துருக்கி சிரியாவின் வடபகுதி மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐஎஸ் பீட்டில்ஸ் எனப்படும் ஆபத்தான பயங்கரவாதிகளை தனது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈராக்கினதும் சிரியாவினதும் சில பகுதிகளை ஐஎஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவேளை மேற்குலகை சேர்ந்தவர்களை பிடித்து பணயக்கைதிகளாக வைத்திருந்த பின்னர் படுகொலை செய்த லண்டனை சேர்ந்தஐஎஸ் தீவிரவாதிகள்  ஐஎஸ் பீட்டில்ஸ் என அழைக்கப்படுகின்றனர். லண்டனை சேர்ந்த இருவரும் தற்போது அமெரிக்காவின் பிடியில் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குர்திஸ் ஆயத குழுக்களின் அல்லது துருக்கியின் பிடியிலிருந்து அவர்கள் தப்பிச்செல்லக்கூடும் என்ற ஆபத்தை கருத்தில் கொண்டே அவர்களை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளில் இருவர்  மோசமானவர்கள் என டிரம்ப் வர்ணித்துள்ளார்.

சிரியாவின் வடபகுதியில் குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட சிறையிலிருந்த இவர்களையே அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது என அமெரிக்க செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.