இலங்கை பிரதான செய்திகள்

யாழ் பல்கலை மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு முடிவு

வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டுவரும் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தமது புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான நேற்று (சனிக்கிழமை) மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஒரு இனத்தினுடைய வளர்ச்சியின் முதுகெலும்பாக விளங்குவது கல்வி ஒன்றேயாகும். முப்பது ஆண்டுகால யுத்தத்தின் பின்பும் எழுந்து நிற்க நாம் இன்று கல்வியைத் தவிர வேறு எதனையும் நம்பியிருக்க முடியாது.

எமது பல்கலைக்கு மாணவர்களை உரிய காலத்தில் உள்ளீர்த்தல், வெளியேற்றல், அவர்களுக்கு உரிய நேரத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்துதல், சிறந்த பௌதீக சூழலில் கல்வி கற்றல் போன்ற வழமையான செயற்பாட்டை செய்வதென்பதே இன்று கடினமாகிவிட்ட நிலையில் நாம் வளர்ச்சியை நோக்கி சிந்திப்பதென்பது சற்றுக் கேலியாகவே உள்ளது.

இராமநாதன் நுண்கலைத்துறையும் சித்த மருத்துவ அலகும் இன்றுவரை வளர்ச்சியடையாது அடுத்த கட்டத்திற்கு தரமுயர்த்தப்படாமலேயே உள்ளது.

எமது பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தை எமது அரசியல் தலைவர்களோ கல்வியாளர்களோ அறிந்திருப்பார்களெனில் அவை இன்று அவ்வாறு தரமுயர்த்தப்படாமல் இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்காது.

எமது பல்கலைக்கழகத்தில் பல கட்டடங்கள் உரிய காலத்தில் கட்டி முடிக்கப்படாமல் தற்காலிக கட்டடங்களில் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.

இவற்றை எல்லாம் பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் மாணவர்கள் மட்டும் அல்லர். இவற்றை சிந்திப்பதற்காகவே பல்கலையில் பேரவை, மூதவை என்பன இருக்கின்றது. அத்துடன் இவற்றை சுட்டிக்காட்டவேண்டியது எமது அரசியல் தலைவர்களதும் ஊடகங்களினதும் கடமையாகும்.

நாம் முக்கியமான சில பிரச்சனைகளுக்காக மட்டுமே வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தோம். எமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இம்முறையை கையாண்டால் எமது கல்வியே பாதிக்கும்.

அந்தவகையில் எமது முக்கிய பிரச்சினையாகக் கருதிய சில பிரச்சினைகளை தீர்க்கக்கோரி கடந்த 15 ஆம் திகதி முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் எமது பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியால் நாமறிய இவை குறித்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் மீது பூரண திருப்தியற்ற போதிலும் தகுதி வாய்ந்த அதிகாரியின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் நாளை முதல் வழமைபோல் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.

இனிமேலாவது தமிழினத்திற்கு எமது பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தையும் அது உருவாக்கப்பட்ட உன்னத நோக்கத்தையும் அறிந்தவர்களாக பல்கலைக்கழக மூதவை, பேரவை மற்றும் தமிழ் அரசியல் தலமைகள் விளங்குமாறு உரிமையுடன் பொறுப்புள்ள மாணவர் ஒன்றியமாக கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  #யாழ் #பல்கலை  #மாணவர்களின் #வகுப்பு #புறக்கணிப்பு #முடிவு

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.