இலங்கை பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்…


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இரவு இந்தக் கூட்டம் கூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடுவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுச் சின்னத்தில் போட்டியிட இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே SLPP உடன் கூட்டு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கும் நோக்கிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் கட்சியின் உறுப்பினர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் எந்தவொரு வேலைத் திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என ஜனாதிபதி நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட மாநாட்டின்போது தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், அக்கட்சியின் மக்கள் நேய செயற்பாடுகளினால் கட்சி அழிவை சந்திக்கவில்லை எனத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலவீனமடைந்திருப்பதாக எவர் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக ஆட்சிபீடத்தில் அமர நினைக்கும் எந்த வேட்பாளராக இருந்தாலும் அவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியமாகும் எனவும் எதிர்கால ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது காணப்படும் அரசியலமைப்பின்படி எதிர்காலத்தில் அதிகாரமற்ற ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பதைவிட அதிகாரமுள்ள அரசாங்கத்தை உருவாக்குதலின் ஊடாக 2020 இல் பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றுவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இலக்கு என ஜனாதிபதி தெரிவித்தார்.

தனித்து போட்டியிடாமல் கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக அந்த இலக்கினை அடைந்துகொள்வதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, ஊழல் புரியும் பிரமுகர்கள் கூட்டம் அழிவடையச் செய்துள்ள நாட்டினை புதிய பாதையில் கொண்டு செல்ல இலஞ்சம், ஊழல் அற்ற ஜனநாயகமும் சுதந்திரமும் மேலோங்கிய சமூகத்தை அந்நிய நாட்டு சக்திகளுக்கு தலை வணங்காத நாட்டை கட்டியெழுப்புவது புதிய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் காணப்படும் மோதல் பிரதமருக்கும் தனக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினை இல்லை எனவும் அது ஊழலுக்கும் இலஞ்சத்திற்கும் எதிரான மோதல் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மோசடியான புதிய அரசியல் கொள்கைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பண்டாரநாயக்கவின் மக்கள் நேய அரசியல் கொள்கைக்கும் இடையிலான மோதல் எனவும் அதைக் குறிப்பிடலாம் எனத் தெரிவித்தார்.

பிரதரை அப்பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்ததாகவும், அவர்கள் பொறுப்பேற்ற விடயங்களை சரிவர ஆற்ற முடியாதது தனது பிரச்சினை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சபாநாயகருக்கு வழங்கியுள்ள கடிதத்தின் அடிப்படையிலேயே எனவும் தெரிவித்தார்.

கீழ்த்தரமான அரசியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் காலங்களில் கட்சியின் அடையாளம், கௌரவம் மற்றும் அபிமானத்தை தக்க வைத்துக்கொண்டு நாட்டுக்கும் மக்களுக்குமான சேவைகளை அர்ப்பணிப்புடன் செய்யவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் குருணாகல் மாவட்ட மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நேற்று (29) பிற்பகல் ஹெட்டிபொல பொதுச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, தேசிய ஒருங்கிணைப்பாளர் துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன ஆகியோரும் வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.