புகையிரத சேவையைத் தனியார்மயமாக்கும் திட்டமில்லை என மத்திய புகையிரத துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். முக்கிய நகரங்கள், சுற்றுலா தளங்களின் வழியாகச் செல்லும் சில புகையிரதங்களின் இயக்கத்தைத் தனியார்மயமாக்க 100 நாள் திட்டம் ஒன்றை புகையிரத அமைச்சு கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. அத்துடன் புகையிரத சேவைக்குட்பட்ட 7 உற்பத்தி பிரிவுகள், பணிமனைகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க 100 நாள் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட சில புகையிரத சேவைகள் தனியார் மயமாக்கப்படவுள்ளதாகக் கடந்த வாரத்தில் வெளியான செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே மத்திய புகையிரத அமைச்சர் பியூஷ் கோயல் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் புகையிரத சேவையில் அடுத்து நிரப்பப்படவுள்ள 9000 பணியிடங்களில் 50 சதவிகிதத்தைப் பெண்களுக்கு ஒதுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #புகையிரத சேவையை #தனியார்மயமாக்கும் #பியூஷ் கோயல்
Add Comment