இலங்கை பிரதான செய்திகள்

தொலை நோக்குக் கொண்ட அரசியலின் அவசியம் – பி.மாணிக்கவாசகம்…

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இருப்பு மற்றும் அதன் அடுத்த கட்ட நிலைப்பாடு பற்றிய கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. காலத்துக்குக் காலம் இந்த நிலைமை ஏற்படுவது வழமை. இருப்பினும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியடைந்துள்ளதையடுத்து, எழுந்துள்ள இந்த நிலைமை முன்னைய நெருக்கடி நிலைமைகளிலும் பார்க்க வித்தியாசமானது. தீவிரமானது.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதை இந்த நாட்டின் சிறுபான்மையினர் விரும்பவில்லை. பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள ராஜபக்சக்களின் யுத்தகாலச் செயற்பாடுகளும், யுத்தத்தின் பின்னரான அவர்களுடைய எதேச்சதிகாரப் போக்குகளும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை சிதைத்திருந்தன.

தேர்தலின் மூலம் மீண்டும் அத்தகையதொரு நிலைமை உருவாகுவதை அவர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாகவே ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகக் களம் இறங்கிய சஜித் பிரேமதாசாவுக்கே வாக்களித்தனர். ஆனால் பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களின் வாக்குகளினால் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோத்தாபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றார். இதனை சிறுபானமை இன மக்கள் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்தது.

தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் தமிழ் மக்கள் சார்பில் வேட்பாளர்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இரண்டு பிரதான வேட்பாளர்களும் ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. அந்தக் கோரிக்கைகளைக் கேட்பதற்கும், அவை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்கும் அவர்கள் விரும்பவில்லை. ஒட்டுமொத்தமாக அவற்றை அவர்கள் நிராகரித்திருந்தார்கள். ஆனாலும் பொதுஜன பெரமுனவுக்குப் பதிலாக ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாகவே அமைந்தன.

தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபாய ராஜபக்ச சிறுபான்மை இன மக்களின் தலைவராகவும் பணியாற்றப் போவதாக உறுதியளித்த போதிலும், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுக்களைக் கைவிட்டு, அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கவனம் செலுத்த வேண்டும். இது விடயத்தில் தமிழ் மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் புறமொதுக்கிய நிலையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அவருடைய எதிர்கால திட்டங்கள் மற்றும் உடனடி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் என்பவற்றில் சிறுபான்மை இன அரசியல் கட்சிகளைக் கவனத்திற் கொள்ளவே இல்லை.

சிறுபான்மை சமூகங்களைப் புறக்கணித்த அவருடைய போக்கு சிறுபான்மை அரசியல் கட்சிகளை திரிசங்கு நிலைமைக்கே ஆளாக்கியுள்ளது. இத்தகைய ஒரு நிலைமையில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புக்களை ஏற்று தமிழ் மக்களின் அபிவிருத்திக்காகச் செயற்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைமைகள், பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள சூழல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, தமிழ்க்கட்சிகள் அனைத்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று புதிய அரசியல் மாற்றத்திற்கு முகம் கொடுப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதையே இந்த அழைப்பு அடையாளப்படுத்தி உள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலமுள்ளதோர் அரசியல் அமைப்பாக உருவாக்குவதற்கு ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைநை;து செயற்பட வேண்டும் என்று ஏற்கனவே பலரும் வலியுறுத்தி இருந்தனர். ஆயினும் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி அதனைக் கவனத்திற் கொள்ளவில்லை. கூட்டமைப்பைத் தனியானதோர் அரசியல் கட்சியாக அல்லது அமைப்பாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்ட போதிலும், சாக்கு போக்குகளைக் கூறி காலத்தைக் கடத்துவதிலேயே அது திவிரமாக இருந்தது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் அரசியல் அடையாளம். அவர்களின் அரசியல் சக்தி. இருப்பினும் அந்த அடையாளமும் சக்தியும் தமிழரசுக் கட்சியின் தனித்துவத்தைப் பேணுவதற்கும், அதனை வளர்ந்தோங்கச் செய்வதற்குமே கூட்டமைப்பின் தலைமை பயன்படுத்தி வந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னரும், கடும் அரசியல் நிலைப்பாட்டில் எதேச்சதிகாரப் போக்கைக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஓர் இணக்க நிலைமையைக் கொண்டிருக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குக் கூட்டமைப்பு இந்தியாவின் துணையை நாட வேண்டி இருந்தது. இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு மகிந்த அரசு முன்வந்தது. அந்தப் பேச்சுவார்த்தைகளையும் அரசியல் தீர்வு காண்பதாகப் போக்குக் காட்டுவதற்கே அரசு பயன்படுத்தியது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைத் தோற்கடித்து, நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் தமிழ் மக்கள் முழுமையாக ஒத்துழைத்து வாக்களித்திருந்தார்கள். கூட்டமைப்புக்கு அரசியல் ரீதியாக ஆட்சி மாற்றம் அவசியமாகி இருந்தது. ஆனால் தமிழ் மக்கள் இன்மேல் முடியாது என்ற அளவிலான இராணுவ கெடுபிடிகள் மிகுந்த ஓர் ஆட்சியின் கீழ் அனுபவித்த கஸ்டங்கள், துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காகவே ஆட்சி மாற்றத்தை விரும்பியிருந்தார்கள். கிட்டத்தட்ட இதேபோன்றதோரு நிலையிலேயே 2019 ஜனாதிபதி தேர்தலிலும் மக்கள் சஜித் பிரேதமதாசாவுக்கு வாக்களித்திருந்தார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அதன் ஊடாகத் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கத் தவறிவிட்டது. இணக்க அரசியல் போக்கின் மூலம் தமிழ் மக்களின் சின்ன சின்ன பிரச்சினைகளுக்குக் கூட தீர்வு காண்பதில் கூட்டமைப்பு வெற்றி பெறவில்லை.

நம்பிக்கையோடு வாக்களித்து வெற்றிபெறச் செய்த நல்லாட்சி அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லையே என்ற அதிருப்தி நிலைமைக்கு ஆளாகியிருந்த தமிழ் மக்கள், அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதும் வெறுப்படைந்திருந்தனர். ஆனாலும், கோத்தாபாயவுக்கு ஆதரவளிப்பதில்லை என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல்கால நிலைப்பாட்டுடன் ஒத்திசைவான நிலைப்பாட்டையே தமிழ் மக்களும் கொண்டிருந்தார்கள்.

தேர்தலின் பின்னரான நிலைமையானது, நல்லாட்சி அரசாங்கக் காலத்து நிலைமையைப் போன்றதல்ல. ஜனாதிபதி கோத்தாபாய சிறுபான்மை இன மக்களைப் புறந்தள்ளிச் செல்கின்ற அரசியல் போக்கையே கொண்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வை எட்டுவதற்கும் இந்த நிலைமை சாதகமற்றதாகவே காணப்படுகின்றது.

எனவே, இந்த சாதகமற்ற அரசியல் நிலைப்பாட்டில் தமிழ்த்தரப்பு – தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுதியான தலைமையின் கீழ் தமிழ் மக்கள் அணி திரண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது வெறுமனே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமையைக் குறிப்பிடுவதல்ல. இதுகால வரையிலும் இல்லாத உறுதியானதும், பங்காளிக் கட்சிகளுடனான இறுக்கமான உறவு நிலையைக் கொண்டதுமானதொரு கூட்டமைப்புத் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டியுள்ளது.

இந்தத் தேவையைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் நிறைவேற்ற முடியுமா, என்ற கேள்வி தவிர்க்க முடியாத நிலையில் இப்போது எழுந்துள்ளது. தற்போதுள்ள கூட்டமைப்பினால் இது சாத்தியமாகது என்பதே யதார்த்தமாகும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி தனது கட்சி நலன்களைக் கைவிட்டு, தமிழ் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி அதற்காக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை உண்மையான பங்காளர்களாக ஏற்றுச் செய்றபட முன்வர வேண்டும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய இரா.சம்பந்தன் பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர். சாணக்கியம் மிகுந்தவர். அவருடைய தலைமையின் கீழ் இதுநாள் வரையிலும் தமிழ் மக்கள் நம்பிக்கையோடு அணி திரண்டிருந்தார்கள். அரசியல் ரீதியாக நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.

அந்த அணி திரள்வுக்கும் அரசியல் நம்பிக்கைக்கும் சவால்கள் மிகுந்ததொரு காலமாகவே கோத்தாபாயாவின் எழுச்சி அமைந்துள்ளது. சிறுபான்மை இன மக்களின் அரசியல் அபிலாசைகளை அபிவிருத்தி அரசியலுடன் மட்டும் மட்டுப்படுத்துகின்ற அவருடைய அரசியல் போக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண உதவப் போவதில்லை.

குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்வை எட்டுவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தன்னைப் புனர் நிர்மாணம் செய்து கொள்ள வேண்டும். நான்கு ஐந்து கட்சிகளைக் கொண்டதாக இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போது இரண்டரைக் கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டாக மாறியுள்ளது என்று பரிகசிக்கின்ற நிலைமைக்கு அது ஆளாகியிருக்கின்றது.

தற்போதைய தேசிய அரசியலின் போக்கானது 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எவ்வாறு தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பின்னால் அணிதிரண்டிருந்தார்களோ அத்தகைய அணி திரள்வின் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றது. அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி ஓர் அரசியல் கட்சியாக இறுக்கமான கட்டமைப்பைக் கொண்டதாகத் திகழ்ந்தது. தமிழ் அரசியல் தலைவர்களை ஒன்றிணைத்து மக்களையும் அரவணைத்து பலமுள்ளதோர் அரசியல் சக்தியாகத் திகழ்ந்தது. அத்தகைய ஒரு திரட்சியே இப்போது அவசியமாகியுள்ளது.

வெறுமனே தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் வந்து சேருங்கள், வந்து இணைந்து கொள்ளுங்கள் என்பதற்கு அப்பால் பங்காளிக் கட்சிகளை உண்மையான பங்காளிகளாக ,ஏற்றுச் செயற்படுகின்ற தன்மையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக்கட்சி கொண்டிருக்க வேண்டும். இத்தகைய மாற்றம் இல்லாமல் வெறுமனே வருகின்ற பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி மேலெழுந்த நிலையில் வெற்றி பெறுவதற்கும், கூடிய எண்ணிக்கையிலான நாடாளுமன்ற ஆசனங்களை வென்றெடுப்பதற்குமான வெறும் கூட்டாகக் கூட்டிணைவதில் பயனிருக்க முடியாது.

அரசியலில் பலமுள்ள எதிரணி சக்தியாக பொதுஜன பெரமுன பரிணமித்திருக்கின்றது. ராஜபக்சக்களின் மேலோட்ட வலுவைக் கொண்ட அந்த அரசியல் சக்தியே சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய தேசிய கட்சியையும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களிலும், தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலிலும் மண் கவ்வச் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்த இரண்டு பழம்பெரும் தேசிய கட்சிகளையும் சின்னாபின்னமாக்கி அவற்றின் அரசியல் எதிர்காலத்தைச் சூனிய நிலைக்குள் தள்ளியுள்ளது.

அதேபோன்று நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன இறுக்கமான தீர்மானத்துடன் போட்டியிட்டதன் விளைவாகவே பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழ்த்தரப்பு தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற அரசியல் சிந்தனைக்குள் தள்ளியது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகிய டெலோவின் முக்கியஸ்தரும் சிரேஜ்ட உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியதனால், டெலோவுக்குள் பிளவு ஏற்பட நேர்ந்தது, இந்தப் பிளவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டிணைவில் பாதிப்பை ஏற்படுத்தவும் வழி வகுத்துள்ளது.

கடந்த காலங்களைப் போன்று பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் கை ஓங்கியிருக்குமானால் – குறிப்பாக வேட்பாளர்கள் தெரிவில் தன்னிச்சையாகவும், பிச்சிப் பிடுங்கிக் கொடுக்கின்ற போக்கிலும் கூட்டமைப்பின் தலைமை நடந்து கொள்ளுமேயானால், அது தேர்தலில்; பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது.

தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்குவதைத் தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கைகளிலேயே தங்கியுள்ளது.

மாற்றுத் தலைமைக்கான முயற்சி வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் பொதுமக்களுடைய தீர்மானத்தைப் பொறுத்திருக்கின்றது. அதற்கு முன்னதாக மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்ற அரசியல் கட்சிகள் பொதுவான அரசியல் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும்கூட எத்தகைய விட்டுக்கொடுப்புடன் அவைகள் ஒன்றிணையப் போகின்றன என்பது தெரியவில்லை.

கூட்டுத்தலைமையுடன் கூடிய ஒரு கட்டமைப்பாக மாற்றுத் தலைமை உருவாக வேண்டிய தேவை உள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் போன்று தனித்தலைவரைத் தலைமையாகக் கொண்டிருப்பது மாற்றுத் தலைமைக்கும் கூட்டமைப்புக்கும் எந்தவித வித்தியாசம் இல்லாத நிலைமையையே உருவாக்கும்.

தனித்தலைவராகத் திகழ்கின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது அரசியல் அனுபவத்தையும் ஆற்றலையும் மன உறுதியையும் தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டியது அவசியம். இதுகால வரையிலும் – குறிப்பாக கடந்த பத்து வருட காலத்திலும் அந்த கைங்கரியத்தை அவரால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

தற்போதைய தேசிய அரசியல் சூழல் அரசியல் தீர்வென்பது எட்டாக்கனியாகவே தோன்றுகின்றது. இருப்பினும் ராஜபக்சக்களின் அரசியல் மீள்பிரவேசத்தை சந்தேகக் கண்கொண்டு நோக்குகின்ற சர்வதேசத்தின் துணையுடன் அழுத்தத்தைப் பிரயோகித்து ஓர் அரசியல் தீர்வை எட்டக் கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.

இந்த அரசியல் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முனைய வேண்டும். கடந்த காலங்களைப் போலல்லாமல் சர்வதேச சக்திகளுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு தனது அரசியல் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அது கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அந்தக் கடின உழைப்பை மேற்கொள்வதற்கு தனியே தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மாத்திரம் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து செய்றபட்டால் மட்டும் போதாது.

அதன் பங்காளிக் கட்சிகளையும் இறுக்கமான ஒரு கட்டமைப்புக்குள் உள்வாங்குவதுடன், கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் – அனைத்து அரசியல் சக்திகளையும் உள்ளடக்கி அந்தக் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்.

இது அவசரமாக உடனடியாகச் செய்யப்பட வேண்டிய காரியமாகும். ராஜபக்சக்கள் தலையெடுத்துள்ள அரசியல் சூழலில் தமிழ்த்தரப்பின் இறுக்கமான ஒன்றிணைவும் அதன் பின்னால் தமிழ் மக்களின் ஏகோபித்த ஒன்றிணைவும் இடம்பெற வேண்டியது அவசியம்.

அடுத்து வரப்போகின்ற பொதுத்தேர்தலை நோக்கியதாக நாட்டின் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்த்தரப்பின் நோக்கமும், அரசியல் இலக்கும் பொதுத்தேர்தலைக் கடந்து தொலைநோக்கு கொண்டதாகவும் கட்சி அரசியல் நலன்களைக் கடந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முதன்மைப்படுத்தியதாகவும் அமைய வேண்டியது அவசியம்.

தற்போதுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் கட்சி அரசியல் நலன்சார்ந்த போக்குடைய தலைமையைக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் தமிழ் அரசியல் கட்சிகள் இணைவது என்பதிலும் பார்க்க அனைத்துக் கட்சிகளையும் சம நிலையில் கொண்ட சமவாய்ப்புக்களைக் கொண்ட நிலையிலான ஒன்றிணைவே அவசியம். அதனைச் செய்வதற்கான முன்னெடுப்புக்களை தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பே விட்டுக்கொடுப்புடன் கூடிய முன் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் அவசியமானது. காலத்தின் கட்டாயத் தேவையுமாகும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.