இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

கோத்தாபய வெற்றி பெற உதவிய தரப்புகள் – நிலாந்தன்…

கோத்தாபய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அப்படி ஒரு வெற்றியை பெறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கடைசி கட்டத்தில் சஜித் பிரேமதாச மேற்கொண்ட பிரச்சார உத்திகள் காரணமாக இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது என்று செய்திகள் வெளிவந்தன.

எனினும் சிங்கள ஆசிரியர்கள் மத்தியில் வேலை செய்யும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரமுகர் ஒருவர் கோத்தபாயதான் வெற்றிபெறுவார் என்பதனை முன்கூட்டியே கூறியிருந்தார். அதுபோலவே சிங்கள மக்கள் மத்தியில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களும் அவ்வாறு கூறியிருந்தார்கள். கிழக்கில் நடந்த ஒரு சந்திப்பில் பங்குபற்றிய மட்டக்களப்பு சிவில் சமூகங்களின் பிரமுகர் ஒருவர் அதை ஏற்கனவே கூறியிருந்தார். தெற்கில் நடந்த ஒரு சந்திப்பில் பங்குபற்றிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் கோட்டபாய வெல்வார் என்று கூறியிருக்கிறார்கள்.

இவ்வாறு கோட்டாபய மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசவை வெல்வதற்கு காரணம் என்ன?

முதலாவது காரணம் மிகவும் வெளிப்படையானது. யுத்த வெற்றி வாதத்தின் ஒரு நாயகன் அவர். 2009 மே மாதம் அவரும் அவரது சகோதரர்களும் சிங்கள மக்களுக்கு பெற்றுக் கொடுத்த வெற்றி எனப்படுவது நிகரற்றது. அந்த வெற்றியை முதலீடாகக் கொண்டு அந்த குடும்பம் ஒரு கட்சியை கட்டியெழுப்பி விட்டது. அதுதான் தாமரை மொட்டு கட்சி. அதாவது யுத்த வெற்றி வாதம் இப்பொழுது நன்கு நிறுவனமயப்பட்டு விட்டது. யுத்த வெற்றி வாதம் எனப்படுவது சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் 2009 இற்குப் பிந்திய வளர்ச்சிதான். பெரும்பாலான தேர்தல்களில் அது ஒரு பலமான முதலீடு. இம்முறை கோத்தாபயவுக்கு நிகராக சஜித் பிரேமதாச நிற்க முடியாமல் போனதுக்கு பிரதான காரணமே கோத்தாபாய யுத்த வெற்றி நாயகன் என்பதுதான்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். யுத்த வெற்றி வாதம் ஒரு தேர்தல் முதலீடு என்றால் ராஜபக்சக்கள் எப்படி 2015ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார்கள்? உண்மையில் சிங்கள-பௌத்த வாக்காளர்களை பொறுத்தவரை 2015ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் தோற்கடிக்கப்படவில்லை. மைத்திரிபால சிறிசேன் கட்சியை இரண்டாக உடைத்த காரணத்தால் யுத்த வெற்றி வாதம் தற்காலிகமாகப் பலவீனமடைந்து. இது ஒரு காரணம். மற்றொரு காரணம் தமிழ் முஸ்லிம்கள் மலையக வாக்குகள் ஒரு கொத்தாகத் திரண்டு ராஜபக்சக்களுக்கு எதிராக விழுந்தமை. இவ்விரு காரணங்களினாலுமே ரணில் மைத்திரி கூட்டு வெற்றி பெற்றது. எனினும் அடுத்து வந்த கூட்டுறவு சபைகளுக்கான தேர்தலில் ராஜபக்சக்களே பெருவெற்றி வெற்றி பெற்றார்கள். அந்த வெற்றியைக் கண்டு அஞ்சியே ரணில் மைத்திரி அரசாங்கம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பல மாதங்கள் ஒத்திவைத்தது. முடிவில் தேர்தலை வைத்த பொழுது அதில் ராஜபக்சக்களே பெரு வெற்றி பெற்றார்கள். அதன் விளைவே ஒக்டோபர் ஆட்சிக் குழப்பம். எனவே யுத்த வெற்றியானது ராஜபக்ஷக்களுக்கு மிக நீண்ட காலத்துக்கு ஒரு முதலீடாகவே இருக்கும.

இரண்டாவது காரணம் ஈஸ்டர் குண்டு வெடிப்பு. குண்டு வெடிப்பினால் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் யுத்த கால நினைவுகளை மறந்திருந்த சிங்கள மக்களுக்கு மறுபடியும் பயப் பிராந்தி ஏற்பட்டது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு சிங்கள மக்களுக்கு பழைய யுத்த ஞாபகங்களை நினைவூட்டியது. அச்சம் கலந்த அந்த நினைவுகள் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த குடும்பத்தின் மீதான சாதாரண சிங்கள மக்களின் மதிப்பை மேலும் உயர்த்தியது. ஓர் உறுதியான மனிதன்தான் இதுபோன்ற அச்சங்களில் இருந்து தம்மை விடுவிப்பார் என்று சாதாரண சிங்கள மக்கள் நம்பத் தொடங்கினார்கள். எனவே ஓர் இரும்பு மனிதனே தலைவனாக வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஏற்கனவே போரை வெற்றி கொண்ட கோத்தாபய ராஜபக்ச அவர்களுக்கு கண்ணுக்கு முன் தெரிந்த ஒர் இரும்பு மனிதன். எனவே அவரையே தெரிந்தெடுத்தார்கள்.

இது விடயத்தில் கோத்தபாயவை தெரிவு செய்தது சிங்கள பௌத்த வாக்காளர்கள் மட்டுமல்ல. கூடவே சிங்கள கிறிஸ்தவ வாக்காளர்களும் ஒரு தொகை தமிழ் முஸ்லிம் வாக்குகளும் தான் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் சிங்கள கிறிஸ்தவ வாக்குகள் யு,என்.பி.யின். பாரம்பரிய வாக்குகளாகும். ஆனால் ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின் அந்த வாக்குகளில் ஒரு தொகுதி தாமரை மொட்டை நோக்கிச் சாய்ந்து விட்டது.

மேலும் தேர்தல் பிரச்சாரக் களத்தில் தனிச் சிங்கள வாக்குகளால் வெல்வதற்காக ராஜபக்ச குடும்பம் ஓர் இனவாத அலையை உற்பத்தி செய்தது. இந்த இனவாத அலையானது தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானது. ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான நிலைமைகள் அவ்வாறு ஓர் இனவாத அலையை உற்பத்தி செய்வதை இலகுவாக்கிக் கொடுத்தன. அதன் விளைவாக அதிகபட்சம் தனிச் சிங்கள வாக்குகளால் தாமரை மொட்டு வெற்றி பெற்றது. இது இரண்டாவது.

மூன்றாவது யுஎன்பிக்குள் காணப்பட்ட பிளவு. சஜித் பிரேமதாசவை அரை மனதோடு தான் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்தார். கட்சிக்குள் காணப்பட்ட உயர் குழாம் சஜித் பிரேமதாசவை அங்கீகரிக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் முழுமனதோடு ஈடுபடவில்லை. மேலும் சஜித் பிரேமதாசவை கடைசி நேரத்தில்தான் ரணில் ஏற்றுக்கொண்டார். அதனால் சஜித் பரப்புரை செய்வதற்கு காலம் போதவில்லை. இவ்வாறாக சொந்த கட்சிக்குள்ளேயே காணப்பட்ட ஒற்று மையின்மையும் ஆதரவின்மையும் சஜித் பிரேமதாசவை பலவீனப்படுத்தின. இதுவும் கோத்தபாயவுக்கு நிகராக நின்று பிடிக்கும் பலத்தை அவருக்கு கொடுக்கவில்லை. இவ்வாறு எதிர்த்தரப்பு பலவீனமாக காணப்பட்ட ஒரு சூழல் தாமரை மொட்டுக்கு சாதகமாக மாறியது.

நான்காவது காரணம் கூட்டமைப்பின் அறிவிப்பு என்று கூறப்படுகிறது. இதை ஒரு முதன்மை காரணமாக எடுக்க முடியாது. தேர்தலுக்கு இரண்டு கிழமைக்கு முன்னரே கூட்டமைப்பு சஜித்துக்கு தனது ஆதரவை அறிவித்தது. அதற்கு முன்னரே 13 அம்சங்கள் அடங்கிய ஆவணம் வெளிவந்து விட்டது. இந்த இரண்டையும் சுட்டிக்காட்டி ராஜபக்ச தரப்பு இனவாத அலையை உற்பத்தி செய்தது என்று தென்னிலங்கை விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கூட்டமைப்பு அவ்வாறு அறிவிக்காமல் விட்டிருந்தாலும் சஜித் வெற்றி பெற்றிருப்பாரா? நிச்சயமாக இல்லை. யுத்த வெற்றி வாதம் எனப்படுவதே இனவாதத்தின் 2009க்கு பின்னரான புதிய வளர்ச்சிதான். யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்குவது என்பது எல்லாவிதத்திலும் ஓர் இனவாத அலைக்குத் தலைமை தாங்குவதுதான். குறிப்பாக ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் அந்த இனவாத அலையை முஸ்லிம் மக்களுக்கும் எதிராக விரிவுபடுத்த கூடியதாக இருந்தது. எனவே இனவாத அலை எனப்படுவது 13 அம்சங்கள் அடங்கிய ஆவணம் காரணமாகவோ அல்லது கூட்டமைப்பின் ஆதரவு நிலைப்பாடு காரணமாகவோ திடீரென்று உற்பத்தி செய்யப்பட்ட ஒன்று அல்ல. அது ஏற்கனவே இருந்த ஒன்றுதான.; அதில் மேற்படி இரண்டு அம்சங்களும் ஏதும் மேலதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம.; இல்லையென்றாலும் கூட இனவாத அலைக்கு வேறு ஒரு காரணத்தை அவர்கள் கண்டுபிடித்து இருப்பார்கள்.

ஐந்தாவது காரணம் ஜேவிபி. கடந்த 2015 தேர்தலின் போது ஜேவிபியின் வாக்குகள் ராஜபக்சவுக்கு எதிராக பொது எதிரணிக்கு விழுந்தன. ஆனால் இம்முறை அந்த வாக்குகள் தனித்துப் போய் விட்டன. இது சஜித்தின் வாக்கு வங்கியை பாதித்தது. எனினும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஜேவிபி இம்முறை குறைந்தது எட்டு லட்சம் வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் அரைவாசியைத்தான் பெற்றது. ஏனெனில் தாமரை மொட்டு தோற்றுவித்த இனவாத அலைக்குள் ஜேவிபிக்கு ஆதரவாக காணப்பட்ட கடும்போக்குச் சிங்கள வாக்குகள் அள்ளுண்டு போய்விட்டன. எப்படித் தமிழ் மக்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், மஸ்தான், பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோரின் வாக்குகள் ராஜபக்ச எதிர் அலைக்குள் கரைந்து போயினவோ அப்படி.

ஆறாவது காரணம்-மைத்திரி. அவர் 2015இல் செய்யப்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவுகளைக் கவிழ்த்துக் கொட்டினாhர். அதன்மூலம் மகிந்தவின் வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தார்.

மேற்கண்ட ஆறு பிரதான காரணங்களே கோத்தபாய வெற்றி பெற உதவின. இப்படிப் பார்த்தால் அவர் பின்வரும் தப்புப்புகளுக்கு நன்றி கூற வேண்டியிருக்கும். முதலாவது விடுதலைப் புலிகள் இயக்கம். 2005ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தது அந்த இயக்கத்தின் நகர்வுதான். இரண்டாவதாக அவர் சஹ்ரானுக்கு நன்றி கூறவேண்டும். ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஏற்படுத்திய புதிய சூழல்தான் தாமரை மொட்டின் இனவாத அலையை புதுப்பித்து பெரிதாக்க உதவியது. மூன்றாவது ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் நன்றி கூற வேண்டும். ஏனெனில் ரணிலும் சஜித் பிரேமதாச தோற்க வேண்டும் என்று எதிர் பார்த்தார.; நாலாவது ஜே.வி.பி. அதுவும் வாக்குகளை வெட்டி எடுத்தது. ஐந்தாவதாக கூட்டமைப்பு. அந்தக் கட்சியும் மறைமுகமாக சஜித்தை தோற்கடித்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆறாவது மைத்திரி.

இவ்வாறு மேற்கண்ட ஆறு தரப்புக்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கோட்டாபய வெற்றி பெற உதவியுள்ளன. தனக்கு கிடைத்த வெற்றியைத் தானே எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். யுத்த காலத்தில் அவருடைய நிர்வாகத்தின் கீழ் ஒரு படைப் பிரதானியாகயாக இருந்தவரும் முன்னாள் படைத் தளபதியும் நடந்து முடிந்த தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆகிய மகேஷ் சேனநாயக தேர்தல் வெற்றி குறித்து பின்வருமாறு கூறியிருக்கிறார் ‘இந்தத் தேர்தலில் வெற்றி அடைந்தவரைப் பார்க்கவேண்டுமானால், தொலைக்காட்சிக்கு முன்னால் செல்லுங்கள். தோல்வியடைந்தவரைப் பார்க்கவேண்டுமென்றால், கண்ணாடிக்கு முன் நில்லுங்கள்.’

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.