இலங்கை பிரதான செய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக விடயம் – முஸ்லீம் தரப்பினரின் நியாயங்களை கேட்டறிந்த க.வி.விக்னேஸ்வரன்

 

கல்முனை உப பிரதேச செயலக விடயம் தொடர்பாக முஸ்லீம் தரப்பினரின் நியாயங்களையும்    தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் கேட்டறிந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில்    கல்முனை அலியார் வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப் பேரவை அமைப்புடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது அண்மைக்காலமாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இனமுறுகலை ஏற்படுத்தும் கல்முனை உப செயலக விடயம் தொடர்பாக முஸ்லீம் தரப்பினரின் கருத்துக்கள் அவை சார்ந்த நியாயங்கள் தொடர்பாக சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்கப் பேரவை தலைவரும் அரசியல் விமர்சகருமான எம்.எச்.எம் இப்றாஹீம் தலைமையிலான பேரவை உறுப்பினர்கள் விளக்கமளித்தனர்.

இவ்வாறு கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பாக முஸ்லீம் தரப்பினரால் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் விளக்கங்களை பெற்றுக்கொண்ட முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான  க.வி.விக்னேஸ்வரன் இவ்விடயம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை மேசையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அடுத்த கட்ட நகர்வாக ஒரு குடையின் கீழ் யாவரும் ஒன்று பட்டு ஒரு இனத்தின்  உரிமைகளை மதித்து நடப்பதுடன் விட்டுக்கொடுப்பின் ஊடாக மேற்குறித்த விடயத்தினை தீர்வை காண முடியும் என கூறினார்.

இதனை செவிமடுத்த  முஸ்லீம் தரப்பினர் அவரின் கருத்தை ஏற்று கொண்டதுடன் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான விளக்கப்புத்தகம் ஒன்றினையும் வழங்கி வைத்ததுடன் இனிவரும் காலங்களில் இன ஐக்கிய விடயங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதன் போது  தமிழ் மக்gகள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன்,  மற்றும் ஊடக உதவியாளர் எம். சதீஸ் உள்ளீட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.  #கல்முனை  #உப பிரதேச செயலக #முஸ்லீம் #விக்னேஸ்வரன்
பாறுக் ஷிஹான்
 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.