உலக கிண்ணத்தை கைப்பற்ற, 242 ஓட்டங்களை நோக்கி ஓடுகிறது இங்கிலாந்து….

இங்கிலாந்து அணியுடான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணி 241 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

மார்டின் குப்டில் – ஹென்றி நிக்கோலஷ் ஆகியோர் அந்த அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர முதல் ஆறு ஓவரில் நியூஸிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களை குவித்தது.

எனினும் 7 ஆவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் மார்டின் குப்டில் எல்.பி.டபிள்யூ. முறையில் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வில்லியம்சன் களமிறங்கி ஹென்றி நிகோலஷ்ஷுடன் கைகோர்த்து பொறுமையுடன் ஆடி வந்தார்.

இதனால் நியூஸிலாந்து அணி 10 ஓவரில் 33 ஓட்டத்தையும், 20 ஓவரில் 91 ஓட்டத்தையும் பெற்ற 22.4 ஆவது ஓவரில் வில்லியம்சன் 30 ஓட்டத்துடன் பிளன்கட்டின் பந்து வீச்சில் பட்லரிடம் பிடிகொடுத்து வெளியேறினார் (103-2.)

மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரோஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஷ் 25.1 ஆவது ஓவரில் அரைசதம் விளாசினார். இருப்பினும் அவர் 26.5 ஆவது ஓவரில் மொத்தமாக 77 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 55 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

நான்காவது விக்கெட்டுக்காக டெம் லெதம் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க ரோஸ் டெய்லர் 33.1 ஆவது ஓவரில் 15 ஓட்டத்துடனும், அடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் 39 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 19 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து அணி 40 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆடுகளத்தில் டொம் லெதம் 24 ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 5 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

தொடர்ந்து 44 ஆவது ஓவரில் 200 ஓட்டங்களை கடந்ததுடன் 45 ஆவது ஓவரில் 211 ஓட்டங்களையும் நியூஸிலாந்து அணி பெற்றது. இதன் பின்னர் 46.5 ஆவது ஓவரில் கிரேண்ட்ஹோம் 16 ஓட்டத்துடன் ஜோப்ர ஆர்ச்சரின் பந்து வீச்சில் வின்சிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆடுகளத்தில் மிட்செல் சாண்டனர் 5 ஓட்டத்துடனும், டிரெண்ட் போல்ட் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் லியாம் பிளாங்கட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்களையும், ஜேப்ர ஆர்ச்சர் மற்றும் மார்க்வூட் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

photo credit : ‍icc