இலங்கை பிரதான செய்திகள்

முட்டை விஷமாயிருக்கலாம் எனும் சந்தேகத்தில் உயிரிழந்த மாணவனின் குருதிமாதிரி கொழும்புக்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவனின் உயிரிழப்பின் காரணத்தைக் கண்டறிய அவரது குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது சகோதரர்கள் இருவரும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். கோப்பாயைச் சேர்ந்த மாணவனும் அவரது சகோதரர்கள் இருவரும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். சுமார் 17 நாள்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 7 வயது மாணவன் நேற்று செவ்வாய்க்கிழமை  காலை உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரால் மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.  “மாணவன் இரண்டு வாரங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அதிகளவான செலைன் ஏற்றப்பட்டது. அதனால் அவருக்கு ஏற்பட்ட கிருமித் தொற்றுத் தொடர்பில் துள்ளியமான முடிவை உடற்கூற்றுப் பரிசோதனையின் ஊடாக கண்டறிய முடியாது.

அவரது குருதி மாதிரியை ஆய்வுக்குட்படுத்தப்படும் போது கிருமியின் தாக்கம் தொடர்பில் கண்டறிய முடியும்” என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மாணவனும் அவரது சகோதரர்களும் உட்கொண்ட முட்டையில் விஷக் கிருமியின் தாக்கம் உள்ளது. அதனால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சுகயீனத்துக்குள்ளாகினர் என்று தெரிவிக்கப்பட்டது. கோழியின் எச்சங்களில் “சல்மனெல்ல” பற்றீரியா (salmonella bacteria) உருவாகும். அந்த பற்றீரியா முட்டைக் கோதில் தொற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. முட்டைக் கோது அகற்றப்படும் போது பற்றீரியா முட்டையில் சேர்வதனால் உணவில் அதன் தாக்கம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. அந்தத் தொற்று மாணவனுக்கு ஏற்பட்டதா? என்பது தொடர்பில் அவரது குருதி மாதிரி கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

#சென் ஜோன்ஸ் கல்லூரி  #முட்டை  #மாணவன் #குருதிமாதிரி #blood sample

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.