மட்டக்களப்பில் காவற்துறையினரின்  தடியடி தாக்குதலைத்  தொடர்ந்து சிறிய காயங்களுடன் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமது ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து இவ் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்துமயானத்தில் நேற்றுமுன்தினம் இரவு (26.08.19) காவற்துறையினர் இரகசியமாக புதைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை பொதுமக்களுக்கு தெரியவந்ததையடுத்து பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயானத்துகுமுன் உள்ள வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்காரர்கள் மட்டக்களப்பு  கல்லடி பாலத்தின் நடுப்பகுதியில் வீதியை மறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  இளைஞர்கள் பெண்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வீதியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

மாலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் இரவு 9 மணிவரை நீடித்த நிலையில் மட்டக்களப்பு கொழும்பு மற்றும் கல்முனை அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கான போக்குவரத்து முற்றகத் துண்டிக்கப்பட்டது இததனால் மட்டு கல்முனை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது

இதனை தொடர்ந்து காவற்துறையினர் கலகமடக்கும் காவற்துறையினர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்பாட்டகாரருடன் காவற்துறையினர் பேச்சுநடாத்தியபோதும் அது வெற்றி அளிக்கவில்லை.  ஆர்பாட்டகாரர்கள் அரசாங்க அதிபர் வந்து புதைக்கப்பட்ட உடற்பாகங்களை தோண்டி எடுப்பதாக உத்தரவாதம்வளங்கும் வரை வீதியை விட்டு விலகப் போவதில்லை என கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன்ர்

இரவு 9.00 மணிக்கு காவற்துறையினர் ஆர்பாட்டகாரர் மீது கண்ணீர்புகை குண்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்து தரத்தியடித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இத் தாக்குதலின் போது பலர் காயமடைந்ததுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு நகரில் பதற்றம் ஏற்பட்டதுடன் கடைகள் யாவும் மூடப்பட்டு வீதி வெறிச்சேடியதுடன் அப்பகுதில் காவற்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்

இதேவேளை குறித்த உடற்பாகங்களை பொது மயானத்தில் அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதனை கடந்த ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க காவற்துறையினர் முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தததையடுத்து அங்கு புதைப்பது கைவிடப்பட்டது

தொடர்ந்து கள்ளியங்காடு மயானத்தில் புதைக்க முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தினால் அதுவும் கைவிடப்பட்ட நிலையில் காத்தான்குடியில் பிரதேசத்தில் புதைக்க முற்பட்டபோது அங்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தால் கைவிடப்பட்டது

இந்த நிலையில் தொடர்ந்தும் உடற்பாகங்கள் வைத்தியசாலை பிரேத அறையில் இருந்துள்ள நிலையில் இதனை இந்து மயானத்தில் புதைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.