Home இலங்கை என்ன செய்யப் போகின்றார்கள்….? பி.மாணிக்கவாசகம்…

என்ன செய்யப் போகின்றார்கள்….? பி.மாணிக்கவாசகம்…

by admin

தமிழ் அரசியல் தலைமைகள் ஆளுமையுடன் செயற்படவில்லை. செயற்படத் தவறியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு அழுத்தமாக முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய குற்றச்சாட்டும்சரி, தலைமை குறித்த விமர்சனமும்சரி, சாதாரணமாக அரசியலில் இரண்டறக் கலந்த ஒரு விடயம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆளுமையுடன் செயற்பட்டாலும் அரசியல் தலைமைகள் மீது பல்வேறு தரப்பினராலும், பல்வேறு காரணங்களுக்காக குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுவது இயல்பு. ஆனால் ஏழு தசாப்தங்களாக அரசியல் உரிiமைகள் மறுக்கப்பட்டவர்களாக, இரண்டாந்தரப் பிரஜைகளாகவே தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள், போராட்டங்கள் என்பன நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காட்டவில்லை. மாறாக கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய நிலைமைக்கே ஆளாகியிருக்கின்றது.

இதனால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் மிகவும் பொறுப்போடும், அவதானத்தோடும், தீர்க்கதரிசனத்தோடும் செயற்படவில்லையே என்ற ஆதங்கத்திற்கு அவர்கள் ஆளாகியிருக்கின்றார்கள். இந்த ஆதங்கம், ஆளுமை மிக்க அரசியல் தலைமையே வேண்டும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றச் செய்திருக்கின்றது.

ஆனால் அவர்களின் இந்த எதிர்பார்ப்பை அனுபவமுள்ள அரசியல்வாதிகளும்சரி, புதிதாக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டவர்களும்சரி, சரியான முறையில் அரசியல் ரீதியில் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய உய்த்துணர்வின் அடிப்படையில் அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் அமையவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம்.

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் எனும்போது, பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பே இங்கு முக்கிய கவனம் பெறுகின்றது.

கூட்டமைப்பும் தமிழ் மக்களும்

யுத்;தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின்; ஏகோபித்த அரசியல் தலைமையாகக் கருதப்பட்டது. ஏனைய சில தமிழ் அரசியல் கட்சிகளும் செயற்பட்ட போதிலும், மக்கள் பெரும்பான்மையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே தமது அரசியல் தலைமைத்துவமாக ஏற்றிருந்தார்கள். அதன் மீது ஆழமான நம்பிக்கையையும் கொண்டிருந்தார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் நடவடிக்கைகளை தனக்குத் தெரிந்த வரையில், தனக்குத் தெரிந்த வழிகளில் முன்னெடுத்திருந்த போதிலும், மக்களுக்கும் அந்த அரசியல் தலைமைக்கும் இடையில் உருவாகிய விரிசலை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளைக் காத்திரமாக முன்னெடுக்கவில்லை.

குறிப்பாக தனக்குப் பின்னால் அணிதிரண்டிருந்த தமிழ் மக்களுடன் மேலும் நெருக்கான அரசியல் உறவைப் பேணி, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முறையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

அத்தகைய நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைகள் இருந்தன. கடினமான அரசியல் சூழல் நிலவியது என்பதை மறுப்பதிற்கில்லை. இந்த கடின நிலைமைகளை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளத்தக்க மனப்பக்குவமும் கொண்டிருநதார்கள். ஏனெனில் ஏழு தசாப்தங்களாக அரசியல் உரிமைகளுக்காக தமது தலைவர்கள் முன்னெடுத்திருந்த அரசியல் நடவடிக்கைகளை பேரினவாத அரசாங்கம் எவ்வாறு முறியடித்தது என்பதை அவர்கள் அனுபவ ரீதியாக உணர்ந்திருந்தார்கள்.

இந்த அனுபவமே பேரினவாத அரசாங்கங்களிடம் இருந்து அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பவற்றைப் பெற்றுக்கொள்வது கல்லில் நாருரிப்பது போன்ற செயற்பாடு என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.

இத்தகைய மனப்பக்குவம் கொண்ட தமிழ் மக்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பின்னால் ஓன்றிணைந்து ஓரணியில் திரண்டிருந்தனர். ஆனால், அவர்களை அரசியல் வழித்தடத்தில் வழிநடத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒன்றிணைந்ததோர் அரசியல் சக்தியாக, ஓர்மத்துடன் செயற்படத்தக்கதோர் அரசியல் சக்தியாகத் தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. மாற்றிக்கொள்ளவும் இல்லை.

அவர்களுடைய நடவடிக்கைகள் தமது கட்சி அரசியல் நலன்களுக்காக, வெறுமனே தங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்துகின்ற அரசியல் போக்கைக் கொண்டதாக அமைந்திருப்பதாகவே அவர்களில் பலர் உணர்ந்தார்கள். இதனால் தமிழ்த்தேசிய கூட்டமமைப்பின் மீதிருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைவடையத் தொடங்கியதைக் காண முடிந்தது.

பேரமும் சோரமும்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி ஒரு புறமிருக்க, அது தனக்குள்ளே உட்கட்சி ஜனநாயக வழிமுறைகளை முறையாகப் பேணத் தவறியதன் விளைவாக பங்காளிக்கட்சிகளில் சில கூட்டமைப்பில் இருந்து வெளியேற நேர்ந்தது.

இந்த வெளியேற்றத்திற்கு கூட்டமைப்பின் தலைமையும் தலைமைக் கட்சியும் பல்வேறு காரணங்களைக் கூறிய போதிலும், தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியே தங்களை அணுகாமல், அனைத்துக் கட்சிகளும் கூட்டமைப்பில் ஒன்றிணைந்து ஓர் அணியாக ஒரு குரலில் பேசுகின்ற சக்தியாகத் தங்களிடம் வரவேண்டும் என்ற் தமிழ் மக்களின் அபிலாசையை அது நிறைவேற்றவில்லை என்பதே கூட்டமைப்பின் உடைவுக்கு முக்கிய காரணம்.

கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய அரசியல் கட்சிகள் பலவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றன. கூட்டமைப்பை விமர்சனம் செய்வதே சில அரசியல் கட்சிகளின் அரசியல் செயற்பாடாக இருக்கின்றது என்று கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருந்தமை இங்கு நினைவுக்கு வருகின்றது.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துகின்ற விவகாரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் குறித்து இரண்டு விமர்சனங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாகுவதற்கு முன்னர் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமையாகத் திகழ்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் பேரம் பேச வேண்டிய நேரங்களில் சோரம் போயிருந்ததாகக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களுடைய மன ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும், அவருடைய கூற்று பிரதிபலிக்கின்றது என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கத்துடன் பேரம் பேசுவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதிலும், அவற்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை கைநழுவ விட்டு, அரசாங்கத்தை சிக்கல் நிலைமைகளில் இருந்து அரசியல் ரீதியாகப் பிணை எடுத்த செயற்பாட்டையே முன்னெடுத்திருந்தது.

இதனால் நன்மையடைந்த போதிலும் அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஏமாற்றியிருப்பதையே, மாவை சேனாதிராஜா, இந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டது என்ற ஒப்புதல் கருத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.
விக்னேஸ்வரனின் விமர்சனம்

கல்முனை விவகாரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டை முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய சி.வி.விக்னேஸ்வரனும் கண்டித்துள்ளார். ஆனந்த சங்கரியின் விமர்சனத்தைப் போலல்லாமல், அவருடைய கண்டனம் அரசியல் வட்டாரங்களை முகம் சுழிக்கச் செய்துள்ளது.

‘கல்முனை பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து கால அவகாசத்தை வழங்கப் பார்க்கின்றது. அவர்கள் இந்த மாமா வேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்’ என்று விக்னேஸ்வரன் கோரியிருந்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவி;த்திருந்தார்.

வடபகுதி மக்களுடைய பேராதரவைப் பெற்ற விக்னேஸ்வரன் முன்னாள் வடமாகாண முதலமைச்சராக அரசியல் செய்தவர். கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தனின் தெரிவாக அரசியலுக்குள் கொண்டு வரப்பட்ட அவர் மீது கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் அரசியல் ரீதியாகப் பெரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவருடைய முதலமைச்சர் செயற்பாடுகள் எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை. கூட்டமைப்புத் தலைமையுடனும், தமிழரசுக் கட்சியுடனும் கொள்கை ரீதியாக முரண்பட்ட அவர் அந்தத் தரப்பினரால் அரசியல் எதிரியாகக் கருதும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருந்தன.

முhகாண சபை கலைப்பின் பின்னர், மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கும் போக்கில் அவர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றார். இப்போதும்கூட கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்துள்ள தரப்பினர், விக்னேஸ்வரனின் தலைமையில் தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் வழித்தடத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கல்முனை பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை பார்ப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அவருடைய இந்த சொற்பிரயோகம் கூட்டமைப்பைக் கண்டிப்பதற்குப் பதிலாக பொதுவெளியிலான அவருடைய அரசியல் மட்டத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல என சுட்டிக்காட்டியுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது என்று சாடியுள்ளார். வுpக்னேஸ்வரன் அரசியல் இலாபங்களுக்காக எந்த அளவுக்குக் கீழ் மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுவிட்டது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை பிரச்சினை நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்களும், கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளும் உரிய நேரங்களில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருந்ததன் காரணமாகவே அது இப்போது விசுவரூபம் எடுத்துள்ளது.

அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் கொண்டிருந்த ஆதரவு காலத்திலேயே சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி, இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வை எட்டியிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கண்ணியம் அவசியம்

கல்முனை பிரச்சினை குறி;த்து அரசாங்கம் பரிசீலனை செய்தபோது, உடனடியாகத் தீர்வு காணத் தவறியதை கூட்டமைப்பின் தலைவர்கள் சுட்டிக்காட்டி, உடனடியாக அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இறுக்கமாக எடுத்துரைத்திருக்க வேண்டும்.

அத்துடன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் தரப்பினரையும் உள்ளடக்கி தீர்வு காண்பதற்கான துரித நடவடிக்கை குறித்து அரசாங்கத்துடன் பேசியிருக்க வேண்டும்.

ஆனால் கல்முனை விவகாரத்தை அரசாங்கம் ஆராய்ந்தபோது எத்தகைய நடவடிக்கைகளை கூட்டமைப்பு முன்னெடுத்திருந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. ஆனால், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கான போராட்டம் இரு சமூகங்களிடையே எரியும் பிரச்சினையாக மாறியிருந்தது.

அது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று சமூகங்களையும் உணர்ச்சிகரமான ஒரு சூழலுக்குள் இழுத்துவிட்டிருந்தது. பௌத்த பிக்குகளும் இதில் நேரடியாகப் பங்கேற்றிருந்ததனால், இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்திருந்தது. உரிமைப் போராட்டம் என்பதற்கு அப்பால் இனங்களின் கௌரவத்தைப் பரீட்சிக்கும் அளவுக்கு அது மோசமடைந்திருந்ததையும் காண முடிந்தது.

இத்தகைய நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் காலம் தாழ்த்துகின்ற வழிமுறைக்கு இடமளித்திருக்கக் கூடாது. எனவே, கல்முனை விவகாரத்தை கையாண்ட விதம் குறித்து, கூட்டமைப்பிடம் கேள்வி கேட்பதோ அல்லது கூட்டமைப்பை விமர்சனம் செய்வதோ தவறாகாது.

ஆனால் அந்த விமர்சனமும் கண்டனமும் கண்ணியம் மிக்கதாக இருத்தல் அவசியம். பொது அரசியல் வெளியில் மக்கள் அரசியல்வாதிகளின் நடை உடை பாவனைகளை மட்டுமல்ல. அவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகங்களையும்கூட பலரும் தீவிரமாகக் கவனத்திற் கொள்வார்கள்.

என்ன செய்யப் போகின்றார்கள்….?

கல்முனை விவகாரத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற வார்த்தைப் பிரயோகம் பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்ற வழிமுறைகளைத் திசை திருப்பிவிடக் கூடாது. நீண்ட நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுள்ள கல்முனை பிரச்சினைக்கு சுமுகமான ஒரு தீர்வை எட்டுவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஆர்வம் கொண்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஆழமான பொறுப்பு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.

இரண்டு சிறுபான்மை இன சமூகங்களுக்கிடையில் எழுந்துள்ள இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மூன்றாவது தரப்பாகிய பௌத்த பிக்குகள் தலைமைதாங்கி பங்கேற்கின்ற அளவுக்கு நிலைமைகள் விரிவடைந்திருப்பது நல்லதல்ல. அது மட்டுமல்ல. அந்தப் போராட்டத்தின் செல்நெறியைத் தீர்மானிக்கின்ற சக்தியாகவும் அவர்கள் மாறியிருக்கின்றார்கள்.

இது தமிழ் அரசியல் தலைமைகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எந்த அளவுக்குத் தொலைவி;ல் விலகி இருக்கின்றார்கள் என்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களினதும், சிங்களவர்களினதும் அரசியல் செல்வாக்கே மேலோங்கி வருகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்தப் பிரதேசத்தில் தனது செல்வாக்கை இழந்து வருகின்றது என தெரிவிக்கப்படுகின்ற அரசியல் கூற்றை கல்முனை விவகாரம் நிதர்சமாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது.

அதேவேளை, கூட்டமைப்புக்குப் பதிலாக அல்லது அதன் இடத்தை நிரப்பத்தக்க வகையில் ஒரு மாற்றுத் தலைமை உருவாக வேண்டும் என்ற அரசியல் உந்துதலைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும்கூட, அந்தப் பிரதேசத்தின் மீது எந்த அளவுக்கு அந்தத் தரப்புக்கள் கரிசனை கொண்டிருக்கின்றன என்பதை இடித்துரைத்திருக்கின்றது என்றே கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் கல்முனை விவகாரமும், அதில் கூட்டமைப்பு மீது எழுந்துள்ள விமர்சனங்களும் ஒட்டு மொத்தமாக தமிழ் அரசியல் ஆளுமை மிக்க ஒரு தலைமையின்றி எவ்வாறு தடுமாறி நிற்கின்றது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த அளவு இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது என்பதையும் கல்முனை விவசாரம் உணர்த்தியிருக்கின்றது.

எனவே, ஆளுமை மிக்க அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு தமிழ் அரசியல் சக்திகளும் அரசியல்வாதிகளும் என்ன செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வி இதன் ஊடாக எழுந்திருப்பதையே காண முடிகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More