இலங்கை பிரதான செய்திகள்

யாழில் திறக்கப்பட்ட பிரமிட் நிறுவனத்தை மூட யாழ்.மாநகர சபையில் பிரேரணை

மயூரப்பிரியன்

குளோபல் லைவ் ஸடரைல் லங்கா நிறுவனத்தினை உடனடியாக மூடுமாறும் அவ்வாறு மூடமறுக்கும் பட்சத்தில் தங்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த நிறுவனத்தற்கு அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் பிரேரணையை முன் மொழிந்துள்ளார்.
யாழ்.மாநகர சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை முன் வைத்தார்.
மேலும் உரையாற்றும் போது ,

எனது வட்டாரத்திற்கு உட்பட்ட பலாலி வீதி கந்தர்மடத்தில் ஒரு நிதி நிறுவனம் உள்ளது. அதன் பெயர் குளோபல் லைவ் ஸடரைல் லங்கா. அதனது நடவடிக்கை யாதெனில். குறித்த நிறுவனத்திடம் இருந்து ஒரு நபர் 90 ஆயிரம் பெறுமதியானது என்று அந்த நிறுவனத்தினால் கூறப்படுகின்ற பொருட்களினை கொள்வனவு செய்ய வேண்டும். ஆனால் அந்த பொருட்கள் 90 ஆயிரம் ரூபா பொறுமதியானவையோ அல்லது உத்தரவாதம் உள்ள பொருட்களோ அல்ல. அவற்றுக்கான சந்தைப் பெறுமதி ஏறத்தாழ 30 ஆயிரம் ரூபா மட்டுமே. இது தொடர்பில் குறித்த நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட ஒருவர் விளக்கம் கேட்டபோது அந் நிறுவனம் ஒரு சாதாரண கடையில் 30 ரூபா விற்கின்ற தேனீர் நட்சத்திர விடுதிகளில் 700 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது அது போல் தான் எமது நிறுவனத்தில் இப் பொருளினை வாங்கினால் அதன் பெறுமதி இதுதான் என்று குறித்த நிறுவனத்தால் கூறப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு ஆரம்பத்திலேயே ஏமாற்றப்பட்டு விற்கப்படும் இப் பொருளினை வாங்கும் நபர் வேறு இரண்டு நபர்களுக்கு இதே போன்ற பொருட்களை விற்க வேண்டும். பின்னர் அவர்கள் வேறு நபர்களுக்கு விற்க வேண்டும். அதாவது ஒரு பிரமிட் போன்று வாடிக்கையாளர்களை இவ் வியாபாரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இத்திட்டம் இலங்கை மத்திய வங்கியால் ஒரு தடை செய்யப்பட்ட திட்டம் இத் திட்டம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி தொடர்பாக பின்வரும் தகவல்களைத் தெரிவிக்கின்றது.

தடை செய்யப்பட்ட திட்டம் என்றால் என்ன?

தடை செய்யப்பட்ட திட்டம் என்பது அதில் பங்குபற்றுபவர்கள் பணத்தினை அல்லது பணப் பெறுமதியினைச் செலுத்துவதற்கு அல்லது பங்களிப்புச் செலுத்துவதற்கு வேண்டிக் கொள்ளப்படுவதுடன் அதில் பெறப்படும் நன்மைகள்.
இத்திட்டத்தில் பங்குபற்றுபவர்களின் எண்ணக்கை அதிகரித்துச் செல்லுதல்
இது ஒரு பிரமிட் வடிவமாக இருப்பதுடன் ஒவ்வொரு பங்குபற்றுனரும் பிரமிட் கட்டமைப்பில் அவரின் கீழ் மேலதிக அங்கத்தவர்களை கொண்டு வருவார்கள்.
இத்திட்டத்தில் இணைவதற்கு பங்கேற்பவர்கள் மருந்து வகை உபகரணங்கள் தங்க நாணயங்கள், அழகு சாதனங்கள், மரத் தளபாடங்கள் மின்சார உபகரணங்கள் போன்ற பொருட்களில் ஒன்றை வாங்க வேண்டும்.இப்படியான திட்டங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரம்பித்தல், வழங்குதல், ஏற்பாடு செய்தல், விளம்பரப்படுத்தல், கொண்டு நடத்துதல், நிதியிடுதல், நிர்வகித்தல், அல்லது நெறிப்படுத்துதல் என்பன வங்கித் தொழில் சட்டத்தின் 83 C பிரிவின் கீழ் சட்டவிரோதமாகும்.
என்று தெரிவத்துள்ளது.

எனவே இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட ஒரு வியாபாரத்தினை மேற்கொள்ளுகின்ற ஒரு வியாபார நிறுவனம் எவ்வாறு யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அதனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கலாம்

அத்துடன் தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள் தமது தீர்ப்பில் .. மேலும் மக்கள் இந்த வியாபர நடவடிக்கையால் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் முகமாக இந்த நீதிமன்ற கட்டளையை பத்திரிகைகளில் பொலிஸார் அறியக் கொடுத்து மக்கள் பாதிக்கப்படுவதை தடுத்து மக்களை அதில் இருந்து காப்பாற்ற பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்

மேலும் குறித்த நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கையால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க மக்கள் மத்தியில் குறித்த நிறுவனம் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக இந்த நீதிமன்ற நியாயதிக்கத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் பிரதேச செயலர் முன்னிலையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது முன்னெடுக்க கௌரவ நீதிபதி பணித்தார்

சாவகச்சேரி நீதவானின் கட்டளையைத் தொடர்ந்து மூடப்பட்ட இந் நிறுவனம் தற்போது பலாலி வீதி கந்தர்மடத்தில் இவ்வாண்டு தொடக்கம் முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது
இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட, மக்களை குறித்த வியாபார நடவடிக்கைகளால் மேலும் மக்கள் பாதிப்படைவதை தவிர்க்கும் முகமாக மக்களை அதில் இருந்து காப்பாற்றுமாறும் நீதிமன்றமே கட்டளையிடும் போது அவ் நிறுவனத்தை யாழ்.மாநகர சபை எல்லைக்கு திறப்பதற்கு எவ் அடிப்படையில் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது?

இந் நிறுவனத்தால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட மாட்டினை கூட விற்று மேற்படி வியாபாரத்தில் இணைந்துள்ளனர். எனவே இலங்கை மத்திய வங்கி, கௌரவ நீதிமன்றம் போன்றவற்றால் தடை செய்யப்பட்ட இவ்வியாபரத்திற்கும் இவ் வியாபார நிறுவனத்தற்கும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நடாத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்பதுடன் தற்போது செயற்பட்டு வரும் நிறுவனத்தினை உடனடியாக மூடுமாறும் அவ்வாறு மூடமறுக்கும் பட்சத்தில் தங்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த நிறுவனத்தற்கு அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்றும் இச் சபையைக் கேட்டுக் கொள்ளுகின்றேன் என தெரிவித்தார்.

அதேவேளை குறித்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் லோகதயாளன் ,
குறித்த நிறுவனம் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது. தீர்பை வழங்கிய கௌரவ நீதிபதி ஒரு மாவட்ட நீதிபதியாவார் எனவே இது மாவட்டம் முழுவதற்கும் பொருந்தும் என்றும் தடை செய்யப்பட்ட ஒரு நிறுவனம் மீண்டும் அதே பெயரில் இங்கு இயங்குவதனை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த முதல்வர் ,
சாவகச்சேரி நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் நகலை பெற்றுக்கொள்வதுடன் மூன்று வேலை நாட்களுக்குள் குறித்த நிறுவனம் எதன் அடிப்படையில் இங்கு வியாபாரத்தை மேற்கொள்ளுகின்றது என்று குறித்த நிறுவனத்திடம் விளக்கம் கோருவது என்றும் தெரிவித்தார்.
அதை பொறுத்து அவ் நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.  #யாழ்  #பிரமிட்  #மாநகரசபை  #பிரேரணை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.