இலங்கை பிரதான செய்திகள்

புலிகளை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது, முட்டாள் தனமானது….

தமிழ் மக்களின் உரிமைக்காகவே வே.பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடினார்கள். இறுதிவரை கொள்கைக்காக போராடி மரணித்தார்கள் அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முனைவது படு முட்டாள் தனமானது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போதை பொருள் விற்பனையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது எனவும், உலகத்தில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்கு தொடர்பிருந்தது எனவும் , போதை பொருள் வர்த்தகத்தின் மூலம் தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கி போர் நடத்தினார் எனவும், ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்தார். இது தொடர்பில், பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , புலிகளின் தலைவர் மது போதையை விரும்பாதவர் , அதற்கு எதிரானவர். போர்காலத்தில் இது நமக்கு நன்கு தெரியும். அவர்களின் ஆயுத போராட்டத்திற்கு இந்தியா , கனடா , சுவிஸ் , லண்டன் அமெரிக்கா , பிரான்ஸ் என சர்வதேச நாடுகளில் வாழும் தமிழர்கள். நிதியுதவிகளை வழங்கினார்கள். அந்த நிதிகளின் மூலமே போராட்டத்தை பிரபாகரன் முன்னெடுத்தார். அந்த நிதிகளின் மூலமே நவீன ரக ஆயுதங்களை கூட வெளிநாடுகளில் இருந்து புலிகள் கொள்வனவு செய்தனர்.

இறுதி போர் ஆரம்பமான போது புலிகளின் ஆயுதங்களை ஏற்றி வந்த பல கப்பல்களை எனது படையினர் தாக்கியழித்த வரலாறும் உள்ளது. இன்றும் கூட புலம்பெயர் அமைப்புக்கள் புலிகளின் நினைவு தினங்களை பெருந்தொகை பணம் செலவிட்டு பெருவிழாவாக நடாத்தி வருகின்றார்கள்.

புலிகளின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள். விற்பனை கொடிகட்டி பறக்கவில்லை. போர் நிறைவுக்கு வந்த பின்னரே வடக்கில் போதைப்பொருள் பாவனையும், விற்பனையும் தலைவிரித்தாடுகிறது. இதனை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும். என தெரிவித்தார். #பிரபாகரன் #விடுதலைப்புலிகள் #போதைப்பொருள்கடத்தல் #மைத்திரிபாலசறிசேனா #சரத்பொன்சேகா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.