Home இலங்கை ஜனாதிபதித் தேர்தல் – பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை…

ஜனாதிபதித் தேர்தல் – பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை…

by admin

(பின்னணி )

இலங்கையின் 07 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படும் தேர்தல் 2019.11.16 ஆந் திகதி அதாவது, இன்னும் 32 நாட்களில் நடைபெறவுள்ளது.

இம்மாதம் 06 ஆந் திகதியுடன் முடிவடைந்த வேட்புமனுக்கள் கையேற்கும் காலத்துள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 41 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருந்தபோதும், 35 வேட்பாளர்கள் மாத்திரமே வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்துள்ளனர். 18 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 வேறு அரசியல் கட்சிகளும் 15 சுயேச்சை வேட்பாளர்களும் என்ற அடிப்படையில் இவ்வாறு வேட்புமனுக்களைக் கையளித்துள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பதிவுசெய்யப்பட்ட 15,992,096 தேருநர்கள் தகுதிபெற்றுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பே இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தேருநர்களுக்கு நாடுபூராவுமுள்ள 12,845 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தேர்தல் கடமை அலுவல்களில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அக்டோபர் மாதம் 30, 31 ஆகிய திகதிகளில் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நவம்பர் மாதம் 04 ஆந் திகதி அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்குறித்த தினங்களில் உத்தியோகத்தர் எவருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், அவர்கள் நவம்பர் மாதம் 07 ஆந் திகதி மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் தமது அஞ்சல் மூல வாக்கை அளிக்க முடியும்.

உத்தேச ஜனாதிபதித் தேர்தல் இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை இடம்பெறாத சிறப்பான பல நிகழ்வுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதுவரை ஜனாதிபதித் தேர்தலொன்றில் போட்டியிடும் அதிகூடிய எண்ணிக்கையான வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவது அவற்றில் மிக முக்கியமான ஒரு விடயமாகும். அதேபோல், சுயேச்சை வேட்பாளர்களாக 15 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவது ஒரு சிறப்பம்சமாகும். அதேபோல் பதவி வகிக்கின்ற ஜனாதிபதி, பிரதம அமைச்சர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் என்போர் இம்முறை தேர்தலில் போட்டியிடாமையும் ஒரு சிறப்பம்சமாகும். ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் 26 அங்குலம் நீளமான, மிக நீண்ட வாக்குச்சீட்டில் வாக்காளர்கள் வாக்களிக்கக் கிடைப்பது இம்முறை தேர்தலில் காணக்கிடைக்கும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

(தேர்தல் கண்காணிப்புச் செயன்முறை)

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புச்செய்யப்பட்ட வேளையிலிருந்து பரந்தளவிலான தேர்தல் கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பஃவ்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தலுக்கு முந்திய கண்காணிப்புச் செயன்முறை, தேர்தல் தினத்தன்று இடம்பெறும் கண்காணிப்புச் செயன்முறை, தேர்தலுக்குப் பிந்திய கண்காணிப்புச் செயன்முறை என்ற அடிப்படையில் 03 கட்டங்களைக் கொண்டதாக இது அமைந்திருக்கும்.

(தேர்தலுக்கு முந்திய கண்காணிப்புக் கால வரையறை)

தேர்தலுக்கு முந்திய கண்காணிப்புக் கால வரையறையை ஒருங்கிணைப்புச்செய்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பஃவ்ரல் அமைப்பு மாவட்டவாரியான பல்வேறு ஏற்பாட்டு நடவடிக்கைகளுடன் ஒத்துழைத்துச் செயலாற்றுகின்றது. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தையும் உள்ளடக்கும் விதத்தில் நீண்டகால அனுபவம்வாய்ந்த 160 கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புச் செயன்முறையில் களமிறங்கியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான சட்ட ஏற்பாடுகள், தேர்தல் தவறுகளும் தண்டனைகளும், தேர்தல் சார்ந்த வேறு சட்டங்கள் மீறப்படும் விதத்திலான செயற்பாடுகள் என்பவற்றை கண்காணித்தலும் அவற்றை முறைப்படியாக அறிக்கையிடுதலும் சம்பந்தமாக பஃவ்ரல் அமைப்பு மேற்சொன்ன நீண்டகால அனுபவம்வாய்ந்த கண்காணிப்பாளர்களுக்கு முறைப்படியாகவும்; கிரமமாகவும் பயிற்சி அளித்துள்ளது.

(சர்வ கட்சி நடவடிக்கைக் கூடம்)

இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு மாவட்டத்திற்குமுரிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள் மூலம் தாபிக்கப்பட்டு;ள்ள தேர்தல் முறைப்பாட்டு நிலையங்களுக்கு கொழும்பிற்கு இருவரும் ஏனைய மாவட்டங்களுக்கு ஒருவரும் வீதம் 26 பேரை தேர்தல் முறைப்பாட்டு அலகு இயங்கும் காலப்பகுதியை உள்ளடக்கக்கூடிய வகையில் ஈடுபடுத்த பஃவ்ரல் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

(அஞ்சல் மூல வாக்களிப்பின் கண்காணிப்பு)

அஞ்சல்மூல வாக்களிப்பிற்குரிய உத்தேச நான்கு நாட்களிலும் விசேட கண்காணிப்பு வேலைத் திட்டமொன்று முடுக்கிவிடப்படவுள்ளது. அதற்கமைய சிறப்பான அரசியல் கூருணர்வு கொண்ட பஸ் டிப்போக்கள், இராணுவ முகாம்கள், கல்வி அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், வேறு அஞ்சல்மூல வாக்கெடுப்பு நிலையங்கள் சார்ந்த கண்காணிப்புப் பணிகளில் 1,000 அஞ்சல்மூல வாக்களிப்பு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். அதேபோல் அஞ்சல் மூலம் வாக்களிக்கும் நாட்களில் அனைத்து மாவட்டங்களின் தேவைக்கேற்ப துரித தலையீடுகளை மேற்கொள்வதற்கு விசேட நடமாடும் கண்காணிப்புக் குழுக்களையும் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

(பஃவ்ரல் முறைப்பாட்டு அலகு)

எமக்குக் கிடைக்கின்ற முறைப்பாடுகள் குறித்து அணுகி ஆராய்ந்து அவை தொடர்பாக துரிதமாக மேலதிக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விசேட தேர்தல் கண்காணிப்பு அலகொன்றை தாபிக்க பஃவ்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அனுபவம்வாய்ந்த சட்டத்தரணிகளைக் கொண்ட 20 பேர் அடங்கிய பணிக்குழாமொன்று இக்கண்காணிப்பு அலகுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சுயாதீன கண்காணிப்பாளர்களும் ஏனையவர்களும் ஆற்றுப்படுத்தும் தேர்தல் முறைப்பாடுகள் இவ்விசேட கண்காணிப்புப் பிரிவிலும் துரிதமாக குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல் தேர்தல்கள் திணைக்களம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வுசெய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் என்பவற்றில் முறைப்பாட்டைச் சமர்ப்பித்து குறித்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், தேவைப்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பஃவ்ரல் அமைப்பு நடவடிக்கை எடுக்கும்.

(சமூக ஊடகங்களின் கண்காணிப்பு)

பஃவ்ரல் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு வரலாற்றில் முதல் தடவையாக சமூக ஊடகங்களைக் கண்காணிப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு சமூகக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், பொய்யான தகவல்கள், உண்மைக்குப் புறம்பான பொருள்கோடல்கள் உள்ளிட்ட பொது மக்களை தவறாக வழிநடாத்தக்கூடிய அல்லது பொதுமக்கள் மத்தியில் அமைதியீனத்தை ஏற்படுத்தக்கூடிய பேச்சுக்கள் குறித்து கண்காணித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவை அறிக்கையிடப்படும். அவ்வாறு அறிக்கையிடும் தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவின் கண்காணிப்பைத் தொடர்ந்து இலங்கை பேஃஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அவற்றை அனுப்பிவைப்பதற்கு அவசிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

(தேர்தல் தினத்தன்று இடம்பெறும் கண்காணிப்புச் செயன்முறை)

முன்கூறியவாறு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நாடுபூராவும் அமைந்துள்ள 12,845 வாக்கெடுப்பு நிலையங்களில் நடைபெறும். ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தையும் உள்ளடக்குகின்றவாறு நிலைகொண்டிருக்கும் கண்காணிப்பாளர்களும் அடங்கலாக 6,000 க்குக் கூடுதலான கண்காணிப்பாளர்களை பணியிலீடுபடுத்துவதற்கும் அதன் ஊடாக சுதந்திரமானதும் நியாயமானதுமான ஒரு தேர்தலை நடாத்துவதற்கு அவசியமான சூழலை குறித்த வாக்கெடுப்பு நிலையங்களில் உறுதிப்படுத்துவதற்கும் பஃவ்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு வாக்கெடுப்புப் பிரிவையும் உள்ளடக்குகின்ற விதத்தில் அனுபவம் வாய்ந்த 04 கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய 160 நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்துவதற்கும் ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டு;ள்ளன. மேலும் ஆபத்தானவை என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 50 விசேட நடமாடும் வாகனங்களை பணியில் அமர்த்துவதற்கும் ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

(தேர்தலுக்குப் பிந்திய நாட்களில் கண்காணிப்புச் செயன்முறை)

தேர்தல் முடிவடைந்த பின் 02 வார காலத்துள் தேர்தலுக்குப் பிந்திய கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும்.

(தேர்தல் முறைப்பாடுகள்)

தேர்தல் அறிவிப்புச்செய்யப்பட்ட 2019.09.18 ஆந் திகதியிலிருந்து 2019.10.14 ஆந் திகதி வரையான காலத்தில் பஃவ்ரல் அமைப்புக்குக் கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 62 ஆகும். அரச உத்தியோகத்தர்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள், அரச உத்தியோகத்தர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படல், அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளையும்; உதவிகளையும் அரசியல் நோக்குடன் வழங்குதல், சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் முதலியன அவற்றில் அடங்கும்.

(அரச அதிகாரத்தையும் அரச சொத்துக்களையும் கையாளுதல்)

சனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இன்று வரையான காலத்துள் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அதிகூடிய எண்ணிக்கையானவை அரச சொத்துக்களையும் அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்வது சம்பந்தமாக அறிக்கையிடப்படுகின்றன. இது தொடர்பான 26 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் தொழில் வழங்குதல் முக்கிய இடம் வகிக்கிறது. அதேபோல் அபிவிருத்தித்திட்டங்கள், மானிய உதவி வழங்கும் நிகழ்வுகள், மத்திய அரசு ஊடாகவும் உள்ளுர் அதிகாரசபைகளின் மற்றும் சில மாகாண சபைகளும் தொழில் வழங்கல்கள், வேட்பாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு வளங்களைப் பாவனைசெய்தல் தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்தன. இருப்பினும், அரச அதிகாரத்தையும் சொத்துக்களையும் கையாளல் தொடர்பில் 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒப்பீடாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்குரியதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை (21 முறைப்பாடுகள்) அதிகரித்துள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தல் 2014.11.21 ஆந் திகதியிலிருந்து 2014.12.07 ஆந் திகதி வரையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை – 05

2019 ஜனாதிபதித் தேர்தல் – 2019.09.27 ஆந் திகதியிலிருந்து 2019.10.14 ஆந் திகதி வரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை – 26

(சிறந்த போக்குகள்)

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புச்செய்யப்பட்ட திகதியிலிருந்து (2019.09.18) இதுவரை எந்தவொரு வன்செயலும் அறிக்கையிடப்படாமை இத்தேர்தலின் சாலச் சிறந்த ஒரு பண்பாகும். அரசியல்வாதிகளும் தேர்தல் இயக்கமும் குறித்து பொதுமக்கள் ஓரளவு விழிப்புநிலையுடனும் முன்னேறிய அரசியல் கலாசாரமொன்றுடனும் இருக்கின்றனர் என்பதற்கான அடிப்படைப் பண்பை இது சுட்டி நிற்கின்றது. அதேபோல், எல்பிட்டிய உள்ளுர் அதிகாரசபைத் தேர்தலிலும் தேசிய அரசியல்வாதிகளுக்கு கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் உள்ளன. பிரதேச சபை வேட்பாளர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டுடன் தமது தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர். அதேபோல், தேர்தலை அடுத்த காலப்பகுதியிலும் இன்று வரை வெற்றியை அமைதியாக அனுபவிப்பதும் மிகச் சிறந்த ஒரு போக்காகும். சிறந்த அரசியல் கலாசாரமொன்றுக்கான ஆரம்பமாகும். இத்தகைய ஒரு நிலையை நாடு முழுவதிலும் பேண நடவடிக்கை எடுப்பது இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரதும் பொறுப்பாகும்.

(வரலாற்றில் அதிகூடிய எண்ணிக்கை வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் களத்தில்)

1982 தொடக்கம் இற்றை வரை இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் அனைத்தையும் விட அதிகூடிய எண்ணிக்கையான வேட்பாளர்கள் வேட்புமனுக்களைக் கையளித்த ஜனாதிபதித் தேர்தலொன்றை நாம் எதிர்நோக்கியுள்ளோம். எனினும், அவர்களில் உண்மையிலேயே தனது வெற்றிக்காக தமது அரசியல் அபிப்பிராயத்தை சமூகத்தின் முன் வைப்பதற்காகப் போட்டியிடுபவர்கள் எத்தனை பேர், வாக்காளர்களை தவறாக வழிநடாத்துவதற்காகவும் வேறு அரசியல் நோக்கங்களுக்காகவும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பதை ஆழமாக பரிசீலிக்க வேண்டும்.

1982, 88, 89 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கள் தவிர்ந்த ஏனைய எல்லா ஜனாதிபதித் தேர்தல்களிலும் அதிகூடிய எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட இரு வேட்பாளர்கள் தவிர்ந்த அனைத்து வேட்பாளர்களும் 2% க்கும் குறைந்த எண்ணிக்கையான வாக்குகளையே பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. ஆகையால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அநாவசியமான முறையில் அரசியல் தேவைகளுக்காக, தனிப்பட்ட ஆதாயங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தடுப்பதற்கு சட்டவாக்கங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறல்லாத பட்சத்தில், எதிர்வரும் தேர்தலிலும் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை நூறாகவும் அல்லது அதற்குக் கூடுதலாகவும் அதிகரிக்கலாம்.

ஏற்கனவே இந்த வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் ஊடாக பொதுமக்கள் பணம் 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்டதாக மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. அதேபோல் அச்செலவுகளுக்கு மேலதிகமாக எழக்கூடிய நடைமுறைப் பிரச்சினைகள் ஏராளமுள்ளன. வாக்கெடுப்பு நிலையத்தில் 70 க்குக் கூடுதலான முகவர்களை நியமிக்க நேரிடுதல், வாக்குச்சீட்டின் நீளம் அதிகரித்தல், வாக்கெண்ணுவதற்கு மேலதிகமான காலம் தேவைப்படுதல், வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கு இத்தகைய மிக நீளமான வாக்குச்சீட்டிலிருந்து தாம் விரும்பும் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஏற்படக்கூடிய அசௌகரியம் என்பன நடைமுறையில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளாகும்.

எவ்வாறாயினும், அரசியல் குறிகாட்டியொன்றுடன் அல்லது அபிப்பிராயமொன்றுடன் போட்டியிடும் தரப்பினருக்கு ஜனநாயக ரீதியாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு பாதுகாக்கப்படுகின்ற விதத்தில் குறித்த சட்டவாக்கம் இடம்பெற வேண்டும்.

(வேட்பாளர்களுக்கு விடுக்கும் ஒரு செய்தி)

தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களும் இலங்கையின் அரசுத் தலைவர், நிறைவேற்றுத்துறையின் பிரதானி, முதற் பிரசை பதவிக்குப் போட்டியிடுவதால், அத்தெரிவுச் செயன்முறையிலும் கௌரவத்தைக் காப்பது வேட்பாளர்களதும் ஒரு பொறுப்பாகும். தாங்கள் அரசுத் தலைவராவதற்கு பொருத்தமானவர் அல்லது பொருத்தமற்றவர் என்பது உங்கள் செயற்பாட்டின் அடிப்படையில் அதாவது தாங்கள் தங்கள் தேர்தலை நெறிப்படுத்தும் விதத்தின் அடிப்படையில் மக்கள் புரிந்துகொள்வர். ஆகையால், தேர்தல் சட்டத்தை அனுசரித்து தங்கள் பிரசார இயக்கத்தை முன்னெடுக்குமாறு நாம் உங்கள் அனைவரிடமும் வேண்டுகின்றோம். அதேபோல் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் பொலித்தீன் பாவனையைக் கைவிட்டு, சுற்றாடல் நட்புறவான தேர்தல் பிரசாரமொன்றை முன்னெடுத்துச் செல்லுமாறும் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் வழிகாட்டுநெறிகளுக்கமைய செயலாற்றுமாறும் வன்செயலை ஒழித்துக்கட்டுமாறும்; வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தேர்தலின்போது ஊழல் பழக்கங்களில் ஈடுபடுதல் அல்லது வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதைத் தவிர்க்குமாறும், இன மற்றும் மத குரோதத்தைப் பரப்பாமல் அத்துடன் அல்லது அதற்கு உடந்தையாக இராமல் இருக்குமாறும் அரச அதிகாரத்தை அல்லது அரச சொத்துக்களை முறைகேடான விதத்தில் தேர்தல் பிரசார இயக்கத்திற்கு பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறியத் தருகின்றோம்.

(வாக்காளர்களுக்கு விடுக்கும் ஒரு செய்தி)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் அவர்கள் ஏற்கனவே தேர்தல் சட்டங்களை மீறி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். எனினும், இந்நிலையை மாற்றுவதற்கு பிரஜைகள் என்ற ரீதியில் தங்களுக்கு மாபெரும் பலமுள்ளது. அதற்கு தாங்கள் தேர்தல் சட்டங்களையும் தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுநெறிகளையும் அறிவுறுத்தல்களையும் புறக்கணித்துச் செயற்படும் வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும். ஒருபோதும், வன்செயல் அல்லது வன்செயலைத் தூண்டக்கூடிய விடயங்களை விட்டும் ஒதுங்கியிருக்க வேண்டும். அதேபோல், தேர்தல் காலத்துள் தங்களுக்கு பௌதிக ரீதியான அல்லது உள ரீதியான இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அவ்வாறான இலஞ்சம் வழங்குவதன் ஊடாக வாக்குகளைப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் எவரும் உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் அல்லர்.

ரோஹண ஹெட்டிஆரச்சி
நிறைவேற்றுப் பணிப்பாளர்
பஃவ்ரல் அமைப்பு.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More