இந்தியா சினிமா பிரதான செய்திகள்

12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு 12ஆம் வகுப்புப் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் பராசக்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். தனது நடிப்பாற்றலால் ரசிகர்களால் நடிகர் திலகம் என அழைக்கப்பட்டவர். இவரை கௌரவித்து இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய உயரிய விருதுகளை வழங்கியுள்ளது. மேலும் பிரெஞ்சு அரசால் செவாலியே விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நடிகர் சிவாஜி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு ‘சிதம்பர நினைவுகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். இதில் பாலச்சந்திரன் சிவாஜியுடன் பழகிய தருணம், அவரின் நடிப்பு, கலையுலக அனுபவம், அரசியல் வாழ்க்கை ஆகியவற்றை பற்றி குறிப்புகள் திரட்டி எழுதியுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசு புதியதாக உருவாக்கியுள்ள 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் சிதம்பர நினைவுகள் நூலை அடிப்படையாகக் கொண்டு அவரைப் பற்றிய பாடத்தை இணைத்துள்ளது. இதற்கு தமிழக மக்களும், திரையுலகினரும் தமிழகக் கல்வித் துறைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா இதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் இனிய தமிழ் மக்களே… மாபெரும் கலைஞன் செவாலியர் திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மலையாள எழுத்தாளர் திரு.பாலச்சந்திரன் கள்ளிக்காடு அவர்கள் தான் சந்தித்த அனுபவங்களைத் தொகுத்து சிதம்பர நினைவுகள் என்கின்ற நூலாக வெளியிட்டார்.

இதைப் புதிதாக உருவாக்கியுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாட நூலில் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்குப் புகழ் சேர்க்கும் விதமாகவும் இளம் தலைமுறை மாணவர்கள் அவரை பற்றி அறிந்துகொள்ளும் விதமாகவும் சேர்த்துச் சிறப்பித்த தமிழக அரசுக்குத் திரைப்படத் துறையின் மூத்த கலைஞன் என்கின்ற முறையில் கலையுலகம் சார்பாகவும், என் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மின்னம்பலம்

  #பாடத்தில்   #சிவாஜி #தமிழக அரசு  #பாரதிராஜா #வாழ்க்கை வரலாறு

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.