இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி – சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு :

கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிளும் உள்ள 104 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைதுவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் கனக ரெட்ணம் திலீபன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சி காரணமாக மன்னார், மடு, மாந்தை , முசலி , நானாட்டான், ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறிப்பாக நாட்டான் மற்றும் முசலி பிரதேசங்களை சேர்ந்தவர்களே அதிகம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் கனகரெட்ணம் திலீபன்,,,

மன்னார் மாவட்டம் முழுவதிலும் 17 ஆயிரத்து 984 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 823 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். -அனார்த்த முகாமைத்துவ நிவாரண பிரிவினரால் இவர்களுக்கான தற்காலிக குடி நீர் வசதிகள் தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 12 பௌசர்கள் மூலம் தற்காலிகமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இவ் வறட்சியால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரத்தி 860 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 280 நபர்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் லீற்றர் தண்ணீர் பௌசர்கள் ஊடாக குடி நீராக வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் பெரும்பாலான சிறிய குளங்கள் நீர் அற்ற நிலையிலும் நடுத்தர குளங்களான அகத்திமுறிப்பு , கூராய் போன்ற குளங்கள் மிகவும் குறுகிய நீரை கொண்டதாகவும் காணப்படுகின்றது. குறித்த வறட்சி நிலமையானது தொடர்ந்து காணப்படும் பட்சத்தில் நடுத்தர குளங்களிலும் நீர் அற்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இவ் வறட்சி நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கான வேண்டு கோளானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடங்களை போன்று இந்த வருடமும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட குறித்த மக்களுக்கு உதவித்திட்டம் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில்

மன்னாரில் காணாப்படும் பெரும்பாலான குளங்கள் மற்றும் கால் வாய்கள் நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுவதனால் விவசாய செய்கைகளில் ஈடுபடுபவர்கள்களும் தோட்டச் செய்கையில் ஈடுபடுபவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கால் நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வெப்பம் காரணமாக வரண்டு காணப்படுவதனால் ஒழுங்கான மேய்ச்சல் நிலங்கள் இன்றி கால் நடைகளும் இறந்து போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் குளங்கள் அனைத்தும் நீர் அற்று காணப்படுவதனால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#வறட்சி #மக்கள்  #பாதிப்பு  #மன்னார்  #கால்நடைகள் #மீனவர்கள்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.