Home இலங்கை சாதிய வெறியால் நிறுத்தப்பட்டது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய திருவிழா -மு.தமிழ்ச்செல்வன்..

சாதிய வெறியால் நிறுத்தப்பட்டது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய திருவிழா -மு.தமிழ்ச்செல்வன்..

by admin

வரணி ஆலயம்- சமூக விடுதலையை அடையாது,  இன விடுலையை அடைவது கடினம்…

கடந்த வருடம் வைகாசி மாதம் ஒரு அதிகாலை பொழுது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் ஊர் கூடி தேர் இழுக்கத் தயாராகிக்கொண்டிருந்தது. புதிதாக செய்யப்பட்ட சித்திரைத் தேர் வெள்ளோட்டத்தில் வெற்றிகரமாக ஆலயத்தை சுற்றி வந்தது. எனவே கன்னித் தேர்த் திருவிழாவில் இளைஞர்கள் வேட்டியும் வேட்டிக்கு மேல் மஞ்சல்,சிவப்பு துண்டுககளை அணிந்தவாறும் பெண்கள் சாறி சல்வார், என மகிழ்வோடு வடம் பிடிக்க காத்திருந்தனர்.

கண்ணகியும் வெளியே வந்தால் தேர் எறினாள் வடம் பிடிக்கத் தயாரான போது வந்து நின்றது ஜேசிபி இயந்திரம், ஆலய நிர்வாகத்தினர் வடத்தை இயந்திரத்துடன் இணைத்தார்கள் நகர்ந்தது தேர், ஊர் கூடி தேர் இழுத்தல் தகர்ந்தது. அப்பாவி பக்த்தர்கள் ஆடிப்போய் நின்றார்கள் கண்ணகியும் கண்ணீர் வடித்தால் ஆனால் எவராலும் கண்டுகொள்ளப்படவில்லை.

சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் சாதிய பாகுபாடு காரணமாக ஜேசிபி மூலம் தேர் இழுக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போன்று பரவியது. எதிர்ப்புக்களும் ஆதரவுகளும் பரஸ்பரம் மோதிக்கொண்டன. சம்பவத்தின் பின்னணி ஆராயப்பட்;ட போது அதிர்ச்சியாக இருந்தது.

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில்.

தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 பிரதான வீதியால் செல்கின்ற போது கொடிகாமம் சந்தியிலிருந்து வலது பக்கமாக செல்கின்ற கொடிகாமம் பருத்திதுறை வீதியில் சுட்டிபுரம் அம்மன் கோவில் கழிந்து சுமார் ஒன்றை கிலோமீற்றர் பயணிக்கின்ற போது வருகின்ற கொமினிகேசன் சந்தியில் வலது பக்கமாக செல்கின்ற வீதியில் சென்றால் வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தை அடைய முடியும்.

சுமார் 150 வருடங்கள் பழமையான ஆலயம் என ஆலயத்தை சூழவுள்ள பொது மக்கள் குறிப்பிடுகின்றனர். வருடந்தோறும் வைகாசி மகம் அன்று பொங்கலுடன் ஆரம்பமாகும் திருவிழா தொடர்ந்து பதினொரு நாட்கள் இடம்பெறும். இதில் ஏழாவது ஒன்பதாவது திருவிழாக்கள் தாழ்த்துப்பட்ட சமூகங்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் மேற்கொள்வார்கள். ஆனால் அவர்கள் சுவாமி தூக்குதல், அன்னதானம் சமைத்தல், போன்ற காரியங்களில் ஈடுபட முடியாது. காலம் காலமாக இந்த இறுக்கமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது ஆலயத்தின் சுற்றுப்புறச் சூழலில் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.சுமார் 1800 குடும்பங்கள் வரை வாழ்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆலயத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றருக்கு அப்பால் அதிகம் செலுத்துகின்ற தங்களை உயர் சாதி என்று சொல்லுகின்ற ஒரு சமூகத்தினர் வாழ்கின்றனர். காலம் காலமாக இந்த பிரதேசத்தில் மிக மோசமான சாதிய பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்றவர்களுக்கு கடந்த காலத்தில் உயர்சாதி என்று சொல்லிககொள்பவர்கள் அநீதிகளையும் அநியாயங்களையும் இழைத்து வந்துள்ளனர். கடந்த காலத்திலும் பல தடவைகள் கோயில் இழுத்து மூடப்பட்டுள்ளது. ஒரு தடவை கோயில் திருவிழாவின் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்னெருவர் கலையாடி தன்னையறியாது ஆலயத்திற்குள் சென்றுவிட்டார். இதனை அவதானித்த உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் ஆலய பூசை வழிபாடுகளை நிறுத்தி விட்டு ஆலயத்தை கழுவி சுத்தம் செய்த பின்னர் பல வருடங்களாக ஆலயத்தை இழுத்து மூடியுள்ளனர்.

பின்னர் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் இரண்டு தரப்பினனர்களும் பேசியதற்கு அமைவாக கோவில் திருவிழாவை நடத்துவது என்றும் வழமை போன்று ஏழாம் மற்றும் ஒன்பதாம் திருவிழாவை தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் நடத்தலாம் என்றும், ஆனால் சுவாமி தூக்குதல், அன்னதானம் சமைத்தல் போன்ற ஆலய தொண்டுகளில் ஈடுப்படக் கூடாது என்றும் இணக்கம் காணப்பட்டது. அத்தோடு சுவாமியை உயர்சாதி என்று சொல்லிக்கொள்பவர்களும், தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்றவர்களும் தூக்குவது இல்லை என்றும் குருக்கள் நால்வர் சுவாமியை தூக்குவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டு திருவிழா நடத்தப்பட்டது. அப்போது சில நாட்களில் நான்கு குருக்களில் ஒருவர் சமூகமளிக்காது விட்டார் ஆதிக்கம் செலுத்துகின்ற தரப்பினரில் ஒருவர் சுவாமியை தூக்குவதற்கு சென்று விடுவார். மற்றவர்களை அனுமதிப்பது கிடையாது. இந்த நிலையில் ஒரு நாள் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்றவர்களில் இருந்து ஒருவர் சுவாமி தூக்கும் போது கொண்டு செல்லப்படுகின்ற தீ பந்தத்தை ஏந்தியிருக்கின்றார். பின்னர் அவரிடமிருந்து குறித்த தீ பந்தம் பறிக்கப்பட்டு அதானால் சூடும் வைக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது என சில பொது மக்கள் கடந்த கால வரலாற்றை கூறினார்கள். இவ்வாறு தொடர்ந்தும் சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்ததன் உச்சக் கட்டடம் தான் 2018 இல் தேர் ஜேசிபி கொண்டு இழுக்கப்பட்டமையும், இந்த ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டதும் என்கின்றனர்.

இவ்வருடம் ஆலயத் திருவிழா ஆரம்;பிக்கும் போது இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது ஆதிக்க தரப்பினர் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் என்று சொல்லப்படுகின்றவர்களிடம் வழமை போன்று சொல்லியிருக்கின்றார்கள் ஏழாம் மற்றும் ஒன்பதாம் திருவிழாக்களை நடத்துவதற்குரிய செல்வுகளை (குறைந்தது ஒரு இலட்சத்து ஜம்தாயிரம், இந்தப் பணத்தில் சாதியில்லை) செலுத்துங்கள் ஆனால் சுவாமி தூக்குதல். அன்னதானம் சமைத்தல், தேர் இழுத்தல் போன்ற செயற்பாடுகளில் பங்குபற்றக் கூடாது என கூறியிருக்கின்றனர். இதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவிக்கவே 2019 ஆண்டுக்கான சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத் திருவிழா ஆதிக்க தரப்பினர்களால் நிறுத்தப்பட்டது எனத் தெரிவித்த அவர்கள் இதற்கு நீதி கேட்டே தென்மராட்சி பிரதேச செயலகம் முன் போராட்டம் நடத்தினோம். தற்போது எங்களுக்கு ஆதரவாக நாமும் இணைந்து ஆலய முன்றலில் சத்தியாகிரகம் போராட்டத்திலும் ஈடுப்பட்டு வருகின்றோம் என்றனர்.

தங்கி வாழும் பொருளாதாரம்

வரணி வடக்கு பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுகின்றவர்களின் பொருளாதாரம் என்பது பெரும்பாலும் கூலித் தொழில் மற்றும் சீவல் தொழில் ஆகும். இவர்கள் சீவுகின்ற மரங்கள் பெரும்பாலானவை ஆதிக்கம் செலுத்துகின்றவர்களின் காணிகளில் காணப்படுகின்றது. கூலித் தொழிலாளிகளில் சிலரும் அவர்களிடத்தே தொழில் செய்து வருகின்றனர். எனவேதான் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் தங்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற மிக மோசமான சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அவர்களால் பலமாக எதிர்த்து நிற்க முடியாதுள்ளது. முன்னைய காலங்களில் முற்றுமுழுதாக ஆதிக்க தரப்பினர்களிடத்தே தங்கி வாழ்ந்தவர்கள் தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு செல்கின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த கனிசமானவர்கள் அரச உயர் பதவிகளிலும் இருக்கின்றனர். ஆனால் அங்கும் சிலர் தங்களது திணைக்களங்களினால் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே உண்டு.

வீதிக்கு பெயர் வைத்தல்

இந்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு வீதி மிகவும் மோசமான வீதியாக காணப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வெள்ள நீர் முழங்காலுக்கு மேல் நிற்கும் அளவுக்கு வீதியின் நிலைமை இருந்துள்ளது. இதனை கருத்தில் எடுத்து கிருஸ்ணா என்ற நபர் தனது சொந்த நிதி ஆறு இலட்சம் ரூபா செலவு செய்து குறித்த வீதியை மக்களின் இலகு போக்குவரத்து ஏற்றவாறு சீரமைத்துள்ளார் இச்சம்பவம் சுமார் பத்து வருடங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. அதற்கு பின்னர் சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. ஆதாவது ஒரு தனிநபர் தனது சொந்த நிதியில் ஜந்து இலட்சத்துக்கு மேல செலவு செய்தால் அவர் கௌரவிக்கப்படல் வேண்டும் என்று. அந்த வகையில் ஆதிக்க தரப்பினர் தங்களது சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை அவர்களின் பெயர்களை வீதிக்கு சூட்டி கௌரவித்துள்ளனர்.

இந்த விடயத்தை தாமதமாக அறிந்த கொண்ட இவர்கள் குறித்த தங்களது வீதிக்கு கிருஸ்ணா வீதி என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிய போது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சாவகச்சேரி பிரதேச சபையிலும் குறித்த வீதிக்கு கிருஸ்ணா வீதி என்று பெயர் சூட்டுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இன்று வரை அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் அந்த வீதியில் உள்ள மூன்று உயர்சாதி என்று தங்களை சொல்லிக் கொள்ளும் குடும்பத்தினர் இவர்களை அணுகி நாம் தனிநபர்களின் பெயர்களை வீதிக்கு வைப்பதனை விட கடவுளின் பெயரை சூட்டுவோம் எனவும் அது நீங்கள் வணங்கும் கூட்டத்தார் கோவில் வீதியாக அமையட்டும் என்றும் கூற இவர்களும் அதற்கு இணங்கியுள்ளனர். பின்னர் சில வாரங்கள் கழித்து சென்ற அவர்கள் கடவுளின் பெயரை வைப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டீர்கள் எனவே எந்த கடவுளின் பெயரை வைத்தால்தான் என அதில் பிரச்சினையில்லை. எனவே ஞானவைரவர் வீதி என்று பெயர் வைப்போம் என்று தாங்கள் தங்களுடைய கோவில் பெயரை முன்மொழிந்துள்ளனர் அதற்கு இவர்கள் மறுப்புத் தெரிவித்து கிருஸ்ணா வீதி என்று பெயர் வைக்க முற்பட்ட போது அதிகார பலத்தை பிரயோகித்த அவர்கள் கிருஸ்ணா வீதி என்று பெயர் வைத்தால் அந்த வீதியிலுள்ள முதல் மூன்று வீடுகளை கடந்த அதிலிருந்து பெயரை வையுங்கள் என்று தெரிவித்து தடையாக இருப்பதனால் இன்று வரை குறித்த வீதிக்கு பெயர் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு எல்லா விடயங்களிலும் சாதிய பாகுபாடு தற்காலத்திலும் மிக மோசமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகளின் நிலைப்பாடு

வரணி சிமிழ் கண்ணி அம்மன் கோவில் விடயத்தில் சிறுபான்மையாக உள்ள உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு எதிராக இந்த விடயத்தில் நீதியை பெற்றுக்கொடுத்தால் யாழப்பாண மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் என்பதற்காக அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசியல்வாதிகளும் இந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. தேர்தல் காலங்களில் வாக்குகளை பெறுவதற்காக வருகின்றவர்கள் அதன் பின் தங்களை திரும்பியும் பார்ப்பது இல்லை என்றும் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளில் உள்ள போதும் அவர்களும் இந்த சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. தெரிவிக்கும் மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது கடந்த வருடம் ஜேசிபி கொண்டு தேர் இழுக்கப்பட்ட போதே தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தியிருந்தால் இந்த முறை திருவிழாவை நிறுத்தும் அளவுக்கு சென்றிருக்காது. ஆனால் அரசியல்வாதிகள் உயர் சாதி என்று சொல்லப்படுகின்றவர்களின் எதிர்ப்பையும் கடந்து எங்களுக்கான நீதியான நியாயத்தை பெற்றுத் தரமாட்டார்கள். அவர்களுக்கு அவர்களின் வாக்குகள் முக்கியம். இங்குள்ள உயர்சாதி என்று சொல்லப்படுகின்றவர்களுக்கு எதிராக செயற்பட்டால் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளபவர்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே எங்களது நியாயத்தை கண்டுகொள்ளவில்லை.

சமூக விடுதலை

முப்பது வருடங்கள் மிக மோசமான யுத்தத்தை சுமந்த இனம், இன்றும் இன விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்ற இனம் தனது இனத்திற்குள் மிக மோசமான சமூக ஒடுக்குமுறைகளை மேற்கொள்கின்றமை வேதனையானவிடயம். தேசியம் என்பது சாதி,மதம், பிரதேசங்கள் கடந்து மக்களை திரளாக்குவது. மக்களை சமத்துவத்தின் மூலமே திரளாக்க முடியும். சாதிவாதிகள், பிரதேசவாதிகள், ஆணாதிக்கவாதிகள், மதவாதிகள் என்போர் மக்களை திரளாக்குவதற்கு எதிரானவர்கள் இவர்களால் மக்களை திரளாக்க முடியாது. அப்படியாயின் இவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள்.

எனவே தமிழ் இனம் தமிழ்த்தேசியத்திற்குள் வலுவாக பயணிக்க வேண்டுமாயின் அசமத்துவத்தை பின்பற்றிக்கொண்டு செல்ல முடியாது. சமத்துவம் மூலம் மக்களை திரளாக்குவதன் மூலமே தமிழ்த்தேசியத்திற்குள் ஒன்றுபட முடியும். சமூக விடுதலையை அடைய முடியா இனம் தன் இன விடுதலையையும் அடைவது கடினமே. சமூக விடுதலையே இன விடுதலையின் ஆரம்பம். #வரணிசிமிழ்கண்ணகிஅம்மன்கோவில் #சாதியப்பாகுபாடு #ஜேசிபிஇயந்திரம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More