இலங்கை பிரதான செய்திகள்

வெளிச்சக்திகள் ஏன் கவனம் செலுத்தக் கூடாது? பி.மாணிக்கவாசகம்..

தமிழரசுக் கட்சியின் 16 ஆவது மாநாடு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்ததோ இல்லையோ தெரியாது. ஆனால், அரசியல் தீர்வுக்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வியை உசுப்பேற்றி விட்டிருக்கின்றது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த கருத்துக்களே இதற்குக் காரணம். அவர் கூறிய கருத்துக்கள் நிதர்சனமானவை. தமிழர் தரப்பு அரசியலின் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைக்குரியவை.

ஆனால் அவருடைய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களினதும், ஊடகங்களினதும் ஏளனத்திற்கும், பலத்த கண்டனத்திற்கும் ஆளாகியிருப்பது துரதிஸ்டவசமானது. ஆனால் உண்மையில் இத்தகைய ஏளனத்தையும், கண்டனத்தையும் வெளியிட்டிருப்பவர்கள், இந்த நிலைமைகளுக்கு அப்பால் சிந்தித்திருக்க வேண்டும்.

உண்மையில் தமிழரசுக் கட்சியினதும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் செயல் வல்லமை முடக்கத்திற்கு அப்பால், தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பொறுப்புடைய இலங்கை அரசாங்கத்தினதும், ஐநா, ஐநா மனித உரிமைப் பேரவை மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளினதும் தமிழர் பிரச்சினை தொடர்பிலான நிலைப்பாடு குறித்து கவனம் செலுத்தியிருக்க வேண்டியது அவசியம்.

தமிழரசுக் கட்சி என்பது ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பல்ல. அது சாத்வீக அரசியல் வழிகளில் நம்பிக்கை கொண்டது. அந்தக் கட்சியின் மூத்த முக்கிய தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தனும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவரல்ல. ஆயுதப் போராட்டத்தைத் தூண்டக் கூடிய வல்லமை பெற்றவருமல்ல.

அவருடைய வல்லமை என்ன, பலவீனம் என்ன என்பது வேறு விடயம். இருப்பினும், இன்றைய அரசியல் சூழலில் இளைஞர்களை வழிநடத்தக் கூடிய தலைமைத்துவ ஆற்றல் அவரிடம் இருப்பதாகக் கூற முடியாது. ஏனெனில் தமிழரசுக் கட்சி அவருடைய தலைமையின் கீழ் இயங்கியபோதிலும், இளைஞர்களை அந்தக் கட்சியில் அவர் அணி சேர்த்திருக்கவில்லை. அவருடைய தலைமையின் கீழ் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலும் இளைஞர்களின் சக்தியையோ அல்லது இளைஞர்களின் பெருமளவிலான பங்களிப்பையோ காண முடியவில்லை.

தமிழரசுக் கட்சியும்சரி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்சரி இளைஞர்களுக்கு உரிய இடமளிப்பதில்லை. இளைஞர்களை பங்காளர்களாக இணைத்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டே காணப்படுகின்றது.

நம்பிக்கையும் முயற்சியும்

இத்தகைய குற்றச்சாட்டு இருந்த போதிலும் தமிழரசுக் கட்சியிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலும் இளைஞர்களே இல்லை என்று பொருளல்ல. அந்த இரண்டு அமைப்புக்களிலும் இளைஞர்கள் இருக்கின்றார்கள். ஆனால், சாத்வீகப் போராடத்திற்குப் பதிலாக இளைஞர்களின் பலம் மிகுந்ததோர் ஆயுதப் போராட்டத்தின் பின்னரான காலப்பகுதியில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுகின்ற அரசியல் கைங்கரியத்தில் இளைஞர்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் இல்லை என்பதை மறுக்க முடியாது.

இத்தகையதோர் அரசியல் பின்னணியில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சி மாநாட்டில் ஆற்றிய உரையில் ஆயுதப் போராட்டம் குறித்து வெளியிட்ட கருத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. அதைப் பற்றி ஆராய வேண்டியும் உள்ளது.

‘ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள். ஆயுதபலம் இல்லாவிடில், அதைக் கைவிடுவோம் என நினைப்பீர்களானால், அது ஒரு தவறான நிலைப்பாடாகும்’ என்று ஆட்சியாளர்களை நோக்கிக் கூறியுள்ளார்.

நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சம்பந்தன், அதன் ஊடாக ஓர் அரசியல் தீர்வை எட்டிவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். அந்த ஆதரவை ஒரு நம்பிக்கை என்று இல்லாவிட்டலும்கூட, அத்தகையதோர் அணுகுமுறையின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அரசியல் முயற்சியை அவர் உறுதியாக மேற்கொண்டிருந்தார் என்று கொள்ள முடியும்.

ஆனால் அவர் எதிர்பார்த்ததைப் போன்று அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. நல்லாட்சி அரசாங்கம் அவரையும் தமிழ் மக்களையும் ஏமாற்றிவிட்டதே என்ற ஆதங்கத்தையே அவர் தனது கூற்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் மட்டுமல்ல. மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் எல்லாமே – நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எல்லோருமே இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழர் தரப்பை ஏமாற்றியே வந்துள்ளார்கள். இதைத்தான் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொறுப்பு தவறிய இரு கட்சி ஆட்சி

யுத்தத்தைத் தீவிரப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தி, வார்த்தைகளின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறியிருந்தார். அதனை தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறதியாகவே அவர் வழங்கியிருந்தார். இதே வாக்குறுதியை அவர் இந்தியாவுக்கும் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் யுத்தத்தில் வெற்றியடைந்ததும், வெற்றி மமதையில் இந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. மகிந்த ராஜபக்சவுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலத்திலும் இத்தகைய போக்கே கடைப்பிடிக்கப்பட்டது. அரசியல் தீர்வு காண்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளினால் மோசமாகத் தோற்கடிக்கப்பட்டதையும் மறுப்பதற்கில்லை.

மொத்தத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதே நாட்டின் பாரம்பரிய நடைமுறையாக இருந்து வருகின்றது. இது ஓர் அரசியல் மரபாகவே கடைப்பிடிக்கப்படுகின்றது. ஏனெனில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், மனித உரிமைகள் பேண்பபட வேண்டும் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் வற்புறுத்துபவர்கள், அடுத்து வருகின்ற தேர்தலில் வெற்pற பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், அந்த விடயங்களைக் காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள்.

அரசியல் தீர்வு காண்பதில் அவர்கள் நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள். மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் என்பவற்றிலும் எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் கொண்டிருந்த தன்மையைப் பேணமாட்டார்கள். இது வாழையடி வாழையாக அரசியலில் இடம்பெற்று வருகின்றது. இதைத்தான் சம்பந்தன் தனது கூற்றில் எடுத்துரைத்திருக்கின்றார்.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து பத்துவருடங்களாகிவிட்டன. ஆனால் அரசியல் தீர்வு காண்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னர், எதிரும் புதிருமாகச் செயற்பட்டு வந்த ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தன. இந்த ஆட்சி உருவாக்கத்திற்கு சிறுபான்மை இன மக்கள் பேராதரவு வழங்கியிருந்தார்கள். அந்த ஆதரவில்லாதிருந்தால், இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்க முடியாது.

ஆகவேதான் அரசியல் தீர்வு காணுகின்ற பொறுப்பு வேறு எந்த அரசாங்கத்ததையும்விட இந்த அரசுக்கு அதிகமாகவே இருக்கின்றது. அந்த பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிறைவேற்றத் தவறிவிட்டார்கள் என்பதை சம்பந்தன் இடித்துரைத்;திருக்கின்றார்.

மூன்று விடயங்கள்

சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ள சம்பந்தனின் கருத்தில் மூன்று விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

‘ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள். ஆயுதபலம் இல்லாவிடில், அதைக் கைவிடுவோம் என நினைப்பீர்களானால், அது ஒரு தவறான நிலைப்பாடாகும். அவ்வாறான நிலைப்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது’ இதுதான் சம்பந்தனுடைய உரையில் சர்ச்சைக்கு உரிய அம்சங்களாகும்.

ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள். ஆயுதபலம் இல்லாவிடில், அதைக் கைவிடுவோம் என நினைப்பீர்களோ என்று அவர் வினவியிருக்கின்றார். அத்தகைய நிலைப்பாடு தவறானது என குறிப்பிட்டுள்ள சம்பந்தன், நாட்டை மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்ற இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்த தருணத்திலும் அரசியல் தீர்வு காண்பதில் நாட்டம் கொள்ளத் தவறிய வரலாற்றுத் தவறு இழைக்கப்பட்டிருக்கின்றது என மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் – இது ஒரு விடயம்.

இரு கட்சி இணைந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி, நாலரை வருடங்களாக ஆட்சி செலுத்துவதற்கு நாங்கள் உதவியிருக்கின்றோம். ஆனால் ஆயுதப் போராட்டம் போன்ற மோசமான நிர்ப்பந்தம் இல்லாவிட்டால் நீங்கள் அரசியல் தீரவு குறித்து அக்கறை கொள்ளாத போக்கையே வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்.

அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், ஆட்சி நடத்துவதற்கும் நாங்கள் உதவி செய்து ஒத்துழைத்திருக்கின்றோம். உங்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் எங்களுடைய நல்லெண்ணத்தையும், விட்டுக் கொடுத்து ஒத்துழைக்கின்ற தன்மையையும் செயல் வடிவத்தில் நாங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றோம். எங்களுடைய இந்த நல்லுறவு அரசியல் போக்கை நீங்கள் தவறான வழியில் பயன்படுத்தியிருக்கின்றீர்கள். அந்தப் போக்கு உங்களுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது. ஆகவே நீங்கள் எடுக்கின்ற அரசியல் நிலைப்பாடு குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பது இரண்டாவது விடயம்.

ஆயுதப் போராட்டம் இருந்தால்தான் நீங்கள் அரசியல் தீர்வுக்காகச் செயற்படுவீர்களோ என்பது பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பது, உங்களுக்கு நெருக்கடிகள் தந்தால்தான் – நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தினால்தான் நீங்கள் அரசியல் தீர்வு குறித்து அக்கறை கொள்வீர்கள் என்பதைக் காட்டியிருக்கின்றீர்கள். ஆகவே உங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பது மூன்றாவது விடயம்.

இங்கு அவர் ஆயுதப் போராட்டத்தை உதாரணமாகக் காட்டியிருக்கின்றாரே தவிர, ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் நிர்ப்பந்தத்தை அல்லது நெருக்கடியைக் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்ற கருத்தில் அவர் குறிப்பிடவில்லை. ஏனெனில் ஆயுதப் போராட்டத்திற்கும் அவருக்கும் காத தூரம் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். அதேவேளை, ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கக் கூடிய அரசியல் வல்லமையும் அவரிடம் கிடையாது என்பதும் வெளிப்படை.

அரசினதும் புறசக்திகளினதும் பொறுப்புக்கள்

எதிர்ப்பரசியலை நடத்தி வந்த தமிழ்த் தரப்பு ஒத்துழைப்பு அரசியல் போக்கைக் கடைப்பிடித்து, இரண்டு பிரதான கட்சிகளையும் ஆட்சிப் பொறுப்பில் பங்காளர்களாக்கி புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. .இந்த அரசியல் ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டின் மூலம் தனிநாட்டுக் கோரிக்கையில் இருந்து கீழிறங்கி, தமிழ்த்தரப்பு விட்டுக்கொடுத்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல், எத்தனையோ பாதிபபுகளுக்கும் அநீதிகளுக்கும் ஆளாகிய தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழலாம், அதற்காக சமாதான வழியில் முயற்சிகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த விட்டுக்கொடுப்புக்கு அரசாங்கம் எந்த அளவுக்கு கௌரவம் அளித்திருக்கின்றது. பேரின மக்களாகிய சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் இந்த நிலைப்பாட்டிற்கு வெளிப்படுத்தியுள்ள உணர்வுகள் என்ன? ஆட்சியாளர்கள் இந்த நல்லெண்ணத்தை எந்த வகையில் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்? – இது போன்ற பல கேள்விகள் அரச தரப்பின் நிலைப்பாட்டில் எழுந்திருக்கின்றன.

இந்தியா இலங்கையுடன் 1987 ஆம் ஆண்டு செய்து கொண்ட சர்வதேச மட்டத்திலான ஒப்பந்தத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான கைங்கரியத்தில் பங்கேற்றிருந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற இணக்கப்பாடான நிலைப்பாட்டைக் கொண்ட தமிழ் மக்களுக்கு எந்த வகையில் உதவியிருக்கின்றது? எத்தகைய அணுகுமுறையைக் கையாண்டு தமிழ் மக்களின் அரசியல் விட்டுக்கொடுப்பைப் பயன்படுத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் பங்காற்றியிருக்கின்றது? – இது போன்ற கேள்விகள் இந்தியாவிடம் எழுப்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

யுத்த மோதல்களின்போது அரச படைகளினால் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்பட்டன, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டன என்பதற்கான முதற்தர ஆதாரங்களைக் கொண்டிருந்த போதிலும், அரசாங்கம் அதற்கான பொறுப்புக்களை ஏற்றுச் செயற்படுவதற்கு உரிய எத்தகைய அழுத்தங்களை ஐநா கொடுத்துள்ளது? பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கம் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகளில் இணை அனுசரணை வழங்கி ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதாக ஒப்புதல் அளித்திருந்த போதிலும், அந்த உறுதி மொழி நிறைவேற்றப்படுவதற்கு ஐநா மனித உரிமைப் பேரவையும், ஐநாவும் அரசாங்கம் தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன?

வெளிச்சக்திகள்

யுத்த மோதல்களின்;போது சமூகமளித்திருந்த ஐநா அமைப்புக்கள், அவற்றின் பணியாளர்கள் இறுதிக்கட்ட யுத்தத்திற்கான இராணுவ தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டபோது, அரசாங்கத்தின் உத்தரவையடுத்து, யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த முதற்தர தகவல்களைப் பெற்றிருந்த போதிலும் உரிமை மீறல்களையும், மனிதப் படுகொலைகளையும் தடுத்து நிறுத்த ஐநா தவறியிருந்தது.

இலங்கை தொடர்பிலான ஐநாவின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் குறித்த உண்மையை அறிவதற்கான சுயபரிசோதனை அறிக்கையின் மூலம் ஒப்புதல் வாக்குமூலத்துக்கு ஒப்பான வகையில் ஐநா தனது பொறுப்புக்களில் இருந்து தவறிவிட்டிருந்தது என்ற உண்மையைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தது.

அவ்வாறு ஏற்றுக்கொண்ட பின்னர், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஐநாவும், ஐநா மனித உரிமைப் பேரவையும், அதன் உறுப்பு நாடுகளும் ஆக்கபூர்வமான வழிகளில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? அந்த நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள் என்ன? தனது தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி அவற்றை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின்னடித்துக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – இது போன்ற கேள்விகள் ஐநாவை நோக்கியும், ஐநா மனித உரிமைப் பேரவையை நோக்கியும் எழுந்திருக்கின்றன.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடமும் இத்தகைய கேள்விகளே எழுந்திருக்கின்றன. இந்தக் கேள்விகளை சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் உரிய வழிமுறைகளில் எழுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டியதே இன்றைய அரசியல் தேவையாகும்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களைடுத்து, சர்வதேசத்தின் கவனம் இலங்கையின் மீது திரும்பியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், அந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் அநேகமானவர்கள் தமிழர்கள் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் விரைவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைப்பது குறித்தும் அழுத்தம் கொடுப்பது குறித்தும் தமிழர் தரப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தவிர்த்து எத்தனைபேர் சிந்தித்திருக்கின்றனர்?

தமிழ் அரசியல்வாதிகள், வெறுமனே அரசியல் பிரசாரங்களிலும், மக்களைத் தங்கள் பக்கத்தில் அணிதிரட்டுவதற்கான முயயற்சிகளிலுமே ஈடுபட்டிருக்கின்றார்கள். இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம். ஆனால் மக்களை அணி திரட்டுவதிலும் பார்க்க பிரச்சினைகளுக்கு எந்தெந்த வழிமுறைகளில் தீர்வு காண முடியும் என்று சிந்திப்பதும், அவற்றைக் கண்டறிய வேண்டியதுமே இன்றைய அரசியல் தேவையாக உள்ளது.

எனவே, இந்த நிலையில், பொது அமைப்புக்களும் புத்திஜீவிகளும் துறைசார்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து சிந்தித்ததுண்டா? ஏன் சிந்திக்கக் கூடாது? அத்தகைய சிந்தனையின் அடிப்படையில் தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், அழுத்தம் கொடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற வழித்தடத்தில் செல்வதற்குக் கவனம் செலுத்தாதது ஏன்?

அதேநேரம், தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றை விமர்சனம் செய்கின்ற ஏனைய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இறுக்கமான பிடியில் ஆட்சியாளர்கள் சிக்கியுள்ள நிலையில் செயலாற்ற முடியாத .இக்கட்டான ஓர் அரசியல் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிக்கியிருக்கின்றது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். அத்தகைய சூழலில், இந்த விடயங்களில் வெளிச்சக்திகள் ஏன் கவனம் செலுத்தக் கூடாது?

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.