இலங்கை பிரதான செய்திகள்

ஐநா  சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும்

தம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்தபட்சமாக நிறைவேற்றப்படும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அ  தெரிவித்தார். “மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வது அவற்றுள் முதன்மையானதாகும். மற்றையது துரித பொருளாதார அபிவிருத்தியினூடாக சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த குறிக்கோள்களை அடைவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (19) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி   இதனைத் தெரிவித்தார். உலகின் முதற்தர வெளிநாட்டு ஊடக நிறுவனங்களில் உள்நாட்டில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்த ஜனாதிபதி  , அவர்களால் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக பெண் அலுவலர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதன்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் அலுவலர் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றுவதனால் சுவிஸ் தூதுவர் அவர் சார்பாக செயற்பட்டதில் தவறில்லை என்பதே தனது கருத்தாகும் என தெரிவித்த ஜனாதிபதி  , குறித்த பெண்ணால் குற்றஞ்சாட்டப்பட்ட வகையில் கடத்தல் சம்பவமொன்று ஒருபோதும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது மறுக்க முடியாத தொழிநுட்ப சாட்சியங்களினூடாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு கட்டுக்கதையாகும். இதனால் இருநாட்டு அரசாங்கங்களும் அதில் தலையிடாது முறையான சட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை பொறுப்பேற்ற கடந்த ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கத்தின் செயற்பணிகள் தொடர்பில் வினவப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி  , மக்களிடம் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார். “சிக்கலான வரி முறைமையினை நீக்கி அதனை எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மாற்றுதல் முதலாவது நடவடிக்கையாகும். உற்பத்தியின் போது செலுத்தப்படும் வரி நீக்கப்பட்டமை போன்ற சலுகைகள் வர்த்தக சமூகத்திற்கு பலமாகும். இந்த சலுகைகள் மக்களை சென்றடைவதும் உறுதிப்படுத்தப்படும்.“ எனவும் ஜனாதிபதி   தெளிவுபடுத்தினார்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கும் திட்டம் தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி  , வறுமை நிலையிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களிலும் குறைந்தது ஒரு நபருக்காவது வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே அதன் நோக்கமாகும் எனத் தெரிவித்தார். “இதற்கு பொருத்தமானவர்களை தேர்ந்தெடுக்கும்போது நிபுணத்துவமும் விசேட தொழிற் தகைமைகளும் அற்றவர்களுக்கே முன்னுரிமையளிக்கப்படும். வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தை பெற்றுக்கொடுப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி  , ஒரு அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை அடுத்துவரும் அரசாங்கத்தினால் இரத்து செய்வது நடைமுறை சாத்தியமற்றதாகும் எனக் குறிப்பிட்டார். “நாட்டிலுள்ள அனைத்து துறைமுகங்களும் இலங்கை அரசின் கீழ் செயற்பட வேண்டும் என்பதே எனது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அனைத்து துறைமுகங்களிலும் நாட்டிலுள்ள பொதுவான சட்டமே நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறும் அதேவேளை, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் அடிப்படை தேவையாகும்.” என்பதையும் ஜனாதிபதி  சுட்டிக் காட்டினார்.

ஐநா சபையின் மனித உரிமைகள் அமைப்பினால் இலங்கை தொடர்பில் எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதனால் தமது அரசாங்கத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

19வது அரசியலமைப்பு திருத்தம் பாரிய பிழையாகும் எனவும் நாட்டின் எதிர்கால பயணத்திற்கு அது பெருந்தடையாகும் என்பதையும் சுட்டிக் காட்டிய ஜனாதிபதி  , எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடாத்தப்படும் என குறிப்பிட்டார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவும் இந்த சந்திப்பில் பங்குபற்றினார்.  #மக்களின் #எதிர்பார்ப்புகள்  #ஜனாதிபதி #உறுதி  #கோட்டாபய #ஐநா    

 

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link