாதுகாப்பான ஒரு தருணத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கும்பல் கும்பலாக வெளியிடங்களில் இருந்து வந்து வீதிகளில் பகிரங்கமாக உரத்து கோஷமிட்டபடி முஸ்லிம்களின் வீடுகள் வர்த்தக நிலையங்களை அடித்து நொறுக்கியுள்ளார்கள்.

இதன் மூலம், இந்த வன்முறையாளர்கள், அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவுக்கு மதிப்பளிக்கவில்லை. அதற்கு அடங்கி நடக்கவில்லை. அத்துடன், வீடுகளில் முடங்கியிருந்து அமைதி காக்க வேண்டும் என்ற பொலிசாரினதும், பாதுகாப்புப் படையினரதும் உத்தரவை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகின்றது.

பொது அமைதிக்கும், நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளுக்கும் ஊறு விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறையாளர்களின் செயற்பாட்டை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரும், படையினரும் உடனடியாகத் தடுப்பதற்கு முற்பட்டிருக்கவில்லை. அந்த வன்முறையாளர்கள் வீதிகளில் கும்பலாகக் கூக்குரலிட்டுச் சென்றதையும், வன்முறையில் ஈடுபட்டதையும் அவர்கள் பாராமுகத்துடன் ஊக்குவித்திருந்ததாகவே குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துரைத்துள்ள போதிலும், அப்பாவி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்களை அகதிளாக்கும் வகையில் வீடுகள் வர்த்தகநிலையங்கள் என்பவற்றைத் தாக்கி, தீயிட்டு அழித்துள்ள அநியாயத்திற்கு இன்னும் அhசாங்கம் உரிய முறையில் பொறுப்பெற்கவில்லை. உரிய முறையில் பொறுப்பு கூறவுமில்லை.

இந்த வன்முறைகளின்போது பிங்கிரிய என்ற இடத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்து ஹெட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த நிலையத்தை ஆயிரக்கணக்கானவர்கள் முற்றுகையிட்டு கலகம் செய்தமையும், அந்த இடத்திற்குச் சென்ற சிறிலங்கா சுதந்தரக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தயாசிறி ஜெயசேகர கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவித்துச் சென்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள தயாசிறி ஜயசேகர ஹெட்டிப்பொல பொலிஸ் நிலையத்தை மூவாயிரம் பேர் வரையில் முற்றுகையிட்டிருந்ததையடுத்து, ஏற்பட்டிருந்த பதட்ட நிலைமையைத் தணிப்பதற்காகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களைப் பாதுகாப்பாக பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்காகவே அங்கு சென்றதாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான கலகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கானவர்கள் ஒரு பொலிஸ் நிலையத்தைச் சுற்றி வளைத்திருந்த பதட்ட நிலையில் பாதுகாப்பைப் பலப்படுத்தி நிலைமையைக் கையாள்வதற்கு ஏன் இராணுவம் அழைக்கப்படவில்லை அல்லது ஏன் இராணுவம் அங்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்க எவரும் முன்வராத நிலைமையே காணப்படுகின்றது.

தொடரும் வன்முறை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து நாடு மீள்வதற்காகப் போராடிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிக மோசமானவை. மனித இயல்புக்கு முரணான காட்டுமிராண்டித்தனமானவை. ஒரு சிறுபான்மை மத இனத்தின் மீது பேரினவாதிகள் மேற்கொள்கின்ற மத ரீதியான இன ரீதியான அடக்குமுறையாகவே இந்தத் தாக்குதல்கள்; பதிவாகியிருக்கின்றன. இரண்டு தினங்கள் வரையில் நடைபெற்ற இந்த வன்முறையானது 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையின் போது தமிழ் மக்கள் மீது நாடளாவிய ரீதியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு வன்முறைக்கு ஒத்ததாகவும், அது போன்ற வன்முறை மீண்டும் தோன்றுவதற்கான அடையாளமாகவும் சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினரும் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர்.

கறுப்பு ஜுலை இன வன்முறையானது, திட்டமிட்டமுறையில் அரங்கேற்றப்பட்டிருந்தது. அந்த வன்முறையின்போது சுமார் நாலாயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டும், கொள்ளையிடப்பட்டும், தீயிட்டும் அழிக்கப்பட்டதாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.

அதேபோன்று முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறைகளும் திட்டமிட்ட வகையிலேயே நாடத்தப்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெளியிடங்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களை முகப்புத்தகம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தலங்களின் ஊடாக தூண்டிவிட்டு, ஒருங்கிணைத்து, ஒன்று கூட்டி இந்த வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆட்களை அணி சேர்ப்பதற்காக சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட காணொளிகள், ஒளிப்படங்களையும் பரவலாகப் பதிவேற்றி பிரசாரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அரசியல் மறைகரங்களும், சிங்கள பௌத்த தேசியவாதமும் இந்த வன்முறைகளின் பின்னணியில் இருந்து ஊக்குவித்துச் செயற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்த போதிலும் சட்டவிரோதமான குறுக்கு வழிகளின் ஊடாக அவற்றைப் பயன்படுத்தி பலரும் செயற்பட்டிருப்பதகவும் கூறப்படுகின்றது.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கின்ற ஒரு தருணத்தில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள் இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால், பொலிசாரும் இராணுவத்தினரும், இந்தச் சந்தர்ப்பத்தில் பாராமுகமாக இருந்ததைப் போன்று அமைதி காத்திருப்பார்களா என்று ஒரு சாரார் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அந்தக் கேள்வியில் அர்த்தமுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மத, இனவாத வன்முறைகளின் பின்னால் உள்ள இனவாத அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அந்தக் கேள்வி அமைந்துள்ளது.

முன்னைய அரசாங்கத்தில் அளுத்கம பிரதேசத்தில் சிங்கள பௌத்தர்கள் பௌத்த துறவிகளின் தலைமையில் பேரணிகளாகச் சென்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்கண்ட சாட்சிகள் பலர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் அம்பாறை மற்றும் திகன கட்டுகஸ்தோட்டை போன்ற பகுதிகளில் பேரினவாத கும்பல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இந்த சம்பவங்களிலும் பௌத்த குருமார்கள் பகிரங்கமாகவே வன்முறைக் கும்பலில் காணப்பட்டதை ஊடகங்கள் செய்திகளின் மூலம் வெளிப்படு;த்தியிருந்தன.

அதேபாணியில்தான் சிலாபம் மற்றும் குருணாகலை மாவட்டப் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் வன்முறைக் கும்பல்களினால் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டிருந்தன.

பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

கடந்த 1983 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழர்கள் மீதான கறுப்பு ஜுலை இன வன்முறைத் தாக்குதல்களில் தமிழ் மக்களுடைய பொருளாதாரம் நிர்மூலமாக்கப்பட்டதைப் போலவே, முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், முஸ்லிம் சமூகத்தினருடைய பொருளாதாரம் நாசமாக்கப்பட்டுள்ளது. நசுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களிலும், சிறுநகர்ப்புறங்களிலும் தாக்குதல்களுக்கு இலக்காகிய முஸ்லிம்களுடைய சிறு வர்த்தக முயற்சிகளே பாதிப்புக்கும் பேரழிவக்கும் உள்ளாக்கப்பட்டது. என்றாலும், இது அந்தந்தப் பிரதேசத்தின் வளர்ச்சி, அதன் பொருளாதாரம், என்பவற்றை நிர்மூலமாக்கி தேசிய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதே பொருளியலாளர்களின் கருத்தாகும்.

இந்த வன்முறைகளின் மூலம் உள்நாட்டில் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவும் இன ஐக்கியமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற அல்லது பழகுகின்ற ஒரு நிலைமை உருவாகியுள்ளது. இதனால், தேசத்தின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் குலைந்து நாட்டின் பொதுவான அமைதியை கேள்விக்கு உள்ளாக்குகின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் மூன்று உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் சேதப்படுத்தப்பட்டன. அந்த ஹோட்டல்களின் இருப்புக்கு உரிய பாதுகாப்பு குறித்த அச்சமும், சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்ற உல்லாசப் பயணத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய வருமானத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களின் பின்னர் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமைகளை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, நாடு சுமுக நிலைமைக்குத் திரும்பத் தொடங்கியிருந்த வேளையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து தாக்குதல்கள் நடைபெற்ற பிரதேசங்கள் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் நன்மையையும் கருதி இந்த ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டபோதிலும், நாட்டின் தேசிய வருமானத்திற்கு பெரும் பங்களிப்பு செய்கின்ற உல்லாசப் பயணிகளின் வருகை, அந்நிய முதலீட்டாளர்களின் வர்த்தக முதலீட்டுக்கான வருகை என்பவற்றைப் பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கின்றன.

நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றது. அங்கு செல்வது ஆபத்தானது என்ற செய்தியையே தேசிய பாதுகாப்புக்கான ஊரடங்கு உத்தரவு என்பது வெளியுலகத்திற்குக் காட்டுகின்ற காட்சியாக இருக்கும். ஆபத்தான சூழலுக்குள் செல்வதற்கு எவரும் விரும்பமாட்டார்கள். அதுவும் சர்வதேச பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளுரில் கலவரங்கள் இடம்பெறுகின்ற நிலையில் எவரும் உல்லாசப் பயணம் மேற்கொள்ளவோ அல்லது முதலீடு செய்வதையோ ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

அத்தகைய ஒரு நிலைமையே பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் உருவாக்கியிருக்கின்றன. சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கிடைத்திருந்த முன்னெச்சரிக்கையை அரசாங்கம் உதாசீனம் செய்திருந்ததைப் போலவே, குண்டுத் தாக்குதல்களின் பாதிப்பில் இருந்து நாடு மீளெழ முயற்சிக்கின்ற தருணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தி பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்குரிய இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தவறியிருக்கின்றது.

சர்வதேச பயங்கரவாதம் நாட்டிற்குள் தலையெடுத்துள்ள பின்னணியில் சுய அரசியல் நலன்கள் மற்றும் சிங்கள பௌத்த தேசியத்தின் மீது கொண்ட பற்றுறவு காரணமாக அராசங்கம் பாராமுகமான போக்கில் நடந்து கொண்டிருப்பது நாட்டின் பொதுவான எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

அரசியல் ரீதியான அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும், சுய அரசியல் இலாபத்திற்கான நிலைமைகளைக் கைவிடாமல் பாதுகாத்துக் கொள்வதிலும் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற கரிசனையும் அக்கறையும் உண்மையான நாட்டின் நலன்கள், எதிர்கால நிலைமைகள், தேசிய பாதுகாப்பு போன்ற அதிமுக்கிய விடயங்களில் காட்டுவதில் அக்கறையற்ற ஓர் அரசியல் போக்கையே காண முடிகின்றது.

குடியியல் அரசியல் உரிமைகள்

நாட்டு மக்களின் குடியியல், அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் (ஐவெநசயெவழையெட ஊழஎநயெவெ ழn ஊiஎடை யனெ Pழடவைiஉயட சுiபாவள (ஐஊஊPசு) யுஉவ) நாட்டின் சட்ட நடைமுறைகளில் காணப்படுகின்றது.

இந்த சட்டத்தின் கீழ் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளான குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும் என்பது நியதி.

யாரேனும் ஆளொருவர் மற்றவருடைய குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை மீறிச் செயற்பட முடியாது. அவ்வாறு மீறிச் செயற்பட்டு பகை உணர்வைத் தூண்டிவிடுதலும், மோதல் நிலைமைகளை உருவாக்குதலும் தண்டனைக்குரிய குற்றமாக இந்தச்; சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குடியியல் என்பது ஒரு குடிமகன் என்ற அந்தஸ்தில் தனக்குள்ள அரசியல் மற்றும் மத உரிமைகளைப் பேணுவதற்கும் பேணி நடப்பதற்கும் அதிகாரம் கொண்டிருப்பதையே குறிக்கின்றது எனலாம். அதேபோன்று அந்தக் குடிமகனுக்கு அரசியல் சார்ந்த உரிமைகளும் இந்த சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்த உரிமைகளை மீறுகின்ற வகையிலேயே இந்த சட்ட விதிகளையும் பொது அமைதியையும் மக்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான ஏனைய சட்டவிதிகளையும் மீறும் வகையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் ஒரு கூட்டுச் செயற்பாடாக, கும்பல்கள் – குண்டர்கள் ஒரு தடவையல்ல, பல தடவைகள் இந்த வன்முறைகளில்; ஈடுபட்டு கலகம் புரிந்திருக்கின்றார்கள். பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றச் செயலாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டத்தின் (ஐஊஊPசு யுஉவ) கீழ் ஆளெவரும் போரைப் பரப்புதலோ அல்லது பாரபட்சத்தை, எதிர்;ப்புணர்ச்சியை அல்லது மத ரீதியிலான பகைமையை ஆதரித்தலோ ஆகாது என சுட்டிக்காட்டி, அத்தகைய நடவடிக்கை தண்டனைக்குரிய ஒரு குற்றச் செயலாகும் என்று வரையறை செய்திருக்கின்றது.

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டிருந்த கும்பல்கள் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களைத் தாக்கி ஒருவரைக் கொன்று, பலரையும் உயிரச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, வீடுகளைவிட்டு வெளியேறிச் செல்லுமாறு துரத்தியடித்துள்ளது மட்டுமல்லாமல், அவர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்களைத் தீயிட்டுக்கொளுத்தி அழித்து அட்டகாசம் புரிந்திருக்கின்றன.

இதற்கு முன்னர் இத்தகைய குற்றச் செயல்களைப் புரிந்தவர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்த போதிலும், அவர்கள் எவரும் கைது செய்யப்பட்டு முறையாக நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவில்லை. இத்தகைய பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்காகவே உருவாக்கியது போன்று தண்டனை பெறுவதில் இருந்து விலக்கு பெறுகின்ற ஒரு குற்றவியல் கலாசாரம் அரசியல் அந்தஸ்து பெற்ற ஒரு நாகரிகப் போக்காக நாட்டில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய குற்றவாளிகளை குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என்றும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்குப் பிணை கிடையாது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் மாத்திரம் மேல் நீதிமன்றத்திற்கு, பிணை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குடியியல் அரசியல் உரிமைகள் சட்டம் மட்டுமல்ல. பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்களையம், வன்முறைகளில் ஈடுபடுபவர்களையும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் பொலிசாருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் தேசிய பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டு தேசிய பாதுகாப்பு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்ற ஒரு சூழலில்;, அதுவும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள தருணத்தில் ஓர் இனக்குழுமத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ள கும்பல்களின் அராஜக போக்கை, கும்பல்களின் ஆட்சியைப் போன்ற ஒரு போக்கை இறைமையுள்ள அரசுகள் தொடர்ந்து செயற்படுவதற்கு அனுமதித்திருப்பதை எவ்வாறு வகைப்படுத்துவது, எவ்வாறு நியாயப்படுத்துவது என்று தெரியவில்லை.

அதேவேளை, தண்டனை விலக்கீட்டு கலாசாரத்தை எழுதாத ஒரு மரபு வழியிலான ஒழுங்கு முறையாக அரசாங்கம் அனுமதித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அதேநேரம் இந்த கலாசாரத்தை சுய அரசியல் நலன்களைக் கருத்திற் கொண்டும், சிங்கள பௌத்த தேசிய நலன்களைக் கவனத்திற் கொண்டும் தொடர்ந்து அனுமதிப்பது என்பது நாட்டைப் பாரதூரமான நிலைமைக்கே இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

எனவே, கும்பலாட்சி என்ற வன்முறைப் போக்கினைக் கட்டுப்படுத்தி இனங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க அரசு முன்வர வேண்டும். அதேவேளை, அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த வல்ல சக்திகளும் பொது அமைப்புக்களும் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களும் இது விடயத்தில் தீவிர கவனம் செலுத்தி அரசாங்கத்தைச் சரியான வழித்தடத்தில் பயணிப்பதற்கான அழுத்தத்தையும் ஊக்குவிப்பையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More