இலங்கை பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்காலுக்குப் பின் சைவ ஆலயங்கள் சிங்களமயப்படுத்தப்படுகின்றன ~

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், ஈழத்து சைவ ஆலயங்கள் சிங்களமயப் படுத்தப்படுவதாக திருகோணமலை  தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலின் வரலாறு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இருப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் மிக அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சிங்கள – பௌத்த அரசானது தமிழர் வரலாற்றை மகாவம்ச மைய வரலாறாக திரிபுபடுத்த முயற்சிக்கின்றது. வரலாற்றியலை திரிபுபடுத்தல், புலமைசார் கற்கைநெறிகளின் ஊடாக முன்னெடுக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பின் முள்ளிவாய்க்கால் சூழலில் எளிய மக்களின் எதிர்வினை

சிங்கள-பௌத்த மயமாக்கலில் சைவ ஆலயங்கள் பாதிக்கப்படுவது, ஏனைய மதத்தலங்களோடு ஒப்பிடுகையில், எல்லோருக்கும் தெரிந்த தரவு ரீதியல் நிறுவப்பட்ட உண்மை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் மிகப் பாரிய அளவில் சிங்கள பௌத்த மயமாக்கம் குறிப்பாக பின் முள்ளிவாய்க்கால் தளத்தில் மிக வீரியமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது தொடர்பான எதிர்வினை, நேர்மறையான, கூட்டு தந்திரோபாய நகர்வுகள் தமிழ் அரச தரப்பிலோ அல்லது தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் இடையேயோ இருப்பதாகத் தெரியவில்லை.சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான பின்-முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தில் மிகச் சிறிய எதிர்வினை முயற்சிகள் அடித்தள மக்களால் ஒழுங்கமைக்ப்பட்டு வருவதோடு இவ் எதிர்வினை நடவடிக்கைகள் பாரியளவில் தமிழ் மக்கள் அரசியல் உரிமைசார்ந்து மாற்றத்தை கொண்டு வந்ததா என்பதை கடந்த ஒரு தசாப்தமாக ஆராயவேண்டிய தேவை உள்ளது.

இவ்வாறான எதிர்வினைகளை ஒரு சமூக இயக்கமாக மாற்றுகின்ற தலைமைத்துவவெளி இன்னும் வெறுமையாகவே உள்ளது. சிங்கள-பௌத்த காலனித்துவத்திற்கு எதிரான நிறுவனமயமாக்கப்பட்ட தந்திரோபாய நகர்வுகள் கட்டமைக்கப்படும் வரை காலனித்துவம் இன்னும் அகலமாக விரிந்து கொண்டே போகும். இன்று கன்னியா பிள்ளையார் கோவில் நாளை கோணேசர் கோவிலாகவும் இருக்கலாம்.

சிங்கள பௌத்த மயமாக்கலை எமது தலைமை நிராகரிக்க முடியாது

இந்த சிங்கள-பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை, தமிழ் அரசியல் தலைமைகள் இல்லை என்று நிராகரிக்க முடியாது. இவ்வாறான சிங்கள-பௌத்த அரசியல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிரான மாற்றுவழியை தமிழ் அரசியல் தலைமைகள் முன்வைக்காதது அவர்களின் பொறுப்புக்கூறலிலிருந்து நழுவுவதாக அமையும்.கன்னியா பிள்ளையார் கோவில் தொடர்பாக பல தரப்பினரிடம் இது பற்றி கலந்துரையாடி உள்ளோம். அது பற்றிய குறுகிய, நீண்டகால விளைவுகள் பற்றியும் தமிழின இருப்பின் கேள்விக்குட்படுதல் பற்றியும் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தி உள்ளோம். ஆனால் இதுவரைக்கும் அசமந்தபோக்கு கடைப்பிடிக்கப்படுவது இது தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பவர்களின் வகிபங்கை சந்தேகம் கொள்ளச்செய்கின்றது.

இனியும் இவ்வாறான நிலைமை தொடரும் என்றால் மக்கள் மயப்படுத்தப்பட்ட வன்முறையற்ற தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் மைய முன்னெடுப்புப் போராட்டங்கள் சிங்கள-பௌத்த காலனித்துவத்திற்கு தீர்வாக அமையும் என்றால் அவற்றை ஒழுங்குபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழின இருப்பும் பல்லினத்தன்மையும் உறுதிப்படுத்த வேண்டும்

இவ்வாறான போராட்ட முனைப்புக்கள் நாங்கள் வேறு இன மத மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதற்கு அப்பால் தமிழின இருப்பை உறுதிப்படுத்துவதோடு இலங்கையில் பல்லினத்தன்மையையும் தொடர்ந்து பேணுவதற்கு உறுதி செய்யும்.இன்று கன்னியா நாளை எது என்று தெரியாமல் எதுவுமே நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மைக்குள் தமிழினம் வாழத் தள்ளப்படுகின்றது. சிங்கள-பௌத்த காலனித்துவம் சிறீலங்காவில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை விரைவுபடுத்துகின்றது.

இது தொடர்பாக பரந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டு தீர்வுகள் தொடர்பாக விரைந்து செயற்பட ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழைத்து நிற்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  #முள்ளிவாய்க்காலுக்குப் #சைவ ஆலயங்கள் #சிங்களமயப்படுத்தப்படுகின்றன!

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.