இந்தியா பிரதான செய்திகள்

வரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு…

வரவர ராவ் உள்ளிட்ட 5 பேர் 2018 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டனர்.
படத்தின் காப்புரிமைFACEBOOK / BHASKER KOORAPATI

“புனே அருகே பீமா-கோரேகான் பகுதியில் மாவோயிஸ்ட்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். புலனாய்வு செய்ததில் பிரதமர் நரேந்திர மோதியை கொலைசெய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. பீமா-கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு பிரதமரை கொலை செய்யும் முயற்சியில் பங்கிருக்கிறது,” இப்படி சொல்கிறது காவல் துறை.

புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகியான வரவர ராவ் உள்ளிட்ட 9 செயல்பாட்டாளர்கள், கடந்த ஓராண்டு காலமாக சிறையில் இருக்கிறார்கள்.

அவர்களுடைய ஜாமீன் மனுக்களை பல்வேறு நீதிமன்றங்கள் பல முறை நிராகரித்துள்ளன. வேறு சில வழக்குகளில் விசாரணைகளும், தீர்ப்பும் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரும்பத் திரும்ப விசாரணை ஒத்திவைக்கப்படுவது நீதிமன்ற விசாரணைகளின் இயல்பாகிவிட்டது.

ஜாமீன் கொடுக்காமலும், விசாரணையைத் தொடங்காமலும் அவர்கள் எவ்வளவு காலத்துக்கு சிறையில் அடைக்கப் பட்டிருப்பார்கள் என்று அவர்களுடைய உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்தச் சூழ்நிலையில், இந்த வழக்குகள் பற்றிய விவரங்களையும், அவற்றில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் காணலாம்.

பீமா-கோரேகான் வன்முறையும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைதும்

பேஷ்வாக்களுக்கு எதிராக தலித்துகள் பெற்ற வெற்றியின் 200வது ஆண்டு கொண்டாட்டம் 2018 ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா-கோரேகானில் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார். காவல் துறையினர் உள்பட மக்கள் சிலரும் காயமடைந்தனர்.

வரவர ராவ் கைது: ``ஜாமீன் இல்லை, முறையான விசாரணையும் இல்லை. விசாரணைக் காலத்தில் தொடரும் சோகம்''
படத்தின் காப்புரிமைMAYURESH KONNUR

ஆரம்பத்தில் வன்முறையைத் தூண்டியதாக இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளான சம்பாஜி பிடே மற்றும் மிலிந்த் எக்போடே மீது வழக்கு தொடரப்பட்டது. மிலிந்த் எக்போடே கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சம்பாஜு பிடே இன்னும் தலைமறைவாக உள்ளார்.

பின்னர் புரட்சிகர சிறுத்தைகள் ஜாட்டிய அனாட்சியின் (ஆர்.பி.) தலைவர் சுதிரா தவாலே, நாக்பூரைச் சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், டெல்லியைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் ரோனா வில்சன், நாக்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷோமா சென், பி.எம்.ஆர்.டி.எப். முன்னாள் உறுப்பினர் மகேஷ் ராவுத் ஆகியோரை 2018 ஜூன் மாதம் முதலாவது வாரத்தில் புனே காவல் துறையினர் மும்பை, நாக்பூர் மற்றும் டெல்லியில் கைது செய்தனர்.

அவர்கள் நகர்ப்புறங்களில் மாவோயிட் அமைப்புகளின் உயர்நிலை நிர்வாகிகளாக இருந்தார் என்று காவல் துறை தரப்பில் சொல்லப்படுகிறது. அவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்தியபோது மின்னணு சாதனங்கள், கணினி டிஸ்க்-குகள், ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாகவும் அவற்றை புனே தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளதாகவும், ஆய்வகத்தில் இருந்து அந்தப் பொருட்களின் கண்ணாடி பிம்பங்களை சேகரித்திருப்பதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.

ஆவணங்களை ஆய்வு செய்ததில், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதைப் போல பிரதமர் நரேந்திர மோதியை கொலை செய்ய மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றும் காவல் துறை கூறுகிறது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் மேற்படி ஐந்து பேரையும் கைது செய்ததாகக் காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.

செயல்பாட்டாளர்கள் கைது

அதன்பிறகு, செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் மகாராஷ்டிர காவல் துறையினர் சோதனைகள் நடத்தினர். புரட்சிகர எழுத்தாளர் சங்க நிர்வாகி பென்டியலா வரவர ராவ் வீட்டிலும் சோதனை நடந்தது. ஹைதராபாத்தில் வரவர ராவ் கைது செய்யப்பட்டு, அவரை காவல் துறையினர் புனேவுக்கு அழைத்துச் சென்றனர்.

வரவர ராவ் உள்ளிட்ட 5 பேர் 2018 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டனர்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES / FACEBOOK
Image captionவரவர ராவ் உள்ளிட்ட 5 பேர் 2018 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டனர்.

அதே நாள் வழக்கறிஞரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், சிவில் உரிமைகள் செயல்பாட்டாளர் கவுதம் நவ்லங்கா, சுதிரா தவாலேவுக்காக வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் உரிமைப் போராளி அருண் பெரைரா, எழுத்தாளரும் உரிமை செயல்பாட்டாளருமான வெர்னான் கோன்சால்வ்ஸ் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிர காவல் துறையின் குற்றச்சாட்டு பின்வருமாறு உள்ளது. பீமா-கோரேகான் வன்முறை தொடர்பாக ஜூன் மாதம் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் மாவோயிஸ்ட்களின் அனுதாபிகளாக உள்ளனர். அவர்கள் பிரதமர் மோதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தனர். அவர்களுக்குத் தேவையான நிதி உதவியை வரவர ராவ் அளித்து வந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் விஷ்ரம்பக் காவல் நிலையத்தில் வரவர வாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 153(A), 505(1), (B), 117, 120(B) பிரிவுகளின் கீழும், சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் படி 13, 16, 17, 18(B), 20, 38, 39, 40 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக பிபிசிக்குப் பேட்டியளித்த வரவர வால், பீமா-கோரேகான் வன்முறையை தூண்டிய சம்பாஜி பிடே மற்றும் மிலிந்த் எக்போட்டே ஆகியோர் மீதிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக காவல் துறையினர் திட்டமிட்டு பொய்யாக உருவாக்கிய குற்றச்சாட்டுகள் தான் இவை என்று கூறியுள்ளார்.

ஓராண்டு கடந்தும் விசாரணைக் கைதிகளாக

ஐந்து செயல்பாட்டாளர்கள் கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அக்டோபர் 25 ஆம் தேதி வரை அவர்களை அவரவர் வீடுகளில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பிறகு கவுதம் நவ்லங்காவுக்கு வீட்டுக் காவலில் இருந்து ஜாமீன் அளிக்கப்பட்டபோது, மீதி நான்கு பேரையும் 2018 நவம்பரில் காவல் துறையினர் கைது செய்தனர்.

ரோனா வில்சன் உள்ளிட்ட ஐந்து பேர் 2018 ஜூனில் கைது செய்யப்பட்டனர்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பல விஷயங்களில் அவர்கள் பிரதமர் மோதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களில் அருண் பெரைராவும், வரவர வாவும் ஏற்கெனவே மாவோயிஸ்ட் அனுதாபிகள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு உள்ளது என்றும், அதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில்தான் கைது செய்திருப்பதாகவும் புனே காவல் துறை கூறுகிறது. இருந்தபோதிலும், உரிமை அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், இது சதிச் செயல் என்றும், எதிர்ப்புக் குரல் எழுப்புவோரை அடக்க காவல் துறை முயற்சிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளன.

தலித் பேராசிரியர் ஆனந்த் டெல்ட்டும்ப்டேவும் 2019 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். இருந்தபோதிலும், அது சட்டவிரோதமான நடவடிக்கை என்று புனே நீதிமன்றம் அதை ரத்து செய்துவிட்டது.

வரவர ராவின் மனைவி ஹேமலதா 2019 ஏப்ரலில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், விசாரணையை நிறுத்தி வைக்காமல் வரவர ராவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

2018ல் கைது செய்யப்பட்ட சுரேந்திர காட்லிங்க, ஷோம சென், சுதிர் தவாலே, மகேஷ் வாவுத், ரோனா வில்சன் ஆகியோரும், 2018 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்ட வரவர ராவ், சுதா பரத்வாஜ், சுதிர் தவாலே, அருண் பெரைரா, வெர்னான் கோன்சால்வஸ் ஆகியோரும், முழுமையாக ஓராண்டு முடிந்துவிட்ட நிலையிலும் புனே எரவாடா சிறையில் இன்னும் விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் குற்றப் பத்திரிகையை 2019 நவம்பரில் தாக்கல் செய்தனர். இணைப்பு குற்றப் பத்திரிகையை 2019 பிப்ரவரியில் தாக்கல் செய்தனர். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 10 மாதங்களாகிவிட்டன. இருந்தாலும், வழக்கில் அதிக முன்னேற்றம் நடக்கவில்லை. அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.

`இன்னும் 290 நீதிமன்ற விசாரணைகள் உள்ளன’ என்று எங்களிடம் சொல்கிறார்கள்: ஹேமலதா

பிபிசியிடம் பேசிய வரவர ராவின் மனைவி ஹேமலதா, “விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஜாமீன் மனுக்கள் மீது 6 மாதங்களாக வாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதி விசாரணையை மீண்டும் நடத்த விரும்புகிறார்,” என்று கூறினார்.

வரவர ராவ் கைது: ``ஜாமீன் இல்லை, முறையான விசாரணையும் இல்லை. விசாரணைக் காலத்தில் தொடரும் சோகம்''

“நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினால், விசாரணை நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள். விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம். இருந்தாலும் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரிக்கவோ அல்லது ஜாமீன் வழங்கவோ இல்லை. அங்கே தாமதிக்கப் படுகிறது. விசாரணை நடவடிக்கையில் முன்னேற்றம் காணவோ அல்லது ஜாமீன் வழங்கவோ இல்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார் ஹேமலதா.

இதுவரை 10 நீதிமன்ற விசாரணைகள் முடிந்துள்ளன. ஒரு வாக்குமூலம் கூட இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். “இந்த மனுவைக் காரணம் காட்டி ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிப்பதை அவர்கள் தாமதம் செய்கிறார்கள். அந்த நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக உள்ள சிவாஜி பவார், இந்த வழக்கில் இன்னும் 290 விசாரணைகள் உள்ளதாகக் கூறினார்” என்று ஹேமலதா தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி தொடர்பில்லாத வழக்குகளிலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளிலும், அவர்கள் பொய்யாக சேர்த்து வருகிறார்கள். “கண்ணிவெடிகள் புதைத்தார்கள் என்று சட்டீஸ்கரில் ஆஹிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடகாவிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கினாலும் கூட அவர் சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள்” என்று ஹேமலதா குற்றஞ்சாட்டினார்.

“நான் அவருடைய மனைவி என்பதற்கே காவல் துறை சான்றிதழ் கேட்கிறது’

“இந்திய தலைமை நீதிபதிக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. தெலங்கானா முதல்வருக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த காலத்தில் மகாராஷ்டிர (முன்னாள்) ஆளுநர் வித்யாசாகர் ராவும், வரவர வாவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவருக்கும் நாங்கள் கடிதம் எழுதினோம். அவர் அதை வெறுமனே முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டார். அவ்வளவுதான். அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று சோகத்துடன் கூறினார் ஹேமலதா.

வரவர ராவ் கைது: ``ஜாமீன் இல்லை, முறையான விசாரணையும் இல்லை. விசாரணைக் காலத்தில் தொடரும் சோகம்''
படத்தின் காப்புரிமைFACEBOOK / KRANTHI TEKULA

“கடந்த ஓராண்டு காலம் மிகவும் சிரமமானதாக இருக்கிறது. வரவர ராவ் கடந்த காலத்தை தாங்கிக் கொள்ளும் மனநிலையில் இல்லை. வயதும் ஆரோக்கியமும் ஒத்துழைக்காது. சட்டீஸ்கர் பயணம் காரணமாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் மூலநோய் ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“ஷோமா சென் முட்டுவலியால் அவதிப்படுகிறார். ஆனால் அந்தப் பெண்மணிக்கு கட்டில் எதுவும் தரப்படவில்லை. வரவர ராவுக்கு கட்டில் மற்றும் நாற்காலி கூட அளிக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக சிறை சென்றிருக்கிறார். ஆனால் எங்கேயும் இவ்வளவு மோசமாக நடத்தப்பட்டதில்லை. சுரேந்திர காட்லிங் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இதயத்தின் ரத்தக் குழாயில் ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது” என்றும் ஹேமலதா தெரிவித்தார்.

பத்து நாட்களுக்கு முன்பு புனேவுக்கு சென்றதாகவும், அங்கு நிலைமை நன்றாக இல்லை என்றும் அவர் கூறினார். “புனே சிறையில் கட்டுப்பாடுகள் விநோதமாக உள்ளன. சிறையில் அவரை நான் சந்திக்க வேண்டும் என்றால், நான் அவருடைய மனைவி என்று ஹைதராபாத் காவல் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்கிறார்கள். அவருடைய பெயரை தன் பெயரின் பிற்பகுதியில் சேர்த்திருப்பவர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். எனது மகள்கள் திருமணத்திற்குப் பிறகு பிற்பாதி பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே அவரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி தருகிறார்கள். மகன்கள் வழியிலான பேரக் குழந்தைகள் சிறைவாசிகளைச் சந்திக்க அனுமதிக்கிறார்கள். மகள்கள் வழியிலான பேரக் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. எங்களுக்கு மகன்கள் கிடையாது. என் மகள்களின் பிள்ளைகள் அவரைச் சந்திக்க அவர்கள் அனுமதிப்பதில்லை” என்று ஹேமலதா தெரிவித்தார்.

“கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருடைய மனைவி, தன்னுடைய பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொள்ளவில்லை. எனவே தனது கணவரை சந்திக்க அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, நாங்கள் சார்ந்துள்ள கோஷ்டி எது என்று படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள். கோஷ்டி (gang) என்ற ஒரு பகுதி அந்தப் படிவத்தில் இருக்கிறது. அவர்கள் எந்த கோஷ்டி அல்லது கும்பலையும் சேர்ந்தவர்கள் அல்ல, அரசியல் கைதிகள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்களுக்குப் புரியவில்லை. எனவே நான் அந்த இடத்தில் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம் என்று எழுதிக் கொடுத்தேன்” என்றார் ஹேமலதா.

Presentational grey line

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap