இலக்கியம் பிரதான செய்திகள்

அவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை…

அவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய  ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று (23.09.19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் அவர்களை விடுதலை செய்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

அவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய  ராஜபக்ஸ   மற்றும் 7 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டெம்பர் 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

எனினும், அது தொடர்பான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனால் வழக்கினை இன்றைய தினம் (23) வரை ஒத்திவைப்பதாகவும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இதன்போது, பிரதிவாதியான கோத்தாபய  ராஜபக்ஸ  ஷ சார்ப்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கு இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்துள்ள முறை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும், பிரதிவாதியான கோத்தாபய  ராஜபக்ஸவை வழக்கில் இருந்து விடுவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். குறித்த மேன்முறையீட்டு உத்தரவுடன் தொடர்புடைய ஆவணங்கள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதிமன்றம் இதன்போது தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்றைய தினம் (23) மேன்முறையீட்டு நீதிமன்றின் குறித்த உத்தரவின் பிரிதி ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது குறித்த உத்தரவின் பிரதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்தவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக்கிடங்கு ஒன்றை நடாத்திச் செல்ல அனுமதி அளித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி இலஞ்ச ஆணைக்குழுவால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய  ராஜபக்ஸ  ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இதேவேளை, போதிய அளவு சாட்சியங்கள் இருந்தால் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் உரிய முறையில் வழக்கு தொடர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வாய்ப்புள்ளதாக நீதவான் அறிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.