இலங்கை பிரதான செய்திகள்

மரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக


போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 13 கைதிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென, சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது

ஜூன் 21 இலிருந்து ஜூலை முதலாம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்திற்குள் போதை வர்த்தகத்துடன் தொடர்புபட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இதத்தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இத்தீர்மானம் தொடர்பில் கடும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை,போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரணதண்டனையை அமுல்படுத்தப்போவதை ஜனாதிபதி உறுதி செய்திருக்கின்ற போதிலும், மரணதண்டனையை எதிர்கொண்டிருக்கும் நபர்கள், அவர்கள் தொடர்புபட்டுள்ள குற்றச்செயல்கள் குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இத்தகவல்கள் வெளியிடப்படாமல் இருப்பதால் குறித்த மரணதண்டனைக் கைதிகள் கருணைமனுவிற்கு விண்ணப்பிக்கவோ அல்லது இதிலிருந்து மீள்வதற்கோ வாய்ப்பில்லாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நான்கு கைதிகள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு இவ்விடயம் குறித்து அறிவிக்கப்பட்டமை தொடர்பில் இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் கடந்த 1976 ஆம் ஆண்டின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகவே அமையும் என்றும் 43 வருடகாலத்தின் பின்னர் மரணதண்டனையை நிறைவேற்றுவத்றகு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளமை தொடர்பில் நாம் வெறுப்படைப்படைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் கொடூரமானதும், மனிதாபிமானமற்றதும், இழிவானதுமான இந்தத் தண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஜனாதிபதி சிறிசேன முற்றுப்புள்ளி வைக்கின்றார் என்றும்  இவ்வாறு மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாதெனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய வலய பணிப்பாளர் பிராஜ் பட்நைக் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. #மரணத் தண்டனை #நிறைவேற்றும் #நிறுத்துக #போதைப்பொருள் #சர்வதேச மன்னிப்புச் சபை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.