Home இலங்கை சிந்தனையில் மாற்றத்தைக் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்…

சிந்தனையில் மாற்றத்தைக் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்…

by admin

இனப்பிரச்சினை நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் மத்தியில் அபிவிருத்தி பாதையில் தடைக்கல்லாக உள்நாட்டு அரசியல் அதிகாரம். ஜக்கிய தேசிய கட்சி சிறீலங்கா சுதந்திரக்கட்சி என்ற 02 பிரதான கட்சிகளுக்கு இடையே மாறி மாறி ஆட்சிக்கு வருவது ஜனநாயக நோக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் பொருளாதார அபிவிருத்திக்கு இது சாதகமாக இல்லை என்றே குறிப்பிடலாம்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என இனரீதியான பிளவினையும் சிங்களம், தமிழ் என்ற மொழி ரீதியான பிரிவினையும் வடக்கு கிழக்கு, மலையகம் கண்டியர்,கரையோரத்தினர் என்ற பிரிவினைகளும் மதம் போன்ற விடயங்களும் உள்நாட்டு அரசியலில் காலத்துக்குக் காலம் மாறிவரும் பொருளாதார அபிவிருத்தி, வாழ்க்கைத்தர முன்னேற்றம் என்பதை விட சமயம் இனம், மொழி என்பவற்றின் ஊடாக ஆட்சி அதிகாரத்தினை தொடர்ந்து சிறுபான்மை மக்கள்மேல் அபிவிருத்தி பாதையில் உள்நாட்டு அரசியல் சூழலானது தடையாக உள்ளது.

நிதி,சுற்றுலா அபிவிருத்தி, மாகாண அபிவிருத்தி நகர திட்டமிடல். சுகாதாரம், போசாக்கு, சுதேச மருத்துவ,தொழில்துறை அபிவிருத்தி ,உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி , கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி , கைத்தொழில் ,கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில், நீரகவள மூல அபிவிருத்தி , நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி , பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவ, கிராமிய பொருளாதார அலுவல்கள் ,காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு ,வீடமைப்பு, நிர்மானத்துறை, கலாசார அலுவல்கள் ,போக்குவரத்து, சிவில் விமானசேவைகள், சமூக அபிவிருத்தி ,மகளிர், சிறுவர் அலுவல்கள், உலர் வலய அபிவிருத்தி நீதி , சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , கல்வி , தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு, விளையாட்டுத்துறை அமைச்சர், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம், இந்து சமய அலுவல்கள் அமைச்சர், தொழில், தொழிற்சங்க உறவுகள், சமூக வலுவூட்டல் , அபிவிருத்தி திறமுறை, சர்வதேச வர்த்தகம் போன்றவற்றில் பெரும்பான்மை மக்களை அரச அதிகாரிகளாக்கி நாட்டின் தேசியத்தை சிங்களத் தேசியமாக மாற்றுகின்ற கொள்கை கொண்ட தமிழர்களை அமைச்சர்களாகவும்,அரசியல் வாதி பௌத்தத்தினையும் அவர்கள் சார்ந்த பெரும்பான்மை இனத்திற்கும் ஆதரவு நல்கிறாரோ இத்தகைய தமிழ் தலைவர்கள் உயர்நிலையில் வைத்து போற்றப்படுகின்றனர்.

இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட போதும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஜனநாயக சுதந்திரம் காணப்படுகிறது. போரின் பின்னர் தற்காலத்தில் தமிழர் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பல் சட்டவிரோத தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் புத்தர் சிலைகளின் பரம்பல் அதிகமாக உள்ளது. வடக்கு கிழக்கு நோக்கிய பௌத்தத்தின் நகர்வில் ஒன்றாகவே பௌத்த மதத்தினைப் பரப்பும் வகையிலே சிங்கள மக்கள் அற்ற தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இனவாதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தித் பௌத்த துறவிகளின் அத்துமீறி அமைத்திடும் புத்தர் சிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழர்கள் செறிந்துவாழும் பல பகுதிகளில் தமிழ்மக்களுக்கு சொந்தமான பல காணிகளை அபகரித்து, ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்கள் வருகின்ற பகுதிகளிலும் அபகரித்து ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள படையினரின் ஒவ்வொரு முகாம்களிலும் புத்தர் குடியேறியுள்ளார்.. மக்கள் பரம்பரையாக வாழ்ந்த வாழ்வியல் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு உள்நாட்டு அரசியல் சூழலானது இலங்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைவதற்கு தடையாக உள்ளது.

உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறிய நிலங்களை சிங்கள மயமாக்கி புத்த விகாரைகள் அமைத்து பௌத்த பூமியாக்க மாற்றிட முனைகின்ற செயற்பாட்டினை செய்துவருகின்றார்கள். தமிழ் மக்களின் தனித்துவ குடிப் பரம்பலை மாற்றுவதற்கு தமிழ் மக்களின் குடியிருப்புகளுக்கு இராணுவத்தினர் தமிழ் பெயர்கள் இந்த வீதிகளின் பெயர்கள் மாற்றுவது அரசின் திட்டமிட்ட செயல். அதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் உடந்தையாக இருக்கின்றார்கள். இலங்கையில் அரசு பாரிய இனவாதத்தை தூண்டிவிட்டுக் கொண்டு தமிழர் வாழ் இடங்களில் பாதுகாப்பு என்று பெயரில் இராணுவ முகாம்களும் ஊருக்கு ஊர் இருக்கின்றது. மக்களின் வாக்குரிமையை பெறுவதற்காக நாட்டின் நீண்ட கால அபிவிருத்தியை நோக்காகக் கொள்ளாது குறுங்காலத்தில் மக்களை மகிழ்வித்து தமது வாக்கு வங்கியைப் பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற முயன்ற அரசியல் வாதிகள் இலங்கையை ஒரு பௌத்த நாடாக மாற்றுவதில் அதிகமான அக்கறை கொண்டுள்ளனர்.

மாணவர் சமூதாயத்தினை கல்வி அறிவில் முன்னேற்றுதல் அவர்கள் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆளுமையும் திறனும் கொண்டவர்களாக உருவாக்க வேண்டிய இலங்கை அரசு தமிழருடைய கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக தரப்படுத்தல் என பின்னால் இன முரண்பாடு இனவாத அரசியல் செறிந்ததுள்ளது. 04ம் திகதி ஆடி மாதம் 2019ம் ஆண்டு வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள், துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ‘வடமாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது .

இதில் தற்போது மாகாணசபை கலைக்கப்பட்ட பின் கல்வி அமைச்சின் அனைத்து பொறுப்புக்களும் ஆளுநர் கைவசம் இருக்கும் நிலையில் அதனைவிட மாகாண சபைச் சட்டங்களின் படி நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநரிடமே வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தின் அனைத்து நடவடிக்ககைகளுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டிய அதிகாரியான கௌரவ ஆளுநரே பொது வெளியில் வடக்கில் பாடசாலை ஒன்றில் 4 மாணவர்களுக்கு 12 ஆசிரியர்கள் கடமையாற்றுவதாக தனது வினைத்திறன் இன்மையினை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளமை வரவேற்கத் தக்க விடயமாகும். இருப்பினும் பல பாடசாலைகளில் கணிதம் ,விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இயங்கிவரும் பாடசாலைகளும் உண்டு என்பதையும் நினைவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.

அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்கின்ற நிலையில், சமூக, பொருளாதார ரீதியில் அபிவிருத்தி என்ற தொனிப் பொருள் இன்று பரவலாக பேசப்பட்டுவரும் ஒரு விடயமாக இது காணப்படுகின்றது. போருக்குப்பின் வட கிழக்கில் மக்கள் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் பற்றிய பொதுப்படையான பார்வையுடன் நாட்டில் வாழும் மக்களின் வரலாறு, மரபுகள், சமூக அமைப்பின் பன்மைத்தன்மை, அரசியல் கலாசாரம், சிவில் சமூகத்தின் விழிப்புணர்வு, மக்களின் அரசியல் பங்கேற்பு பாதுகாப்பு, அரசியல் உரிமைகள், கௌரவம் மற்றும் கல்வி முதலான அம்சங்கள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது.

நுண்நிதி கடன் நிறுவனங்கள் ஏராளமான வட கிழக்கில் உதயமாகி உள்ளது. இந்நுண்நிதி கடன் நிறுவனங்களில் கடன் பட்ட மக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். கடன்களை பெற்ற பெற்றோர்கள் கடன் வசூலிப்பளர்களுக்கு பயந்து வீடுகளை விட்டு தலைமறைவாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். குடும்பப் பிளவு ஏற்படுகிறது. இதனால் பிள்ளைகள் அநாதைகளாக்கப்பட்டு அவர்கள் சமூகத்தில் பாரிய சவால்களையும் இன்னல்களையும் எதிர்நோக்கிவருகின்றார்கள். கடன் பெற்ற பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. பெண்கள் உடல்,உள ரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தடன் ஒரு சாரார் கடன் காரணமாகவே தற்கொலை செய்துவருகின்றார்கள் .

2009ம் ஆண்டிற்கு முன்னரும் பின்னரும் அபிவித்தி அடைந்த நாடுகள் என சொல்லப்படும் (லண்டன், சுவிஸ், பிரான்ஸ், ஜெர்மனி, அவுஸ்ரேலியா,டென்மார்க், அமேரிக்கா) போன்ற நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் பெருந் தொகையான நிதி பல நிகழ்வுகளுக்கூடாக சேர்க்கப்படுகின்றது. இந் நிதி பயன் பாட்டின் செயற்திட்டங்கள் என்ன? என்பது கிராம மட்டங்களில் உள்ள கிராமிய அமைப்புக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இவை எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது குறித்து புலம்பெயர்தேசத்தில் உள்ள மக்கள் ஈழத்தில் உள்ள மக்களின் தேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் சேவை செய்கின்றார்களா என சந்தேகம் எல்லார் மத்தியிலும் உள்ளது.

புலத்தில் சங்கங்கள், அமைப்புக்கள், தனிநபர்கள், நலன்விரும்பிகள், பழை யமாணவர் ஒன்றியங்கள், தன்னர்புத்தொண்டர்கள், சிறு குழுக்கள் ஒன்றிணைந்து யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் அபிவிருத்திக்கு பயன் படுத்தியிருந்தால் தனிநபர், குடும்பம், கிராமம், பிரதேசம், மாவட்டம், மாகாணம் என இன்று பல அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்த்திருக்ககூடியதாக இருந்திருக்கும். உள்நாட்டுப் போரினால் காவுகொள்ளப்பட்ட உறவுகள் கொண்ட குடும்பங்கள் அதிகம், கந்தகத் துவள்களைச் சுமந்து வாழ்பவர்களும், ஆதரவற்று தனித்து விடப்பட்டவர்கள் உட்பட அனைவரது தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. காலத்துக்குக் காலம் எமது உறவுகள் அடுத்த வேளை உணவுக்கு காத்திருந்து கையேந்தி நிற்க வேண்டிய தேவை இருந்திருக்காது.

உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் இருந்து பல வாழ்வாதார உதவித் திட்டங்களை தனிநபர்கள் குழுக்கள் நிறுவனங்கள் செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு நன்றி கூறுகின்ற அதேவேளை சில வாழ்வாதாரத் திட்டங்கள் தோல்வியில் செல்வதையும் சுட்டிக்காட்ட வேண்டும். வவுனியா வடக்கு- கனகராயன்குளம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் பல ஆண்டு காலம் போராளியாக இருந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களில் 2009ம் ஆண்டு பாதுகாப்புவலயத்தில் இலங்கை இராணுவம் நடத்திய இனப்படு கொலையில் கணவன் இறந்து போக மூன்று பிள்ளைகளுடன் தோட்டம் செய்வதற்கு உகந்த சொந்த நிலப் பரப்புடன் வாழ்ந்து வந்த அந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு வாழ்வாதர உதவி செய்திருந்தார்கள். அதில் ஒரு அமைப்பு எதுவித பயிற்சி, அனுபவமும் இல்லாத இக் குடும்பத் தலைவிக்கு தையல் இயந்திரம் வழங்கியிருக்கின்றார்கள். மீளவும் என்னுமொரு அமைப்பிடம் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு விண்ணப்பம் செய்திருந்தார். கள விஜயம் மேற்கொண்டு பார்த்தபோது தோட்டம் செய்வதில் ஆர்வத்துடன் சிறு வீட்டுத் தோட்டம் செய்து வரும் அவருக்கு முன்னர் ஒரு புலம் பெயர் அமைப்பு வழங்கிய தையல் இயந்திரம் வீட்டின் ஒரு மூலையில் மூடிக் கட்டி இருந்தது. ஏன் ? இவ்வாறு உள்ளது என வினாவியபோது தையல் தெரியாது என்பதைக் கூறியிருந்தார்.

இதே போன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கணவன் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தின் குண்டு பட்டு இறந்து போக மகன் ஒருவர் மாவீரராக வித்தாகிட, மகள் திருமணம் செய்து கணவருடன் அயல் கிராமத்தில் வாழ்ந்திட இளைய மகன் 2009ம் ஆண்டு இராணுவத்தினால் காணாமல் ஆக்கப்பட மகனைத் தேடி தனிமையில் வாழும் 58 வயது நிறைவான தாயார் ஒருவருக்கு நீர் இறைக்கும் இயந்திரமும் நீர்பாச்சும் குழாய்களும் வாழ்வாதாரத் திட்டமாகக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அவர் நாளாந்தம் தனக்குத் தேவைக்கான நீரை அரைக்கிலோமீற்றர் தூரத்தில் இருந்து எடுத்து வருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு கைகளையும் ஒரு கண்னையும் இழந்து மறு கண் பார்வைக்குறைபாட்டுடன் வயது முதிர்ந்த தாயுடன் வாழ்ந்து வரும் முன்னால் பெண் போராளி ஒருவருக்கு பால் மாடு வாழ்வாதாரமாக வழங்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் கோரி புதிய விண்ணப்பம் கிடைத்ததைத் தொடந்து அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் களவிஜயத்தின் போது அவரிற்கு வேறு ஒரு அமைப்பு மாடு வழங்கியது தெரிய வந்தது. அந்த மாட்டினை பராமரிக்க முடியாமல் தெரிந்தவர்கள் வீட்டில் விட்டுள்ளதாகக் அவர்களிடம் கூறியுள்ளார். இப்படி பல பல தனி நபர் வாழ்வாதாரத் திட்டங்கள் பொருத்தமற்ற முறையில் பொருத்தமற்ற நபர்களுக்கு வழங்கி இருப்பதனால் அவர்கள் மீள மீள தங்கள் நாளாந்த வாழ்க்கைக்காக வாழ்வாதாரத்தை எதிர்பார்க்கின்றார்கள்.

தேவைகள் மதிப்பீடு,பயிற்சி,அனுபவம், கற்றல், இடத்தெரிவு, எதுவும் இல்லாமல் எத்தனை திட்டங்களை வழங்கினாலும் அவை தோல்வியில் முடிவடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே மக்கள் இலகுவில் கிடைக்கும் நுண்நிதி கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்று நாளாந்த தேவைகளுக்கு பயன்படுத்திவிட்டு பல சொல்ல முடியாத இன்னல்களை அனுபவிப்பதை தடுக்கவேண்டுமாக இருந்தால் நுண்நிதிக் கடன் பெறுவதை கட்டுப்படுத்தி சமூக அபிவிருத்தி ஊடாக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். பாதிப்புக்களை எதிர்கொள்ளாமல் இருக்க சட்ட ஏற்பாடு அல்லது கொள்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சமூகவியல் அபிவிருத்தியானது முக்கியமான எண்ணக்கருவாகக் காணப்படுவதுடன், சமூக மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற ஒன்றாகவும் நோக்கப்படுகின்றது. சமூகவியவில் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகளை முன்வைத்தவர்களில் கொவ்லேற், குன்னர் மிர்டால், ஹேஸ்மன், ஐஸ்டின் டயஸ், பாஸ்டர் முதலானவர்கள் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

மனிதவள அபிவிருத்தி, பால்நிலை அபிவிருத்தி, கிராமிய அபிவிருத்தி, பிராந்திய அபிவிருத்தி என புதிய பரிமாணங்கள் அபிவிருத்தி பற்றிய ஆய்வுகளில் உள்வாங்கப்பட்டிருப்பதைக் காணலாம். தனிமனித அபிவிருத்தியானது சூழலில் காணப்படுகின்ற பொருளாதாரம் (உணவு, வருமானம், சொத்து), அபிவிருத்திச் சிந்தனைகளில் சமூக பொருளாதார அபிவிருத்தி என்பவைதான் அதிகளவில் அரசின் வடிவங்களைத் தீர்மானிக்கும் என நான் நினைக்கின்றேன்.

யுத்தம் காரணமாக நேரடிப் பாதிப்புக்கு உட்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற மக்கள் மூன்று தசாப்த காலப் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மீள்கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அபிவிருத்தி என்ற எண்ணக்கரு மக்கள்மத்தியில் பரவலாக்கப்பட்டிருப்பதனை அடைந்து கொள்வதன் அவசியத்தையும் மக்கள் இன்று உணர்ந்து வருகின்றனர்.

மனிதன் தனிமையாக வாழ்வதை விட சமுதாயமாக ஒன்றிணைவதன் மூலம் அதிக பலத்தைப் பெற்றுக் கொள்கின்றான். அந்த பலத்தை மிகவும் ஒழுங்கமைப்பான முறை மூலம் வழிநடத்துதல் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான அபிவிருத்தியூடாக சமுதாய அபிவிருத்தியின் நாட்டின் வளர்ச்சியினைஅடிப்படையாகும். எமது அரசியல் யாப்பும் எமக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் வரை எம் மக்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. எமது மக்கள் வாழ்ந்தநிலத்தில் இராணுவம் கட்டிடங்கள் அமைத்து சொகுசாக வாழ்கின்றனர். அதுமட்டு மின்றி வடகிழக்கு மாகாணங்களில் இன விகிதாசார பரம்பலை மாற்றியமைக்கும் முகமாக திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்று உலகம் மிகவும் முன்னேறிவரும் நிலையில் கடந்த முப்பது வருடகாலமாக நடைபெற்று வரும் போர்ச்சூழல்காரணமாக், இழப்புகள், பின்னடைவுகள், தோல்விகளுக்கு முகம் கொடுப்பது வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் வன்னிப்பிரதேச மான கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைதீவு போன்ற மாவட்டங்களில் இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் கலாசார, விழுமியங்கள் ஒவ் வொறுவருக்கும் இடையில் வேறுபட்டு காணப்படுகின்றது.

இம் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி வாழ்ந்தவர்கள். இடப்பெயர்வு காரணமாக இம்மக்கள் தமது சொந்த வீடு, காணிகளை இழந்து முகாம் வாழ்க்கையை வாழ்ந்து தமது தொழிலை மேற்கொள்வதற்கான நிலம் இல்லாமல் கூலித்தொழிலையே மேற்கொள்கின்றனர். இதனால் இவர்களுக்குகிடைக்கும் வருமானமோ மிக குறைவு இதனால் இவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அரசினால் கிராமிய மக்களின் வாழ்க்கை மட்டத்தை உயர்த்துதல் மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்தல் என்பவற்றிற்காக பிரதேச வளங்களின் உச்ச பயன்பாட்டை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாவே உள்ளது. மக்கள் தாம் முகம் கொடுக்க வேண்டியுள்ள பிரச்சினைகளை இயன்ற வரை உள்நாட்டு வளங்களில் நம்பிக்கை கொண்டு தீர்த்துக் கொள்ளல் மற்றும் அதற்கமைய செயற்பட்டு சமூக செயன்முறையாக கட்டியெழுப்பப்பட்டுள்ள நுட்பமாகும். அபிவிருத்தி என்பது இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் சமூகவியலில் முக்கியமானதாகவும், தனித்துவமானதாகவும் காணப்படுகின்றது.

போர் முடிவுக்கு வந்து பத்துவருடங்களின்பின் சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் சிறுவர்கள், பெண்கள், முதியோர், மாற்றுவலுவுள்ளோர் மீதான வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, வன்முறை போன்ற விடயங்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. சமூகம், கலாசாரம் மாற்றம் என்பது இயல்பானது. சமூக, கலாசார துறைகளில் ஏற்படுகின்ற அபிவிருத்தி மக்களில் வறுமை நிலைக்கு உட்பட்ட மக்கள் தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து இடைநிறுத்தி வேலைக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு வேலைசெய்யும் இடங்களில் சிறுவர்கள் உடல், உளத்தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

மேற்கூறியப் பிரச்சனை மட்டுமன்றி போதிய சுகாதார வசதியின்மையினால் கொடிய தொற்றுநோய்களுக்கும் முகம் கொடுக்கின்றனர். சிறுவர்களுக்கு போசாக்கான உணவுக்கிடைக்காமையினால் போசாக்கு குறைபாடு, மந்தபுத்தி, கிரகிக்கும் ஆற்றல் இன்மை ஞாபகசக்தி குறைவு போன்ற பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். சவால்கள் நிலவும் பிரச்சினைகளுக்கு இடையே சமூகத்தில் வாழும் மனிதர்களின் நடத்தை, மனப்பான்மை, தேவைகள், மனித உறவுகள், எதிர்பார்ப்புக்கள், தனிப்பட்ட மனிதர்களது உளவியல் அம்சங்கள் என்பனவற்றைப் பொறுத்து முரண்பாடு தோற்றம் பெறும் எனக் குறிப்பிடுகின்றார்கள்.

அழிவடைந்த மற்றும் அபிவிருத்தியடையாத உட்கட்டமைப்பு, சிதைவடைந்து போன சமூக வளங்கள் என்பனவற்றின் நியதிகளில் மிகப்பிரமாண்டமானவைகளாகக் காட்சி தருகின்றன நிவாரண உதவிகளை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான நிதியுதவிகளை சர்வதேசத்திடமிருந்து பெறும் வல்லமை அரசுக்கு இல்லை. வளங்களைச் சூறையாடுவதும், வாழ்வாதாரங்களை சிதைப்பதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்கட்டுமான நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும் காணமுடிகிறது.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை – தேவைகளைத் தீர்ப்பதற்கும் சில விஷேட திட்டங்கள் அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், ஆயுதக் குழுக்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், பாரம்பரிய தலைவர்கள், வணிக சமூகம், புலம்பெயர் குழுக்கள், தொழில் மற்றும் தொழில் சார் நிறுவனங்கள் என இத்தரப்புக்கள் பரந்த அடிப்படையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணிகளில் ஈடுபடும் போது, அந்தப் பணிகளுக்கான நிதியுதவி பல்தரப்பிலிருந்து கூடுதலாக கிடைக்கும் சேவையினை செய்துவருகின்றார்கள் . மக்களின் வாழ்க்கை நிலையும், இம் மக்களுக்கு எதிரான சுரண்டல்களும், இவர்களது துன்ப துயரங்களும் நீங்கிவிட்டதாகக் கூறுவதற்கில்லை.

இலங்கை அரசாங்கம் பெருந்தெருக்கள் அமைத்தல், துறைமுக அபிவிருத்தி, விமானதள கட்டுமானங்கள், சுற்றுலாத்துறை போன்ற அபிவிருத்தி திட்டங்களில் இன்று தன்னிறைவு கண்டுள்ளது எனலாம். துறைமுக அபிவிருத்தி என்பதை நோக்கும்போது மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகம், அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக அபிவிருத்தி போன்றவற்றை குறிப்பிடலாம் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல கிராமங்ககளில் பொருளாதார வேளாண்மை, மீன்பிடி ரீதியாக பல துறைகள் பாதிப்பும் , வறுமை ஒழிப்பு, கிராமிய அபிவிருத்தி, பிராந்திய அபிவிருத்தி, தலா வருமான அதிகரிப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதனால் மக்கள் பல்வேறுபட்ட பொருளாதார மூலங்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.

அபிவிருத்திச் சிந்தனைகளில் தனிநபர், குடும்பம், கிராமியம் பிராந்தியம் பொருளாதார அபிவிருத்தியில் முக்கியமானதாகும். பிராந்தியங்களினூடான நாட்டின் அபிவிருத்தி என்ற தொனிப்பொருள் இன்று பரவலாக பேசப்பட்டுவரும் ஒரு விடயமாக காணப்படுகின்றது. அந்தவகையில் வடக்கில் கிராமிய பிராந்திய ரீதியான அபிவிருத்தியை முன்னேற்றுவதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வுத் தொண்டர்கள், சமூக மைய ஒழுங்கமைப்புக்கள் போன்ற பல்வேறு அமைப்புக்கள் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் கிராமிய அபிவிருத்தியானது இன்னும் பின்தங்கிய நிலை காணப்படுகின்றது.

சமூகச் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் நபர்களைப் பொறுத்தவரையில் தமது பிரதேசத்திற் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்றப்படாதிருக்கும் தேவைகள் என்பன பற்றி விழிப்புடையவர்களாகக் காணப்படுதல் முக்கியமானதாகும். தற்போதைய நிலை பற்றிய மிகவும் அவதானமாக இருத்தல் மூலம் மட்டுமே மக்களது பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பது சாத்தியமாகும்.

சமூக அபிவிருத்தி செயற்பாட்டில் பிரதான பாத்திரங்களான தமது பிரச்சினைகளை மக்கள் தாமே தீர்ப்பதற்கு வழிகாட்டும் போது, தினந் தினம் மக்கள் அனுபவிக்கும் பிரச்சினை நிலையை புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இந்த வகையில் தேவைகளை அடையாளங் காணுவது, மதிப்பீடு செய்வது, தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பன முக்கியமானதாகக் காணப்படுவதுடன், தேவைகளை முன்னுரிமைப்படுத்துவதன் மூலம் மிகவும் முக்கியமான தேவைகைளை அடையாளங் காணும் முறைமையைப் பின்பற்ற முடியும்.

தற்போதைய நிலை அடிப்படைத் தேவைகள் (Basic Needs), வெளிப்படுத்தக் கூடிய தேவைகள் (Expressed Needs), ஒப்பீட்டுத் தேவைகள் (Comparative Needs),நிபுணர்களால் திட்டமிடலின் போது அடையாளங் காணப்படும் தேவை (Normative Needs) சமுதாய அபிவிருத்தியில் முக்கியமாவது அவ்வாறு அடையாளங் காணப்படும் தேவைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முன்னுரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். அடையாளங் காணப்பட்டுள்ள தேவைகள் பலவற்றில் முன்னுரிப்படுத்துவது மக்களதும் தீர்மானமெடுப்போரதும் பணியாகும். அவ்வாறு அடையாளங் கண்ட சில பிரச்சினைகள் தனியாக மக்களால் தீர்த்துக் கொள்ளப்பட அவர்களது பலம் போதுமானதாக இல்லாத போது பங்கேற்றுக் கொள்ள வேண்டிய மக்கள் அம்சங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பதும் தேவையை மதிப்பீடு செய்வதும் முக்கியமானதாகும்.

மக்களது அல்லது நிறுவனத்தினது உணரப்படும் தேவைகளை வரிசைப்படுத்துவது தேவை மதிப்பீடு எனப்படும். தேவைகள் பூர்த்தி செய்யப்படாத போது முரண்பாட்டு நிலைமை தோன்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தற்போது காணப்படும் நிலைமைக்கும் எதிர்பார்க்கப்படும் நிலைக்கும் இடையில் காணப்படும் இடைவெளியே தேவை எனப்படும். இதனை அடைந்து கொள்வதற்கு தடையாகக் காணப்படும் விடயங்களே பிரச்சினை எனக் கருதப்படும். எந்தவொரு சமுதாயத்திலும் நிலவும் சிக்கல்மிக்க நிலை அல்லது தேவைக்கிடையிலான இடைவெளி சில சில முறையான மற்றும் முறைசாரா முறைகளின் மூலம் அடையாளங் காணக் கூடியது.

சமூக செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் நபர்களைப் பொறுத்தவரையில் தமது பிரதேசத்திற் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்றப்படாதிருக்கும் தேவைகள் என்பன பற்றி விழிப்புடையவர்களாகக் இருப்பதுடன் பங்கேற்பு கிராமிய மதிப்பீடு செய்ய தேவையின் முக்கியத்தினையும் உணர வேண்டும்.

பங்கேற்புடனான கிராமிய மதிப்பீடு என்பது மக்களது தேவைகளை அடையாளங் கண்டு கொண்டு கொள்வதற்கு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முறையாகக் காணப்படுகின்றது. கிராமிய மக்களது முழுமையான பங்கேற்புடன் தமது பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு பிரச்சினை மரம் எனப்படும் இந்த முறைமை மிகவும் பயனுள்ளதாகும். இப்பிரச்சினை மரத்தை உருவாக்குவது மற்றும் தேவையான கருத்துகளை கூறுவது என்பன சகலதும் பங்கு பற்றுனர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

கிராமிய மக்கள் தாம் மிகவும் தீவிரமாக உணருகின்ற பிரச்சினையை அல்லது அதன் பிரதிபலனை தாம் உணர்ந்துள்ளவாறாக அப்பிரச்சினையின் தன்மை அதற்குக் காரணமாக காணப்படக் கூடிய நேரடி காரணங்கள் மற்றும் அதற்கான பின்னணி காரணங்கள் என்பன பற்றிய குறிப்பை கலந்துரையாடி முதலில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பங்கேற்பாளரை வழிகாட்டி அவர்களை ஊக்கப்படுத்துவதாகும்.

பங்கேற்பாளர்களைப் பொறுத்த வரையில் தமது சுற்றுக் சூழலில் காணப்படக் கூடிய பிரச்சினை பற்றி அடையாளங் காண்பதுடன் அதனை ஆழமான நோக்கில் பகுப்பாய்வு செய்வதும் இவ்விடத்தில் சாத்தியமாகின்றது. கிராமிய மக்களால் அமைக்கப்பட்ட பிரச்சினை மர பகுப்பாய்வாகும். இதில் பிரச்சினையிலிருந்து கீழ் நோக்கி வளர்ச்சியடையாது செல்லும் பகுதி பிரச்சினையின் காரணங்களையும் மேல் நோக்கி வளர்ச்சியடைந்து செல்லும் பகுதி அதன் விளைவுகளையும் பகுப்பாய்வு செய்கின்றது.

இந்த வகையில் பிரச்சினையின் காரணம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி பகுப்பாய்வு செய்வது சாத்தியமாகின்றது. இதுவரை கவனிக்கப்படாத பல விடயங்களை கிராமிய மக்களின் கவனத்திற்குக் கொண்டு வர இயலுமாகின்றது. தம்மில் செல்வாக்கு செலுத்தக் கூடிய பிரச்சினையின் தாற்பரியத்தை உணர வைப்பது என்பது உண்மையிலேயே அதற்கான தீர்வு நோக்கி இயங்க வைப்பதற்காகவே. இந்த முறையில் எந்தவொரு பிரச்சினையையும் பகுப்பாய்வு செய்ய முடியும். இது மக்கள் அடிப்படை அமைப்புகளுக்கு அத்தியாவசியமான என்பதை எம்மால் உணர முடியும்.

தம்மில் செல்வாக்கு செலுத்தக் கூடிய பிரச்சினை மற்றும் அதன் காரணங்கள், விளைவுகள் என்பவற்றை அடையாளங் காணக் கூடிய சக்தி மிக்க மக்கள் குழு காணப்படுவது என்பது, சிவில் சமூகத்தை பலமிக்கதாக கட்டியெழுப்புவதில் பிரதானமாகும். காரணம் மற்றும் அதன் விளைவுகளை அடையாளங் காணும் போது அதற்கான தீர்வை நோக்கி இயல்பாகவே செல்வதற்கான உந்து சக்தி ஏற்படும். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த பின்னரும் அமைதியாக இருப்பதானது பலமிக்க சிவில் சமூகத்தின் பண்பு அல்ல என்பதை கிராமிய மக்கள் உணரும் தன்மையானது அதற்கான தீர்வை நோக்கிய செயற்பாடுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது சமுதாயம் சார் அமைப்பிடம் உள்ள பலம் எவை என தெரிந்து கொள்வது முக்கியமாகும். அந்த பலத்திற்குப் பின்னால் உள்ள பலவீனங்கள் எவை என்ற தெளிவையும் பெறுதல் வேண்டும். தமது பலத்தின் ஊடாக பலவீனங்களை தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். தமது பலத்தின் ஊடாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள சமுதாயம் சார் அமைப்புகள் செயற்பட வேண்டும். அந்த வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான மூலமாக மக்கள் அடிப்படை அமைப்பின் நோக்கங்களை நோக்கி நகர்வதற்கு வசதியாக இருக்கும். தம்மிடம் உள்ள பலம் மற்றும் வாய்ப்புகளின் ஊடாக தமது அமைப்பிற்கு வரக் கூடிய அச்சுறுத்தல்களை வெற்றிகொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். இதற்காக முதலில் அச்சுறுத்தல்களை அடையாளங் காணல் வேண்டும். பின்னர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை கட்டியெழுப்ப வேண்டும்.

நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகிடும் அவலநிலை இதனை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறின் எமது இனத்தின் பண்பாடு, கலை, கலாசாரம், விழுமியம் ,மொழி,இலக்கியம், இசை, நடனம், அரங்கியல், நாட்டுப்புறக்கலை. தற்காப்புக் கலை, ஓவியம்,சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு,ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள்,தத்துவம், மதங்கள்,மரபுகள், சடங்குகள், வழக்காறு, இருப்பு, நிறுவனங்கள், அறிவியல், கைத் தொழில், விவசாயம் , தொழில்நுட்பம். என்னும் பலத்திலேயே தங்கியிருக்கிறது. இவற்றில் ஏற்படும் சிதைவு தமிழ் இனத்தின் அடையாளத்தினை அபிவிருத்தி என்னும் பெயரில் இலங்கை அரசு திட்டமிட்டு நிகழ்த்திவரும் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மக்கள் தெரிவு அரசியல் பிரதி நிதிகள்.

யுத்த நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள வட கிழக்கு மக்களுக்கு சில விஷேட திட்டங்களை இந்த அரசு வகுத்து, செயற்படுத்த வேண்டும். அரசின் இயல் தகைமை ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானதாகும். சமகால அபிவிருத்தியில் வளர்ச்சி, பங்கேற்பு,சிவில் சமூகம் மற்றும் சமூக இயக்கங்கள், அடையாளம் மற்றும் மோதல்கள், பெருநிறுவன பொறுப்புணர்வு, சமூகக் கொள்கை மற்றும் உலகமயமாக்கலின் சமூக தாக்கங்கள். பிரச்சினைகள் சமூக பரிமாணங்களில் பலதரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் கொள்கை பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகாத பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்களும் பாதிப்படையாதவர்களும் (பெரும்பான்மையானோர்) சாதிப் பிரச்சினையை வீட்டுக்குள்ளும் உரிமைப் பிரச்சினையை வெளியிலுமாக காட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களைச் சுற்றி கொலை, கொள்ளை, வன்புணர்வு, பால்நிலை சமத்துவமின்மை, பிரதேசவாதம் போன்ற பல கொடிய விடயங்கள் சிறிது சிறிதாக ஆரம்பித்து பூதாகரமாக பெரியளவில் சமூகப் பிரச்சினைகள் அதிகரிக்க அதிகரிக்க தேசிய மட்டத்தில் இனப் பிரச்சினையாக காணப்படுகிறது.

தற்போதைய சூழலுக்கு ஏற்ப உலக அரசியலை விளங்கிக்கொண்டு இலங்கைத் தமிழர்களுடைய உரிமை பிரச்சினையை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னர் சமூகப் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய கட்டாயம் மிகப்பெரிய சவாலாக இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. ஆகவே சமூகப் பிரச்சினைகள் தோன்றும் மூல காரணியை கண்டுபிடித்து அதை கேள்வி கேட்கவேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கின்றது.

சமூகவியலில் அபிவிருத்தி என்பது ஒற்றைப் பரிணாமமுடையதாக அன்றி உலகமயமாதல், பின்நவீனத்துவம், பெண்ணியம், காலணித்துவம், பல்பரிணாமப் பார்வையில் இது இனவாதத்தை தூண்டி சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவினை பெறாது மேடைப்பேச்சுக்களில் மட்டும் நல்லினக்கத்தை கட்டியெழுப்புதல் எல்லா இனத்தின் கலாசார விடயங்களை மேம்படுத்தல் நாட்டை கட்டியெழுப்பாது.

இன மத மொழி மக்களும் சம உரிமையுடன் நடத்துவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துவதன் ஊடாக கிராமியத் துறையில் உற்பத்தித்திறன், வேலைவாய்ப்பு என்பவற்றை அதிகரிப்பதற்குரிய முன்னோடியாக நீண்ட காலத்தில் கிராமங்களில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரத்தை அபிவிருத்தி செய்வது மாத்திரமின்றி நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் அபிவிருத்தியுடன் இலாபத்தையும் அதிகரித்துக் கொள்ளவும் போது அபிவிருத்தி அடையமுடியும்.

தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களின் வாக்குரிமையை பெறுவதற்காக மக்களின் நலன் சார் திட்டங்கள் நாட்டின் நீண்ட கால அபிவிருத்தியை நோக்காக கொள்ளாது குறுங்காலத்தில் மக்களை மகிழ்வித்து தமது வாக்கு வங்கியைப் பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு தமிழ் அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் அரசை ஆதரித்து மகிழ்வித்து தமது பணப்பையினை நிறைத்துக் கொண்டு இலங்கையினை ஒரு பௌத்த நாடாக மாற்றுவதில் அதிகமான அக்கறை காட்டாது . அபிவிருத்தியில் இளைஞர்களின் ஒத்துழைப்பினை பெற்று முன்னேற்றப்பாதையில் செல்லும்போது கிராமிய , மாவட்ட , மாகாண, சமூக அபிவிருத்தி ஊடாக நாட்டின் அபிவிருத்தியினை நோக்கிச் செல்லமுடியும் .

– நிலவன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More