Home இலங்கை திருமணமாகி ஒருவாரத்தில் கைதான மகேந்திரனின் சிறை வாழ்வு, 26 வருடங்களை கடக்கிறது…

திருமணமாகி ஒருவாரத்தில் கைதான மகேந்திரனின் சிறை வாழ்வு, 26 வருடங்களை கடக்கிறது…

by admin
மகேந்திரன்
Image captionசெல்லப்பிள்ளை மகேந்திரன்

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், விளக்க மறியலின் பொருட்டும் விடுவிக்கப்படாமல் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.

ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்து, சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உரையாற்றியபோது சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் செல்லப்பிள்ளை மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டார். இதனையடுத்து, நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களின் குடும்ப சூழல் எப்படி உள்ளது என்பது குறித்து அறிய மகேந்திரன் குடும்பத்தினரை பிபிசி தமிழ் சந்தித்தது.

திருமனான உடனே கைது

மகேந்திரனுக்கு திருமணமாகி அப்போது ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. 1993ஆம் ஆண்டு ராணுவத்தினர் மட்டக்களப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இறுதியாக, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கிணங்க நீண்ட கால சிறைத் தண்டனையை மகேந்திரன் இப்போது அனுபவித்து வருவதாக அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முறக்கொட்டான்சேனை மகேந்திரனின் சொந்த ஊர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து சிறிது காலம் மகேந்திரன் செயற்பட்டதாக அவரின் குடும்பத்தார் கூறுகின்றனர்.

பிறகு அந்த அமைப்பில் இருந்து விலகி, திருமணம் செய்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில்தான், மட்டக்களப்பிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக நடத்தப்பட்ட, படையினரின் சுற்றி வளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த சம்பவத்தையும் அதற்குப் பிறகு மகேந்திரனுக்கு என்னவானது என்பதையும், அவரின் மருமகள் மெரீனா பிபிசியிடம் விவரித்தார்.

“ராணுவத்தினருடன் இணைந்து அப்போது செயற்பட்ட, முகம் மறைத்த ‘ஆள்காட்டி’ ஒருவரால், எனது மாமா காட்டிக் கொடுக்கப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்டார். பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர் சார்பாக சட்டத்தரணிகளை வைத்து வாதிடுமளவுக்கு எங்களுக்கு வசதியிருக்கவில்லை. அந்த நிலையில்தான், அவருக்கு 70 வருடங்கள் சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது,” என்கிறார் மெரீனா.

மகேந்திரனுக்கு நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். மகேந்திரனின் சிறைக் காலத்தில்தான் அவரின் அப்பாவும் அம்மாவும் இறந்தார்கள். அம்மாவின் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் மட்டுமே மகேந்திரனுக்குக் கிடைத்தது.

மெரீனா
Image captionமெரீனா

இவ்வாறான விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என, தொடச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது குறித்து சாதகமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், முறக்கொட்டான்சேனையில் சந்தித்த மகேந்திரனின் மூத்த சகோதரி புஷ்பவதியும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்தார்.

“விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, பிடிபட்டவர்களில் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், மகேந்தினுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி, அவரையும் விடுவிக்க வேண்டும். இதனை ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன். அப்பாவும் அம்மாவும் இறக்கும் போது, அவர் எங்களுடன் இருக்கவில்லை. அம்மாவின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டும்தான் அவரைக் கொண்டு வந்தார்கள். அப்போது எங்கள் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை,” என்றார் புஷ்பவதி.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மகேந்திரனுக்கு இப்போது 46 வயதாகிறது. தனது இளமைக் காலத்தை சிறைக்குள்ளேயே அவர் தொலைத்துவிட்டார். அவரை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சிறைக் கைதிகள் தினத்தன்று, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சந்தித்ததாகக் கூறும் மெரீனா நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களால் மகேந்திரன் பாதிக்கப்பட்ட நிலையிலேயே, சிறைவாசத்தை அனுபவதித்து வருகிறார் என்றார்.

இதேவேளை, மகேந்திரனை விடுவிடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனையடுத்தே மகேந்திரன் குறித்து நாடாளுமன்றில் வியாழேந்திரன் உரையாற்றியதாகவும் மெரீனா தெரிவித்தார்.

இதனையடுத்து, “மகேந்திரனின் விடுதலை தொடர்பில், நடவடிக்கைகள் எதையாவது மேற்கொண்டுள்ளீர்களா” என, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் பிபிசி வினவியது.

புஷ்பவதி
Image captionபுஷ்பவதி

அதற்கு பதிலளித்த அவர்; “மகேந்திரனுக்கு 68 வருடங்களைக் கொண்ட சிறைத்தண்டனையும், ஒரு ஆயுள் தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, அவர் சுமார் 30 வருடங்களை சிறையில் கழித்துள்ளார்”.

“சிறைச்சாலை சென்று அவரை நான் சந்தித்தேன். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். நடப்பதற்குக் கூட முடியாத நிலையில் இருக்கின்றார். அந்த சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகள், தங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், மகேந்திரனின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் வேண்டிக் கொண்டனர்” என்று கூறியதோடு, “மகேந்திரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமும், ஏனைய உயர் மட்டத்தவர்களிடமும் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்,” என்றார்.

இதேவேளை, இவ்வாறானவர்களின் விடுதலை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம்சாட்டினார்.

சுமார் 03 தசாப்த காலத்தையும், தனது இளமைக் காலத்தையும் சிறைக்குள் தொலைத்து விட்ட மகேந்திரன், விடுதலை பெற்று வந்து, தங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே, அவரின் குடும்பத்தாரினுடைய பேரவாவாக உள்ளது.

இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் படையினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை ஊடாகவே புனர் வாழ்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஆனால், மகேந்திரன் இறுதி யுத்தத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர் என்பதால், அவரை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More