Home இலங்கை “அறிக்கை மேல் அறிக்கை விட நாம் கூட்டமைப்பு இல்லை”

“அறிக்கை மேல் அறிக்கை விட நாம் கூட்டமைப்பு இல்லை”

by admin

அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டு நாம் மீண்டும் ஒரு வரவு செலவுத்திட்டத்தை மாற்றியமைத்து அதனை ஆதரிப்பதற்கு நாம் ஒன்றும் தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ அல்ல என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் பாதீட்டை எதிர்த்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்த அறிக்கையிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாநகர முதல்வர் பாதீட்டினை ஆராயமல் திருத்தங்களை மேற்கொள்ளாமல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி சார்பாக எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் 2020 ஆண்டு பாதீட்டினை கண்மூடித்தனமாக எதிர்த்தது என்ற தெனிப்பட தெரிவித்திருந்தார்.

முதல்வர் கூறிய கட்சி சார்பாக எடுக்கப்பட முடிவு இதுவென்றால்; 2019 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த கன்னி பாதீட்டினையும் அரசியல் காழ்புணர்ச்சியில் நாங்கள் தொடந்தும் எதிர்த்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அன்றைய பாதீட்டில் ஈ.பி.டி.பி தொடந்தும் மௌனம் காக்க ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இரண்டு மூன்று உறுப்பினர்களைத் தவிர ஏனையோரும் மௌனம் காக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அதில் பல திருத்தங்களைச் செய்து ஆதரித்ததற்கு முக்கிய காரணம் குறித்த பாதீடு வினைத்திறனாக மாற்றியமைக்கப்பட்டு செயல்வடிவம் பெறவேண்டும் என்பதற்காக மட்டும் தான்.

எந்த ஒரு ஆரம்பமும் ஒரு புள்ளியில் இருந்து தான் ஆரம்பிக்கவேண்டும் அந்த ஒரு புள்ளியாக 2019 ஆம் ஆண்டு பாதீட்டினை நாங்கள் கருதினோம். அதனால் ஆளும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை விட கூடிய கரிசனை நாம் அதில் எடுத்திருந்தோம். அதற்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் திண்மக்கழிவகற்றல் பொறிமுறைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பலவற்றை நிபந்தனையாக வித்திதோம் அதனை ஏற்றுக்கொண்டதன் பிரகாரம் எமது பூரண ஆதரவினை வழங்கினோம்.

எனது 2019 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் உரையில் கூட பாதீட்டினை அலசி ஆராயாமல் விவாதிக்காமல் அதனை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ ஏற்புடையது அல்ல. அதே நடைமுறையே இப் பாதீட்டில் நாம் பின்பற்றினோம். மக்கள் நலன் சாராத பாதீட்டை எதிர்த்த நாம் தொடர்ந்தும் அதனை எதிர்க்காமல் ஒரு மக்கள் நலன் சார்ந்த வினைத்திறனான பாதீடாக மாற்றியமைத்துள்ளோம். அத்துடன் தேர்தல் காலத்தில் நாம் முன்வைத்த தூயநகரம் தூயகரங்கள் என்ற செயற்றிட்டத்தினை செயற்படுத்துவதற்கு முதற்கட்டமாக 30 மில்லியன் ரூபா ஒதுக்கியதன் அடிப்டையிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 2019 ஆம் ஆண்டு பாதீட்டினை ஆதரிக்கின்றது என்று தெரிவித்திருந்தேன்.

அந்தவகையில் நிபந்தனைகளுடன் அதனை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 2019 ஆம் பாதீட்டுக்கு நாங்கள் ஆதரவு நல்கினோம். ஆனால் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகள் அவ்வாறே இருக்கும் நிலையில் அவை செயல் வடிவம் பெறதா நிலையில் எந்த அடிப்படையில் எந்த நம்பிக்கையில் 2020 ஆண்டு பாதீட்டினை நாம் ஆராய்வது அல்லது ஆதரிப்பது?

தமிழரசுக் கட்சி அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் காழ்புணர்ச்சிகளை கடந்த காலங்களில் எம்மீது காட்டியிருந்தாலும் மக்கள் நலன்சாராத விடயங்களை விடுத்து ஏனையவற்றை அரசியல் காழ்புணர்ச்சிகளால் நாம் என்றைக்கும் எதனையும் எதிர்த்தது கிடையாது. அது கௌரவ முதல்வர் அவர்களுக்கும் புரிந்திருக்கும். இதற்கு நல்ல உதாரணம் மணிவண்ணன்.

மணிவண்ணன் அவர்களை மாநகர சபையின் அரசியில் அரங்கில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக தமிழரசுக் கட்சி எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தெரிந்திருந்தும். யாழ்.மாநகர சபையில் விதிவிடம் தொடர்பாக கேள்விக்கு உட்படுத்தபடவேண்டியவர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் இன்றும் சபையில் இருந்தும் கூட அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஏதோ சட்டம் ஒழுங்கு ஜனநாயம் என்ற பெயரில் மணிவண்ணன் மீது மட்டும் வழங்கு தாக்கல் செய்த தமிழரசுக் கட்சியின் சதி அரசியல் பற்றியும் அதில் யார் யார் எவ்வாறு செயற்பட்டார் என்பது பற்றிய முழுவிபரங்களும் தெரிந்திருந்தும். மணிவண்ணனை மாநகர சபையைவிட்டு விலத்த வேண்டும் என்று அவர்கள் கட்சி சார்பாக எடுத்த முடிவற்கு ஏற்ப அவர்கள் செயற்பட்டாலும் அதற்கு பழிவாக்குவற்கு அல்லது பாடம் படிப்பிப்பதற்கு நாம் எண்ணாமல் 2019 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தை எமது கூடிய கரிசணையுடன் ஆதரவளித்து நிறைவேற்றினோம்.

அதன் பிற்பாடும் எங்களுடைய மக்களின் நலவாழ்வுக்காக பலவேறு திட்டங்களில் முதல்வர் அவர்களுடன் இறுகக் கைகோர்த்து நடந்தோம். யாழ்.மாநகர சபை கட்டிடத்திற்கான செலவுகளை ஏதோ ஒரு காரணங்களை காட்டி ஒரு கட்சி நிராகரிக்க நாம் எமது மாநகரத்தில் அந்த கட்டிடம் வரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அதனை ஏற்றுக்கொண்டு ஆதரித்து கருத்தும் தெரிவித்திருந்தோம்.

மாநகரம் முழுவதும் குப்பைகள் கிடந்தால் அது ஆளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்ற எண்ணத்துடன் குப்பை அரசியல் செய்யவில்லை. இதை முதல்வர் அவர்களும் தெரிவித்தும் இருக்கின்றோம்

எமது முக்கிய கோரிக்கையான திண்மக்கழிவகற்றல் பொறிமுறைக்கு 30 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டும் அதை செயற்படுத்துங்கள் என்று 2 முறை பிரேரணை மூலம் கேட்டும் இருந்தோம். ஆனால் அததை செயற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மேலதிக நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லாமல் யாழ்.மாநகர சபையில் தற்போது உள்ள வளங்களை மட்டும் பயன்படுத்தி பகீர்தளித்து ஒரு திண்மக்களிவகற்றல் பொறிமுறையை உருவாக்கி செயற்படுத்தினோம். ஆக அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நாங்கள் எமது மாநகரத்தை முன்னேற்றகரமான பாதையில் இட்டுச் செல்லும் உறுப்பினர்களாகவே செயற்பட்டோம்.

அடுத்து முதல்வர் அவர்கள் கூறியது மாநகரத்தில் நடைபெற்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பானது

யாழ்.மாநகரத்தில் அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் நடைபெற வில்லை என்று நாம் கூறவில்லை. எத்தனையோ அரச திணைக்களங்கள் தங்களுடைய நிதிஒதுக்கீடுகளின் பிரகாரம் பல வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளகின்றன. ஆனால் அவை எல்லாவற்றiயும் 2019 ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் முன்னேற்றகரம் என்று காட்டுவது ஏற்புடையதா?
முதல்வர் தனது வரவு செலவத்திட்ட உரையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கம்பரலியாவில் செய்யப்பட்ட வேலைகள் தொடர்பாக உரையாற்றினார்

கம்பரலியா அது எவ்வாறு எதற்காக கிடைத்தது என்பது இங்கு விவாதத்துக்குரியது அல்ல. அது எவ்வாறாகவே இருந்து விட்டுப் போகட்டும் மக்களுக்கு நன்மை பயக்கின்ற எல்லா அபிவிருத்தி திட்டங்களும் ஏற்புடையது தான். ஆனால் கம்ரலியாவும் 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு என்ன சம்மந்தம் என்பதே இங்குள்ள வினா?

ஏன் என்னில் ஆரம்பதில் இவ் கம்பரலியா செயற்றிட்டங்கள் தொடர்பில் சபையில் விவாதிக்க வேண்டும் என்றும் அச் செயற்றிட்டங்களை சபை அங்கீகரிக்க வேண்டும் என்றும் சபைக்கும் உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்த போத அதற்கு முதல்வர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

கம்பரலியா பற்றி இங்கு எந்த விவாதத்தையும் செய்ய முடியாது என்றும் அதற்கும் யாழ்.மாநகர சபைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் அதற்கு சபையின் அங்கீகாரம் பெறத் தேவையில்லை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது என்றும் கூறப்பட்டது. உறுப்பினர் தர்சனாந் ஒரு படி மேலே சென்று யாழ்.மாவட்ட ஒருங்கிணப்பு குழு கூட்டத்தில் கூட கம்பரலியா செயற்றிட்டம் பற்றி விவாதிக்க முடியாது அவ்வாறு இருக்கையில் எவ்வாறு யாழ்.மாநகரசபையில் அது பற்றி எவ்வாறு விவாதிக்க முடியும் என்றார்.

கம்பரலியா செயற்றிட்டங்கள் பற்றி சபையில் விவாதிக்க முடியாது செயற்றிட்டங்கள் பற்றி சபைக்கு தெரியப்படுத்தப்பட முடியாது. கம்பரலியாவுக்கும் யாழ்.மாநகர சபைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் 2019 ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்னேற்ற அறிக்கை பற்றி கேட்கும் போது கம்பரலியாவில் செயற்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களை கூறுவது எந்த அடிப்படையில் நியாயமானது?

யாழ்.மாநகரசபையில் திருத்தங்களுடன் நாம் அங்கீகரித்தது 2019 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தை மட்டுமே அவ் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளுக்கு என்ன நடந்தது என்ற அறிக்கையே தேவை அதை விடுத்து வேறு அபிவிருத்தி திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டவையை முன்வைப்பது வரவு செலவுத்திட்டத்தின் முன்னேற்ற அறிக்கையாகுமா?

முதல்வர் அவர்கள் கூறியது போல் 2020 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் நாம் எந்த திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை. ஏன் எனில் 2019 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பல மாற்றங்களையும் திருத்தங்களையும் மேற்கொண்டு அப் பாதீட்டினை வினைத்திறனாக மாற்றியும் அது செயல் திறன் அற்று நன்றாக மூடி வைக்கப்பட்ட வெறும் காகித கட்டுக்களாக வெறும் வார்த்தைகளிலும் தொகைகளாகவும் இருக்கும் போது எதன் அடிப்படையில் எந்த நம்பிக்கையில் 2020 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது. கடந்த வரவு செலவுத்திட்டத்தை மறந்து விட்டு இவ் வரவு செலவுத்திட்டத்தில் நாம் மாற்றங்களை மேற்கொண்டு இருக்கலாம் அவ் மாற்றங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்டு சேர்த்தும் இருப்பார்கள் ஆனால் செயல் வடிவம் பெற்றிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம். எந்த ஒரு மனிதனும் தவறு செய்ய கூடும் ஆனால் முட்டாளைத் தவிர வேறு எவனும் அதனைத் தொடர்ந்து செய்ய மாட்டார்கள்.

அத்துடன் சிமாட் லாம் போலாக இருக்கட்டும் தனியாரினால் அபகரித்த வீதியாக இருக்கட்டும் அவ்வாறு பல விடயங்கள் தொடர்பில் பல தடவைகள் சபையில் அதற்கான தீர்வினைக் கேட்டும் வெறும் வார்த்தைகளோடும் விடயங்கள் முடிவுக்கு வந்தன.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் எமது ஆதரவிற்காக நாம் கூறியவற்றை நீக்கினார்கள், மாற்றினார்கள், சேர்த்தார்கள் ஆனால் அதில் பெரும்பாலனவற்றை செயல்படுத்தவில்லை. இந்நிலையில் இன்னொரு வரவு செலவுத்திட்டத்திலும் அவ்வாறு நீக்கி, மாற்றி சேர்த்து எந்த நம்பிக்கையில் ஆதரிப்பது. நாங்கள் ஒரு பரீட்சைக்கு தோற்றுகின்றோம் அதற்காக படித்து பரீட்சை எழுதுகின்றோம் அதற்கான பெறுபேறு எங்களுக்கு கிடைக்காது என்றால் நாம் ஏன் அதனைச் செய்ய வேண்டும்.

எமது பேரம் பேசல்கள் மூலம் 2019 ஆண்டு பாதீட்டில் திருத்தங்களை செய்து ஆதரித்தோம். அதனைச் செயற்படுத்துவார்கள் என்று நம்பினோம். அதற்காக முதல்வர் முன்னால் சபையில் பிரஸ்தாபித்தும் இருந்தோம். ஆனால் செயல்வடிவம் பெறவில்லை. நாம் ஏமாற்றப்பட்டோம். இந் நிலையில் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் போல் தெரிகின்றது. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நாங்கள் தீர்க்கமான முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டு நாம் மீண்டும் ஒரு வரவு செலவுத்திட்டத்தை மாற்றியமைத்து அதனை ஆதரிப்பதற்கு நாம் ஒன்றும் தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ அல்ல. தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசியலில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதனை நாம் யாழ்.மாநகர சபையில் நிகழ்த்திக் காட்டியுள்ளோம்.

அதே வேளை 2019 ஆண்டில் பெறத்தவறிய வருமானங்களைப் பெற்றுக்கொள்ளவும் செய்யத்தவறிய செயல்திட்டங்களைச் செயற்படுத்தவும் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம். அவ்வாறு செயல்படுத்தினால் 2021 ஆம் ஆண்டு யாழ்.மாநகரசபை வரவு செலவுத்திட்டத்தினை பரீசீலினை செய்யவும் ஆதரிக்கவும் பின்நிற்க மாட்டோம். சிறந்த முடிவு அனுபவதில் இருந்தே கிடைக்கின்றது என்ற தத்துவம் இதற்கும் பொருந்தும். என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More