இலங்கை பிரதான செய்திகள்

யாழில் மீண்டும் வெள்ளை வான் அச்சுறுத்தல்….

தேர்தல் விதிமுறைகளை மீறி தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவின் ஆதரவாளர்கள் மிரட்டியதுடன் , நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டி சென்றுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணி (பெரமுனா) கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவின் ஆதரவாளர்களே அவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள்  50 – 5048 எனும் இலக்கமுடைய வெள்ளை நிற ஹயஸ் ரக வாகனத்தில் வந்தே சுவரொட்டிகளை ஒட்டி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுறுத்தலுக்குள்ளான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவிக்கையில்,

நேற்று இரவு கோத்தாபய  ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவந்தனர் அதன் தொடர்ச்சியாக தனது வீட்டுச் சுவரிலும் ஒட்ட முற்பட்ட போது தான் அதனை எதிர்த்ததாகவம், யாரிடம் கேட்டு தன் வீட்டு மதிலில் ஒட்டுகின்றீர்கள் என தான் கேட்டதற்கு அவர்கள் யாரிடம் கேட்க வேண்டும் மிரட்டல் தொனியுடன் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  அதிகாரத்துடனும் மிரட்டல் பாணியுடனும் மீண்டும் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு முயற்சித்தனர். இருப்பினும் அதற்கு தான் அனுமதி வழங்காதன் காரணமாக அது பெரும் வாய்தர்க்கமாக மாற அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டாமல் சென்று விட்டனர். ஆனால் இன்று காலை தனது வீட்டு சுவர் முழுவதும் மட்டும் இன்றி வீட்டு கேற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.

தான் அவர்களுக்கு மரியாதையாகவே கூறியதாகவும்  ஆனால் அவர்கள்  ஆதிகார வெறியுடனும் மிரட்டல் பாணியுடனும் யாரும் இல்லாத பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக  முன்னர் நடைபெற்ற ஏதேட்சைத்தனமான அதிகார வெறியுடனான கொடுங்கோல் ஆட்சி தாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வரப்படும் என்ற செய்தியை இவர்கள் இச் செயல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.