இலங்கை பிரதான செய்திகள்

வட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர்  கொலை –  தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி 

வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 எதிரிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைக்கு அமைய விளக்கத்தை நடத்துவதா அல்லது அவர்களை விடுவித்து விடுதலை செய்வதாக என்ற  தீர்க்கமான கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வரும் டிசெம்பர் 10ஆம் திகதி வழங்கவுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டில் இருதரப்பினருக்கு இடையே முறுகல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. கைகலப்பில் யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சேர்ந்தவரும் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டனோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 9 பேர் வரை சரண்டைந்தனர். மல்லாகம் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதனையடுத்து 6 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழான குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். முதலாவது எதிரிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இரண்டாவது எதிரி சார்பில் நளின் நான்காவது எதிரி சார்பில் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன்  முன்னிலையானார்கள்.

காவல்துறையினரின் பெரும் குற்றத் தகவல் புத்தகங்களில் நேரம் மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திள் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகள் – புலனாய்வு விசாரணைகளில் திரிபுபடுத்தல்கள் உள்ளன.

அதனால் இந்த வழக்கை விளக்கத்துக்கு எடுத்து நடத்துவதனால் நீதிக்குப் பங்கம் ஏற்படும் என்பதுடன் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது.

எனவே வழக்கை விளக்கத்துக்கு எடுக்காமல் எதிரிகளை விடுவித்து விடுதலை செய்யவேண்டும்”என்று குறிப்பிட்டு நீண்ட சமர்ப்பணத்தை முதலாவது எதிரி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார்.

பொலிஸாரின் பெரும் குற்றத் தகவல் புத்தகத்தில் 6ஆவது சந்தேகநபரிடம் 2015 மார்ச் 17ஆம் திகதி பெறப்பட்ட வாக்குமூலத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டதாக இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விளக்கத்தை மீள எடுப்பதற்கும் சாட்சிகள் அனைவரிடமும் மீளவும் சாட்சியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த மன்றில் விண்ணப்பம் செய்த எதிரிகள் தரப்புச் சட்டத்தரணிகள் தற்போது விளக்கத்தை நடத்தாது எதிரிகளை விடுவிக்க விண்ணப்பம் செய்கிறார்.

எதிரிகள் தரப்புச் சட்டத்தரணிகளின் விண்ணப்பத்துக்கு அமைவாக சாட்சிகளுக்கு அழைப்புக் கட்டளை சேர்ப்பிக்கும் உத்தரவு மன்றினால் வழங்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் தற்போது வழக்கை விளக்கத்துக்கு எடுக்கக் கூடாது என விண்ணப்பம் செய்கிறார்.

எனவே வழக்கின் விளக்கத்தை நடத்த மன்று கட்டளையிடவேண்டும்” என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் சமர்ப்பணம் செய்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் பதிவு செய்த மன்று, வழக்கின் கட்டளையை வரும் டிசெம்பர் 10ஆம் திகதி வழங்கப்படும் எனத் திகதியிட்டது. அத்துடன், அன்றைய தினத்துக்கு முன்னர் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருப்பின் சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியது  #வட்டுக்கோட்டை  #குடும்பத்தலைவர்  #கொலை  #யாழ்ப்பாணக்கல்லூரி #சென்.பற்றிக்ஸ்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap