இந்தியா பிரதான செய்திகள்

“பார்லிமென்ட் றைகர்” 20 ஆண்டுகளின் பின்னர் எம்.பி ஆகும் வைகோ!

இறுதியாக 1999ஆம் ஆண்டு சிவகாசி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக பாராளுமன்றத்துக்குள் நுழைந்த வைகோ, இருபது ஆண்டுகளுக்குப்பிறகு தற்போதுதான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகின்றார்.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில், `நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது  இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியமையால் வைகோ மீது தேசத் துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்தவாரம் வழங்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில், ஓராண்டு சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் தண்டப் பணமும் விதிக்கப்பட்டது. வைகோவின் வேண்டுகோளை ஏற்று ஒருமாத காலத்துக்கு தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டது.

எதிர்வரும் 18ஆம் திததி இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் போட்டியிடுகிறார். இந்தத் தீர்ப்பால் வைகோ போட்டியிட முடியுமா என்ற சந்தேகம் நிலவியது. ஒருவேளை வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக தி.மு.க-வின் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுவார் எனக் கூறி வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் போட்டியிட உள்ள வைகோ உட்பட 11 பேரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. சுமார் ஒருமணி நேர ஆலோசனைகளுக்குப் பிறகு வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதியாகியுள்ளது.

மக்களவை, மாநிலங்களவை என 24 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வைகோ. `பார்லிமென்ட் றைகர்’ என்று தி.மு.கவினராலும், “காங்கிரஸின் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ ஒருவருக்குச் சமம்” என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாலும் அழைக்கப்பட்டவர். இறுதியாக 1999ஆம் ஆண்டு சிவகாசி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக பாராளுமன்றத்துக்குள் நுழைந்த நிலையில் தற்போது இருபது ஆண்டுகளுக்குப்பின்னர் உறுப்பினராகச் செல்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்னை, நதி நீர் இணைப்பு, மீனவர்கள் மீதான தாக்குதல் எனத் தமிழர்களின் பிரதான பிரச்சினைகளை அழுத்தமாக அந்தக் காலகட்டங்களில் நாடாளுமன்றத்தில் பதிய வைத்த வைகோவின் சேவை இன்றைய ஸ்டெர்லைட், மீத்தேன், காவிரி, மும்மொழிக் கல்விக்கொள்கை, நீட் தேர்வு பிரச்னை காலகட்டங்களிலும் தேவை என்று கூறியுள்ள ம.தி.மு.க தொண்டர்கள் அவரின் வேட்புமனு ஏற்பால் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். #சிவகாசி #வைகோ இந்தியபாராளுமன்றம் இந்தியசட்டமன்றம் ராணி சீதை மன்றம்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.