பலாலி விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இம்மாதம் 17 ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து முதலாவது விமானம் பலாலி விமான நிலையத்தை சென்றடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்த கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தமது அரசாங்கத்தின் மூலமாக முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரதானமான ஒன்றாக பிராந்திய விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுவதாகவும், இதில் பலாலி விமான நிலையம் தற்ப்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மட்டகளப்பு விமான நிலையத்துக்கு எயார் இந்தியா விமான சேவை விமானங்களும் சேவையில் ஈடுபடவுள்ளன. இலங்கையில் இருந்தும் தனியார் விமான நிறுவனங்கள் இரண்டு தமது சேவைகளை முன்னெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்கான அமைச்சரவை பத்திரமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும். கொழும்பு ரத்மலானை விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Add Comment