இலங்கை பிரதான செய்திகள்

நான் காட்டிக் கொடுத்தேனா? பிரபாகரன் அப்படி சொல்லவில்லையே….

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் காரணமாக, தமிழீழ தனிநாட்டு கோரிக்கை வலுவிழந்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.

பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை அடுத்து, இந்திய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பகைத்துக்கொண்டதாக கூறிய கருணா அம்மான், அதனூடாகவே தமிழீழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

தமிழீழப் போராட்டத்திற்கு முன்னர் இந்தியா ஆதரவை வழங்கிய போதிலும், விடுதலைப் புலிகளின் தவறுகள் காரணமாக இந்தப் போராட்டம் வெல்ல முடியாத ஒரு போராட்டமாக மாற்றம் பெற்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இனிவரும் காலங்களில் தனிநாட்டு கோரிக்கைக்கான போராட்டமொன்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறுகிறார்.

இலங்கை என்ற ஒருமித்த நாட்டிற்குள் ஒரு அதிகார பகிர்வு என்ற கோரிக்கைக்கு அமையவே தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட கருணா அம்மான், இனி ஒருமித்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்கான தீர்வே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான ​பொலிஸ், காணி உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்படுவதன் ஊடாக தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

இந்தியா, இலங்கை ஜனாதிபதித் தேர்தலை மிகவும் உண்ணிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்த கருணா, கடந்த காலங்களில் சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு நேரடியாக உதவிகளை வழங்கியமையினால், இந்தியாவிற்கு தொடர்ந்தும் இலங்கை மீது சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ, அவரது காலகட்டத்தில் மிக தெளிவாக இருந்ததாக கூறிய கருணா அம்மான், அதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை விடயத்தில் தலையீடு செய்வதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணப்பாட்டிலேயே இந்திய மத்திய அரசாங்கம் இருக்கின்றது எனவும் கருணா அம்மான் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் 40000 வீட்டு திட்டம் வழங்கப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை புனர்வாழ்வளிக்க இந்தியா உதவிகளை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், நிதியுதவிகளை வேகமாக வழங்கும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தை வகித்தமையினால், சீனா அரசாங்கத்தின் தேவை இலங்கைக்கு அன்று அத்தியாவசியமாக காணப்பட்டதாகவும் கருணா அம்மான் குறிப்பிட்டார்.

நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடனேயே அன்றைய இலங்கை அரசாங்கம் சீனாவுடன் கைகோர்த்ததே தவிர, இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகளை எதிர்ப்பதற்காக சீனாவுடன் இணையவில்லை எனவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை கடத்தும் ஒரு கட்சியாக மாற்றமடைந்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார்.

தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய போதிலும், தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு சக்தியாகவே அந்த கட்சி செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கம் இன்று வலுவிழந்துள்ளதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கூறுகின்றார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கோ அல்லது சஜித் பிரேமதாஸவிற்கோ ஆதரவை வழங்குங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதாக இருந்தாலும், கூட்டமைப்பிற்கு தற்போதுள்ள செல்வாக்கும் குறையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை நிறைவு செய்த இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரம் செய்ததை கூறிய கருணா அம்மான், அவ்வாறென்றால், பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏன் ஆதரவளிக்க மறுப்பு தெரிவிக்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

திட்டமிடப்பட்ட இனசுத்திகரிப்பிற்கான தாக்குதலாகவே தான், ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலை அவதானிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.

கொள்கை இல்லாத, நோக்கம் இல்லாத ஒரு தாக்குதல் என்ற அடிப்படையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனாலேயே இந்த தாக்குதலை திட்டமிட்ட இனசுத்திகரிப்பிற்கான தாக்குதல் என தான் கூறுவதாகவும் அவர் கூறினார்.

எந்தவித குரோதங்களும், எந்தவித தொடர்புகளும் இல்லாத அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தினால் விடப்பட்ட தவறுகளே இந்த தாக்குதலுக்கான காரணம் எனவும் அவர் கூறுகின்றார்.

பாதுகாப்பு தளர்த்தப்பட்டு, புலனாய்வு துறை, இராணுவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதாக கூறிய அவர், கோட்டாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே அதனை உறுதி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தான் காட்டிக் கொடுத்ததாக கூறும் விடயமானது, ஒரு தவறான விடயம் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கருணா அம்மான் காட்டிக் கொடுத்ததாக எழுப்பப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும் என்ற நோக்கத்துடன், நோர்வே போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் தான் ஒரு எண்ணத்தை கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தனது அந்த நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விருப்பமில்லை என கூறிய அவர், அதனால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தான் வெளியேறியதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அம்மான் மாத்திரமே காட்டிக் கொடுத்தார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், விடுதலைப் போராட்டம் தொடர்பில் அறியாத நடுவிலுள்ள சிலரே தான் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாக பிரசாரம் செய்து வருவதாகவும் கருணா தெரிவிக்கிறார்.

(பிபிசி)

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.