Home இலங்கை யாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….

யாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….

by admin

Kuwait Red Crescent Rehabilitation Centre
Teaching Hospital Jaffna

குவைத் நாட்டினது செம்பிறைச் சங்கத்தின் நன்கொடையில் யாழ் போதனா வைத்தியசாலையில் நிருமாணிக்கப்பட்ட குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை (Kuwait Red Crescent Rehabilitation Centre Teaching Hospitl Jaffna) பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவம் 25.07.2019 அன்று காலை 10.00 மணியளவில்  சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.

சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ஹிலால் முசேட் அல் சேயர் இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர் அதிமேதகு கலாவ் (ப்)பூ தாஃயர், சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரி , யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி ஆகியோர் குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலைத்தைத் திறந்து வைப்பர்.

இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையமானது சிங்கப்பூர் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு இணையானதாக நவீன உபகரணங்களுடன் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள நவீன மருத்துவ உபகரணங்கள் பல இலங்கையில் வேறு எந்த வைத்தியசாலைகளிலும் காணப்படாதவை.

குவைத் நாட்டினது செம்பிறைச் சங்கத்தினால் வழங்கப்படுகின்ற இலங்கை ரூபா 530 மில்லியன் நன்கொடை நிதியுதவியில் யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை அமைக்கும் திட்டமானது 3 பகுதிகளைக் கொண்டது. கட்டட வடிவமைப்பு மற்றும் நிருமாணம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கல், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் இயன் மருத்துவர் ஆகியோருக்கான பயிற்சி வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலைய திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

குவைத் செம்பிறைச் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் கிலால் முசெய்ட் அல் சேயர் (Dr. Hilal Mussaed Al Sayer, President of Kuwait Red Crescent Society, Kuwait) அவர்களால் இந்த நன்கொடையானது ”மெடிசொலூசன்” வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு (Medisolution pte. ltd.) வழங்கப்பட்டு ”மெடிசொலூசன்” நிறுவனத்தின் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

3 தளங்களைக் கொண்ட மீள்வாழ்வு சிகிச்சை நிலையக் கட்டட நிருமாணம் 2018 யூலையில் ஆரம்பமாகி 2019 யூலையில் பூர்த்தியாகியுள்ளது. 2019 யூலை 25 அன்று பூரணமாக்கப்பட்ட கட்டடம் முழுமையான உபகரணத் தொகுதிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலை நிருவாகத்திடம் வைபவரீதியாகக் கையளிக்கப்பட உள்ளது.

இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் என்பு முறிவு, மூட்டுக்களில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் நீண்டகாலமாக படுக்கையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைகள் (Orthopaedic and Rheumatology), இயன் மருத்துவர்களின் (Physiotherapist) உடற்பயிற்சிகள், என்பு முறிவு, போர் மற்றும் விபத்துக்களால் கை, கால்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்கள் வடிவமைத்து வழங்கப்படும். செயற்கை அவயவ வடிவமைப்பு நிபுணர்களின் சேவைகள் (Prosthetist and Orthotist), விசேட தேவை உள்ளோருக்கான தொழில் வழிகாட்டு நிபுணர்களின்(Occupational Therapist) உடற்பயிற்சிகள், சிகிச்சைகள் என்பனவும் வழங்கப்படும்.

இந்த மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் செயற்பட ஆரம்பித்ததும் போர் , விபத்து மற்றும் அனர்த்தங்களின் போது பாதிப்புக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைக்குப் பிந்திய இயன் மருத்துவர்கள், தொழில் வழகாட்டும் சிறப்பு நிபுணர்களின் சேவைகள் நவீன மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சிறந்த முறையில் வழங்கப்படும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More