இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

மலையகத்தில்  நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு -நுவரெலியா மாவட்டத்தில் 92 பேர் இடம் பெயர்வு

(க.கிஷாந்தன்)

மத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக கடுமையான மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக 01.12.2019 அன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.

அந்தவகையில் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுவதோடு, மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது.

அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

நுவரெலியா மாவட்டத்தில் 92 பேர் இடம் பெயர்வு

நுவரெலியா  மாவட்டத்தில் அதிக மழையுடான சீரற்ற வானிலை காரணமாக (30) அன்று மாலை 5 மணிமுதல் (01) அன்று மாலை 4 மணிவரையிலான காலப்பகுதியில்  92 பேர் இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில்  தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மழை வெள்ளம் மற்றும்  மண்சரிவு காரணமாக வலப்பனை மற்றும்  கந்தப்பளை  பிரதேசத்தில் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாக மத்திய நிலையம்  சுட்டிக்காட்டியுள்ளது.

பொகவந்தலாவை, நோர்வூட், அக்கரப்பத்தனை, டயகம,   மற்றும் மாகாஸ்தோட்ட ஆகிய பகுதிகளிலும் வெள்ளநீர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விவரங்கள் அவ்வப்பகுதி கிராமசேவகரிடத்தில் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான வீதிகளில் மண்சரிவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளதாகவும் மண்களை அகற்றும் பணிகள் முன்னடுக்கப்பட்டு வருவதுடன் , ஆற்று ஓரங்கள் மற்றும்  மண்மேட்டு பகுதிகளில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறும் பாதிப்புகள் ஏற்படும் நிலை கண்டறியப்பட்டால் அவ்வப்பகுதி கிராமசேவகர்கள் ஊடாக இடர் முகாமைத்துவ மத்திய  நிலையத்தின் கவனத்திற்கு கொண்டுவரும்படி வேண்டுகோள்  விடுப்பதாகவும் நுவரெலியா இடர்பாடுகள் முகாமைத்துவ உதவி  பணிப்பாளர்  தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.